Tamil News
Home செய்திகள் சம்பந்தன் அரசியலில் இருந்து ஓய்வு, தலைவர் பதவியில் குழப்பம்

சம்பந்தன் அரசியலில் இருந்து ஓய்வு, தலைவர் பதவியில் குழப்பம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தீர்மானித்ததையடுத்து, கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்படவிருப்பதால் கட்சிக்கிடையே குழப்பம் நிலவுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுமந்திரனை தலைவராக நியமிப்பதனால், கூட்டமைப்பு பிளவுபடும் நிலை தோன்றியுள்ளதாகவும் இதனாலேயே கூட்டணியில் இருந்து வெளியேறியவர்களை சேர்த்து ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினர் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று(06) முல்லைத்தீவில் தமிழர் ஐக்கிய முன்னணி அமைப்பின் அலுவலகத்தை திறந்து வைத்து கருத்துத் தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களை இணைத்தே புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் இரா. சம்பந்தன் அவர்கள் 1977ஆம் ஆண்டிலிருந்தே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். அத்துடன் 2001ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார். அத்துடன் இலங்கைப் பாராளுமன்றத்தில் அ.அமிர்தலிங்கத்திற்கு பின்னர் இரா. சம்பந்தன் அவர்களே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த தமிழர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version