சனநாயகத்தை விழுங்கும் தொழில்நுட்பம் – ந. மாலதி (கலாநிதி கணினி அறிவியல்)

247

தமிழில் artificial intelligence என்ற சொல்லுக்கான வார்த்தையை எமது வாசிப்பில் நாம் கண்பது அரிது. அகராதி இதை “செயற்கை நுண்ணறிவு” என்கிறது. “செயற்கை புத்தி” என்றும் சொல்லலாம். இங்கே “செயற்கை புத்தி” என்ற பதத்தையே கையாளுவோம். கணினி வளர்ச்சியின் ஆரம்ப காலமான 1950களில் இருந்தே செயற்கை புத்தி பற்றி ஆய்வாளர்கள் பேசி வந்திருக்கிறார்கள். 1970களில் கணனி பாவனை அதிகரித்த பின்னர் இதுபற்றி மேலும் பரவலாக பேசப்பட்டது.

1990களில் செஸ் விளையாடும் ஒரு கணனி மென்பொருள் அக்காலத்திய உலக செஸ் சம்பியளை தோற்கடித்ததது. இங்கிருந்து தான் செயற்கை புத்தி பிரபலமடைகிறது. இருந்தாலும் 1990களில் கிடைக்கும் இதற்கான கணினி தொழில்நுட்பம் இன்று கிடைக்கும் தொழில் நுட்பத்தைவிட பல விதங்களில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

மட்டுப்படுத்தப்பட்ட கணினி தொழில்நுட்பத்தில் செயற்கை புத்தியின் வரம்பை உணர்ந்த ஆய்வாளர்கள் இதுபற்றி ஆர்வமாக பேசுவதை நிறுத்தி விட்டார்கள். சில காலத்திற்கு செயற்கை புத்தி ஆய்வுகள் கவர்ச்சியற்று போய் விட்டன. ஆனால் காலம் செல்ல அதிகரித்த கணனியின் வேகமும் இணையத்தினூடாக கிடைக்கக் கூடிய பெருமளவிலான தரவுகளும் ஒரு புதிய வகையான செயற்கை புத்தி ஆய்வை முடக்கிவிட்டது.

இன்று செயற்கை புத்தியை பற்றி விபரிக்கும் பிரபலமான சொற்களாக, ஆழமான நியூரல் வலைப்பின்னல் (deep neural network), ஆழமான இயந்திர கற்றல் (deep machine learning) போன்றவை கையாளப்படுகின்றன. இன்றைய செயற்கை புத்தி தொழில் நுட்பம் மனித மூளையின் நியூரல்கள் இயங்குதலின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டன.

இத்தொழில் நுட்பம் மனித மூளையின் நியூரல்களை போன்ற ஏராளமான சிறிய கணினிகளை வலைப்பின்னலாக உருவாக்குகிறது. ஏதாவது ஒரு விடயத்தை கற்பதற்கு இந்த செயற்கை புத்திக்கு ஏராளமான தரவுகள் கொடுக்கப்படும். இத்தரவுகளை வைத்து இச்செயற்கை புத்தி சரியான முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்கிறது.

இந்த நியூரல் வலைப்பின்னல் பல அடுக்குகளை கொண்டிருப்பதாலேயே இது ஆழமான கற்றல் என்று விபரிக்கப்படுகிறது. இத்தகைய தொழில் நுட்பமும் அதற்கு கொடுக்கப்படும் ஏராளமான தரவுகளுமே அதற்கு, ஒருவரின் குரலையும், முகத்தையும் அடையாளம் காணவும், ஓட்டுனர் இல்லாமல் வீதியில் கார் ஓட்டவும், மொழி மாற்றம் செய்யவும் தேவையான முடிவுகளை எடுக்கும் வல்லமையை கொடுக்கிறது.

இவையாவும் நியூரல் வலைப்பின்னல் மற்றும் ஆழமான கற்றல் ஆகியவை கொடுத்த நன்மையான வல்லமைகள். இதே தொழில்நுட்ப வல்லமைகள் இன்று நேர்மையற்ற விதத்தில் அரசியலிலும் வர்த்தக விளம்பரங்களிலும் கையளப்படுவதே இன்று பலருக்கும் மிகவும் கவலை கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

இவ்வாறான ஒரு தொழில்நுட்பத்தை கொண்டு Cambridge Analytica (CA) என்றவொரு அமைப்பு பிரேக்சிட் வாக்கெடுப்பிலும் ஐ-அமெரிக்க தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்திய போதுதான் இந்த நேர்மையற்ற தொழில்நுட்ப சாத்தியங்கள் பொதுவெளிக்கு வந்தன. இவையிரண்டும் வாக்காளர் பற்றிய தரவுகளை முகநூலில் இருந்து எடுத்து ஒவ்வாரு வாக்காளரையும் தனித்தனியாக குறிவைத்து விளம்பரங்கள் காட்டி தேர்தல் முடிவகளை மாற்றியது.

முன்னொரு காலத்தில் ஒலி மற்றும் ஒளி ஊடகங்களை, அவற்றின் தாக்கம் செலுத்தும் வல்லமை கருதி, அரசுகளே தம் கையில் வைத்திருந்தன. ஆனால் இன்றைய நவதாராளவாத கொள்கை இவற்றை சுதந்திரமாக சந்தையின் தாக்கத்திற்குள் செயற்பட வைத்துள்ளது. இதே போலத்தான் இணையமும். இன்று முகநூல் மற்றும் கூகிள் போன்ற இராட்சச கம்பனிகள் ஏராளமான தரவுகளையும் அதே நேரத்தில் அதிவேகமாக முன்னேறி வரும் செயற்கை புத்தி தொழில்நுட்பத்தையும் சொந்தமாக வைத்திருக்கின்றன. கூகிள் ஏற்கனவே இத்தொழில்நுட்பத்தை கொண்டு நாம் எதைப்பார்க்க விரும்ப வேண்டும் என்று எமக்கு சொல்கிறது.

கேம்பிரிஜ் அனலிற்றிக்கா போன்ற நிறுவனங்கள் பெரும் காப்பரேட் முதலாளிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இணைந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்பான ஒரு கூட்டுத்தான். ஆனாலும் இவை அந்த அரசியல் கட்சியின் கட்டமைப்புகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் வெளியே இயங்குகிறது. அந்த அரசியல் கட்சிக்கு சாதகமாக இவற்றால் பொய் தகவல்களை பரப்ப முடிகிறது. பல அரசியல் பித்தலாட்டங்களை சுட்டிக்காட்டும் RJ  பாலாஜியின் LKG என்ற தமிழ் சினிமாவில் இவ்விடயமும் சுட்டிக்காட்டப்படுவதை கவனியுங்கள்.

வளரும் நாடுகளில் ஒவ்வொரு வீடுகளிலும் இணைய சேவை வைத்திருப்பது பெரும்பான்மை மக்களுக்கு முடியாத ஒன்றாகவே உள்ளது. அதே நேரத்தில் மோபைல் கைப்பேசிகளை மிகவும் குறைந்த விலையில் மக்கள் பெறக்கூடியதாக இருக்கிறது. அதனூடாக சில சமூகவலைத்தளங்களும் மக்களுக்கு இலகுவாக கிடைக்கிறது. இதனால் வளரும் நாடுகளில் மோபைல் கைப்பேசியூடாக மக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பங்குபற்றுகிறார்கள்.

இவ்வாறு கைப்பேசியூடாக கிடைக்கும் சமூவலைத்தளங்கள் அளவுக்கு வளரும் நாடுகளில் உள்ள மக்களுக்கு இணைய வசதி கிடைப்பதில்லை. சமூகவலைத்தளங்கள் மக்களை பொய்ப்பிரச்சாரத்தில் வீழ்த்துவதற்கு இதுவும் வசதியாக உள்ளது. இணையத்தினூடாக ஏனைய செய்திகளையும் மக்கள் இலகுவாக படிக்க முடிந்தால் இத்தகைய பொய்ப்பிராச்சாரம் வெற்றியடைவதை ஓரளவு மட்டுப்படுத்த முடியும். அண்மைய பிரேசில் தேர்தலில் கடும் வலதுசாரியாளரின் வெற்றிக்கு இத்தகைய சமூகவலைத்தள பொய்ப்பிச்சாரம் பெரிதும் உதவியதாக சொல்லப்படுகிறது.

முகநூல், கூகிள் போன்ற இரட்சச கம்பனிகளால் வரக்கூடிய தீமைகளை உணர்ந்து கொள்வதில் மக்கள் பின்தங்கியே உள்ளார்கள். செயற்கை புத்தி தொழில்நுட்பம் அதி வேகமாக முன்னேறி வரும் காலத்தில் இதனால் வரும் தீமைகளை புரிந்து கொள்வதில் மக்கள் அதே வேகத்தில் முன்னேற முடியாமல் திணறுகிறார்கள். ஒன்றை புரிந்து கொள்வதற்கு முன்னேரே இன்னுமொரு தீமை பூதாகரமாக விரிகிறது.

இணையத்தின் ஆரம்ப காலங்களில் அது தகவல்களை பகிரவும், மக்களின் கைகளுக்கு பலம் சேர்க்கும் ஒரு வளமாகவும் பார்க்கப்பட்டது. அநீதியை எதிர்க்கும் போராட்டங்களுக்கு உதவும் வெளிப்படையான ஒரு வளமாக பலரும் இணையத்தை நோக்கினார்கள். அப்படியான காலம் இன்று மலையேறிவிட்டது. இன்று தொழில்நுட்பம் எம்மை ஏமாற்றுவதற்கு வசதி செய்து கொடுக்கிறது. நாமும் அதன் கைதிகளாகிவிட்டோம்.

இன்றைய நவதாரளவாத முதலாளித்துவ பொருளாதாரம் தொடர்ந்த எல்லையற்ற வளர்ச்சியையே மையப்படுத்துகிறது. இதே சூழலில் இதே கொள்கையுடன் வளரும் இராட்சச இணைய கம்பனிகளும் செயற்கை புத்தி ஆய்வுகளுக்கு பெரும் தொகையான பணத்தை செலவு செய்கிறது. இதனால் மக்களின் சனநாயக வெளிக்கு செயற்கை புத்தி கொண்டுவரும் ஆபத்துக்களிலிருந்து அதை பாதுகாப்பது ஒரு சவாலாகவே உள்ளது. ஆனால் செயற்கை புத்தி ஆய்வுகள் இவ்வாறுதான் வளரவேண்டும் என்றில்லை.

சனநாயகத்தை பாதுகாப்பதற்கு மக்களின் இது பற்றிய விழிப்புணர்வு அவசியம். அதே நேரம் இராட்சச கம்பனிகளின் வல்லமைகளை கண்காணித்து,  மக்களின் சனநாயக செயற்பாடுகளுக்கான வெளியை இந்த இராட்சச கம்பனிகளின் பொய்பிரசாரங்களில் இருந்து பாதுகாப்பதும் அவசியமாகிறது.