கோத்தா படையினரை பல்வேறு கொலைச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியிருந்தார்;விபரங்கள் இரண்டொரு தினங்களில் வெளிவரும்- ராஜித

கடந்த அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் இராணுவத்தினரை பல்வேறு கொலைச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியிருந்தார். அதனால் இராணுவத்தினர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். அவர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தவர்களை நான்கு வருடங்களாக நீதிமன்றங்கள் கண்டுகொள்ளவில்லை. நீதிமன்றங்களுக்குச் சென்ற வழக்குகளின் தீர்ப்புகளை மாற்ற மருத்துவ சான்றிதழ்களை அளித்தனர். முடியாத கட்டத்தில் வெளிநாடுகளுக்குச் சென்றனர்.

இராணுவத்தினரை காட்டிக்கொடுத்துவிட்டு தப்பியோடியவர்கள் இராணுவத்தினரை கைதுசெய்துள்ளதாக அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர். கைதுசெய்தது அரசாங்கமல்ல கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் நீதிமன்றங்களே உத்தரவு பிறப்பித்திருந்தன.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பிலான அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் வெளிவரவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இந்த படுகொலைகள் நடத்தப்பட்ட விதம் தொடர்பில் நான் கேட்டபோது என்னால் உணவு உண்பதற்கும் முடியாமல் போனது, இதனை பெண்கள் கேட்டிருந்தால் மயக்கமே அடைந்திருப்பார்கள் என குறிப்பிட்டார்.