சிங்களவர் விரும்பும் தீர்வு?

இனநெருக்கடிக்கான ‘தீர்வு’ (?) எவ்வாறானதாக அமையும் என்பதை சிறிலங்கா அரசின் முக்கிய தலைவர்களான கோத்தாபய ராஜபக்‌ஷவும், மகிந்த ராஜபக்‌ஷவும் வெளிப்படையாகக் கூறிவிட்டார்கள். தனிச் சிங்கள வாக்குகளால்தான் தெரிவு செய்யப்பட்டவர் என்ற முறையில், சிங்களவர்கள் விரும்பாத எதனையும் தன்னால் வழங்க முடியாது என்பதை கோத்தாபய இந்தியாவில் வைத்தே சொல்லிவிட்டார். இப்போது “சிங்களவர்கள் விரும்பும் தீர்வையே தருவோம்” என மகிந்த ராஜபக்‌ஷ கூறியிருக்கின்றார்.

கோத்தாபய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற போதே இதுதான் நடைபெறும் என்பது வெளிப்படையாகவே தெரிந்திருந்தது. ஆனால், இந்தியாவும், சர்வதேச சமூகமும் அழுத்தம் கொடுக்கும் நிலையில் கூட, இராணுவ – பேரினவாத நிலைப்பாட்டில் இருந்துகொண்டுதான் இனநெருக்கடியை கோத்தாபய அணுகுவார் என்பதும், அதனை அவர் பகிரங்கமாகவே சொல்வார் என்பதும் ஆச்சரியமானதுதான். வழமையான “பேச்சுவார்த்தைகள்” மூலமாக ராஜபக்‌ஷக்களை இனிமேல் கையாள முடியாது என்பதை அவர்களுடைய அணுகுமுறை உணர்த்துகின்றது.

பாராளுமன்றக் கூட்டத் தொடரை ஆரம்பித்துவைத்து தனது கொள்கை விளக்க உரையை கடந்த வாரம் நிகழ்த்திய கோத்தாபய, இனநெருகடி குறித்தோ, இலங்கைத் தீவில் ஒரு தேசியப் பிரச்சினை இருப்பது குறித்தோ எதனையும் சொல்லவில்லை. அதாவது – அவரது நிகழ்ச்சி நிரலில் அதற்கான தீர்வு இருக்கப்போவதில்லை. தீர்வு இருக்கப்போவதில்லை என்றால் பேச்சுவார்தைகளுக்கான கதவுகளும் திறக்கப்போவதில்லை. கூட்டமைப்புத் தலைமைக்கு காத்திருப்பதைவிட வேறு தெரிவுகள் இருக்கப்போவதில்லை.

இரண்டு விடயங்களை மட்டுமே கோத்தாபய தனது கொள்கை விளக்கத்தில் வலியுறுத்தினார். ஒன்று – ஒற்றை ஆட்சியைத் தொடர்ந்தும் பாதுகாப்பேன். இரண்டு – பௌத்த மதத்துக்கான முன்னுரிமையைத் தொடர்ந்தும் பாதுகாப்பேன். இந்த இரண்டு விடயங்களிலும்தான் தனது திடசங்கற்பத்தை கோத்தாபய வெளிப்படுத்தினார். ஒற்றையாட்சி முறையைக் கடுமையாகப் பின்பற்றும் பௌத்த நாடாக இலங்கைத் தீவு இருக்கும் என்பதுதான் அவரது பிரகடனம். முன்னைய ஜனாதிபதிகளும் இதனைத்தான் செய்தார்கள். ஆனால், கோத்தா சற்று கடுமையாகச் செல்லப்போகின்றார் என்பது தெரிகின்றது.

கோத்தாவின் கொள்கை விளக்கத்துக்குப் பதிலளித்த சம்பந்தன் சொன்னது பழைய கதையாகத்தான் இருந்தது. “அதிகாரப் பகிர்வு குறித்து சிந்தித்தால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும். அப்போது தான் சர்வதேச முதலீடுகள், அபிவிருத்திகள் என அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்” என்ற சம்பந்தனின் கருத்து, கோத்தாவின் காதுகளுக்கு ஏறியிருக்காது. இவ்வாறான கதைகளைக் கேட்கும் மனநிலையிலும் அவர் இல்லை.

ஆனால், இதற்கு மகிந்த பதலளித்திருக்கின்றார். “சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தப்புக் கணக்குப் போடக்கூடாது. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு அபிவிருத்திதான் மிகவும் அவசியம். பொதுத் தேர்தலின் பின்னர் அரசியல் தீர்வுக்கான எமது பணிகள் ஆரம்பமாகும். மூவின மக்களுக்கும் சம உரிமையுடனான தீர்வை நாம் பெற்றுக் கொடுப்போம். அந்தத் தீர்வு சிங்கள மக்கள் விரும்புகின்ற தீர்வாக இருக்கும்” என்பதுதான் மகிந்தவின் பதில்.

சிங்கள மக்கள் விரும்புகின்ற தீர்வைத்தான் தருவோம் என்றால், பேச்சுவார்த்தை ஒன்றுக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இப்போதிருக்கும் நிலை இன்னும் மோசமடையலாம். அதாவது, சிறுபான்மையினருக்கு ஆபத்தான ஒரு நாடாக இலங்கைத் தீவு சென்றுகொண்டிருக்கின்றது என்பதை இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று, அரசியலமைப்பை தமது அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்கேற்றவாறு மாற்றியமைத்துக்கொள்வதுதான் ராஜபக்‌ஷக்களின் திட்டம். அதாவது ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நாடு செல்லப்போகின்றது. இதற்கான ஆணையை சிங்கள மக்கள் வழங்குவார்கள் என ராஜபக்‌ஷக்கள் எதிர்பார்க்கின்றார்கள். சர்வதேச சமூகம் இவ்விடயத்தில் எவ்வாறான எதிர்வினையாற்றப்போகின்றது?