சஜித் தலைமையிலான கூட்டணியின் சின்னம் குறித்து நாளை இறுதி முடிவு

15

சஜித் பிரேமதாஸ தலைமையில் உருவாகும் முன்னணியின் சின்னம் தொடர்பில், நாளை நடைபெறும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமித் சஞ்சய தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

புதிய முன்னணியின் சின்னம் தொடர்பில் செயற்குழுவில் பேசப்பட்டது. ஆனபோதும் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை. தொடர்ச்சியாகக் கலந்துரையாடல்கள் இடபெற்று வருகின்றன. விசேடமாக இன்று அல்லது நாளை கலந்துரையாடல் இடம்பெறவிருக்கின்றது. அதிலே நாம் இறுதித் தீர்மானத்தை எடுக்கவிருக்கின்றோம்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூடித் தேர்தலுக்கான அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டணியை அமைப்பதற்கான அதிகாரத்தை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கியிருக்கின்றது. அதுபோன்று அதன் தலைவர் பொறுப்பையும் அவரிடம் கொடுத்திருக்கின்றது.

எனவே அவர் விரும்பியதைப் போன்று முன்னணிக்கு பெயரிட்டு அமைத்துக் கொள்ள முடியும். அதற்கான அங்கீகாரத்தைச் செயற்குழு வழங்கியிருக்கின்றது. சின்னம் தொடர்பில்தான் தற்போது பிரச்சினை இருக்கின்றது. நாளை நடைபெறும் செயற்குழுக் கூட்டத்திலே சின்னம் தொடர்பிலான இறுதித்தீர்மானம் எடுக்கப்படும்” என்றார்.