சமூக ஊடகங்கள் தொடர்பான கைதுகள்; மனித உரிமை ஆணைக்குழு கவலை

இலங்கையில் கொவிட் 19 பரவல் காணப்படும் சூழ்நிலையில், சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் பலர் கைதுசெய்யப்பட்டிருப்பது குறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு பதில் காவல்துறை அதிபர் சிடி விக்கிரமரட்ணவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. குறிப்பிட்ட கடிதத்தில் ஆணைக்குழு தனது கரிசனைகளை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளிற்கு எதிராக பொய்யான அவதூறான தகவல்களை இணையத்தின் மூலம் பரப்புவோரிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை காவல்துறை ஊடக பிரிவு ஏப்பிரல் முதலாம் திகதி ஊடக நிறுவனங்களின் தலைவர்களிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்ததை தொடர்ந்து கைதுசெய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

காவல்துறை ஊடகப்பிரிவு ஏப்பிரல் முதலாம் திகதி வெளியிட்டிருந்த அந்த கடிதம் விமர்சனங்களை சகித்துக்கொள்ளப்போவதில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது என மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிக உடகம தெரிவித்துள்ளார்.

அவசரகாலநிலையில் கூட கருத்துசுதந்திரம்; உட்பட ஏனைய ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் சட்டத்தின் கட்டமைப்பிற்குள்ளேயே இடம்பெறவேண்டும் என்பதை சுட்டிக்காட்டவேண்டியது மனித உரிமை ஆணைக்குழுவின் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.

முழு நாடும் முன்னர் ஒரு போதும் சந்தித்திராத சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த தருணத்தில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, பொது ஒழுங்கிற்கும் சுகாதாரத்திற்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய தவறான தகவல்களை சட்டரீதியில் கட்டுப்படுத்தவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதாக இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

எனினும் அவ்வாறான கைதுகள் சட்டரீதியில் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக காணப்படவேண்டும் என தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு கைது நடவடிக்கைகள் தன்னிச்சையானவையாகவும்,அளவுக்கதிகமானவையாகவும் காணப்படக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

கைதுகளை பக்கச்சார்பான முறையில் முன்னெடுக்க கூடாது எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பல சட்டங்களை அடிப்படையாக வைத்தே இந்த கைதுகள் இடம்பெற்றதாக பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளதாக பதில் காவல்துறை அதிபர் சிடி விக்கிரமரட்ணவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தனிமைப்படுத்தும் கட்டளை சட்டம் மற்றும் பேரழிவு மேலாண்மை சட்டம் ஆகியவற்றை வைத்தும் கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தும் கட்டளை சட்டம் மற்றும் பேரழிவு மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் விதிமுறைகளை பயன்படுத்துவதற்கான சட்டபூர்வமான அடிப்படை சில காரணங்களிற்காக கேள்விக்குறியதாக காணப்படுகின்றது எனவும் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தினை செலுத்தக்கூடிய தவறான தகவல்களை கட்டுப்படுத்தவேண்டும் என்றால் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கைகளிற்கு சரியான சட்டபூர்வமான அடிப்படையிருக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.