சட்டவிரோத கட்டுத்துவக்கினால் முல்லைத்தீவில் ஏற்பட்ட சோகம்.

35

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட தேராவில் பகுதியில் நேற்று மாலை காட்டுப்பகுதிக்கு மாடு பார்க்க சென்ற இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தேரவில் பகுதியில் வசிக்கும் செல்வக்குமார் தமிழின்பன் என்ற 20 வயதுடைய இளைஞன் மாடுகளைத் தேடி காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். இதன்போது அங்கு மிருகங்களை வேட்டையாடுவதற்காக கட்டப்பட்ட சட்டவிரோ கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்துள்ளார்.

இந்த தகவல் அறிந்து, அவரை மீட்கச் சென்ற அண்ணனான 23 வயதுடைய செல்வக்குமார் தமிழ்வேந்தன் மற்றுமொரு சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்துள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக தர்மபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சகோதரர்கள் இருவரினதும் முழங்கால் பகுதிகளில் குண்டுபட்டு சிதறிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேராவில் கிராமத்தில் சட்டவிரோத கட்டுத்துப்பாக்கி பயன்பாட்டாளர்களால் கால்நடை வளர்ப்போர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள். இவ்வாறான நடவடிக்கையினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். குறித்த பகுதியில் கால்நடைகளை மேய்த்து வரும் மக்களின் கால்நடைகள் தொடர்ச்சியாக இவ்வாறான சட்டவிரோ செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களினால் இறச்சிக்காக திருடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சட்டவிரோத துப்பாக்கி கட்டுபவர்களை பொலிசாருக்கு அடையாளம் காட்டியுள்ளதை தொடர்ந்து நேற்று இரவு குறித்த வீட்டிற்கு சென்ற பொலிசார் சந்தேக நபரை கைதுசெய்ய முற்பட்ட போது சந்தேக நபர் வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.