கோத்தபாயாவின் வெற்றி யாருக்கு ஆபத்தானது? – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

352
12 Views

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பாரிய இனப்படுகொலை நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நாம் இந்த பத்து வருடங்களில் எந்த நிலையை அடைந்துள்ளோம் என்ற மீள் ஆய்வுகளை தமிழ் மக்களும், அமைப்புக்களும் பல தளங்களில் மேற்கொண்டிருந்தன.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற ஆயுத மௌனப்பின் பின்னர் எமது போராட்டம் வேறு வடிவத்தில் பலம் கொண்டு நகரும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடம் இருந்தது.

ஒரு இனத்தின் பேரழிவு என்பது அந்த இனமக்களை ஒரு அணியில் இணைக்கும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்லாது, உலகத்தின் எதிர்பார்ப்பும் அவ்வாறானதாகவே இருந்தது. கிட்லரின் நடவடிக்கைக்கு பின்னர் யூதர்களின் ஒருங்கிணைவும், ஜேர்மனியின் ரஸ்யா நோக்கிய படை நகர்வின் பின்னர் இரும்புத்திரையாக மாறிய சோவியத்து ஒன்றியத்தின் ஒற்றுமையும் வரலாறு எமக்குத் தந்த பாடங்கள்.

ஆனால் நாம் எதிர்பார்த்தது இடம்பெறவில்லை, எதிரியின் எதிர்பார்ப்பே வெற்றிகரமாக நகர்ந்தது. புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கடந்த 10 ஆண்டுகள் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் ஆய்வுகளின் முடிவு இது. அதாவது தமிழ் இனம் சிதறிப்போயுள்ளது. புலத்திலும், தாயகத்திலும் அது நிகழ்ந்துள்ளது, அதன் விளைவாக நாம் பலவீனமடைந்துள்ளோம்.

எனவே எதிர்வரும் 10 ஆண்டுகளில் நாம் விரைவாக நகரவேண்டிய கட்டாயம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதற்கு தேவை சிறீலங்காவின் தேசிய அரசியலிலும், அனைத்துலக இராஜதந்திர நகர்வுகளிலும் தமிழ் இனம் மேற்கொள்ளும் முடிவுகளும் நகர்வுகளுமே.

இந்த நிலையில் தான் சிறீலங்காவில் நடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டிய தீர்மானம் முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில் சிறீலங்காவின் அரசியலில் பூகோள அரசியல் நலன்சார் நாடுகளின் தலையீடுகள் அதிகம்.

இந்த பூகோள அரசியல் சக்திகளின் துணையுடன் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலையில் சிக்கிய தமிழ் இனம் தற்போது அதே வலையமைப்பின் ஊடாகத் தான் வெளிவரவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஏனெனில் போரின் போது மட்டுமல்லாது போரின் பின்னரும் மேற்குலகம் சிறீலங்காவில் தனது ஆதிக்கத்தை செலுத்த முற்பட்டு வருகின்றது.

போர் நிறைவடைந்தவுடன் பொன்சேக்காவை பயன்படுத்தி மேற்குலகம் ஒரு இராணுவப்புரட்சிக்கு திட்டமிட்டது ஆனால் அதனை அறிந்த இந்தியா மகிந்தாவை காப்பாற்ற தனது இராணுவத்தை நள்ளிரவில் தயார்படுத்தியதால் திட்டம் கைவிடப்பட்டது. சிங்களவர்களின் தலைகள் பல தப்பின.

அதேசயம், 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் மகிந்தா பெரு வெற்றியீட்டியதுடன், நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து 18 ஆவது திருத்தச்சட்டத்தை 2010 ஆம் ஆண்டு ஏப்பிரலில் கொண்டு வந்து எத்தனை தடவை வேண்டுமானாலும் தான் அரச தலைவராக இருக்கலாம் எனவும், சுதந்திரமாக செயற்பட்ட அரச நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டிலும் கொண்டு வந்தார். பொருளாதார ரீதியாக சீனா தனக்கு பக்கபலமாக இருக்கும் என்பது அவரின் அசையாத நம்பிக்கை.

ஆனால் மேற்குலகம் ஓய்ந்துபோகவில்லை 2010 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரையிலுமான காலத்தில் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் என பல தகவல்கள் வெளிவரத் தொடங்கின. ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. பல தீர்மானங்கள் வந்தன, புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளையும், அதனை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் மேற்குலக வல்லுனர்களும் ஊடகவியலாளர்களுமே மேற்கொண்டு வந்தனர்.

உதாரணத்திற்கு சனல் 4 தொலைக்கட்சி, பிற்றர் சார்க்ஸ், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சன்டே ரைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றிய காலம் சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் மேரி கெல்வின் என நாம் இங்கு பலரைக் குறிப்பிடலாம்.

ஊடகப்பிரிவு பணியாளர் இசைப்பிரியா தொடர்பான போர்க்குற்ற ஆதாரங்களையும் சனல் 4 இன் ஆசிய பிரிவு ஊடகவியலாளர் ஜொனார்தன் மில்லர் 2013 ஆம் ஆண்டு வெளிக்கொண்டந்திருந்தார்.

போரின் பின்னரான தேடுதல் மற்றும் துப்பரவு என்ற போர்வையில் சிறீலங்கா படையினர் பரிய அளவிலான படுகொலைகளை மேற்கொண்டதாகவும், அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பலர் சரணடைந்தவர்களே எனவும் அனைத்துலக போர்க் குற்றவியல் வழக்கறிஞர் யூலியன் நோவல் தெரிவித்திருந்தார்.

மேலும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீதான தடையை கூட மகிந்தாவின் காலத்தில் நீக்க மறுத்த ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவின் பொருளாதாரத்தை ஒரு தேக்க நிலையில் தான் வைத்திருந்தது.

2015 ஆம் ஆண்டு தேர்தலில் மகிந்தாவின் கட்சியை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து உடைத்தன சிறீசேனா என்ற பகடைக்காய் உருவாக்கப்பட்டார்.

எனினும் தனது சகோதரர்களின் உதவியுடன் இராணுவப்புரட்சி ஒன்றிற்கு மகிந்தா தயாரானார், அதற்காக சிறிலங்கா இராணுவத்தின் கஜபா றெஜிமென்ட தயார்படுத்தப்பட்டது, அலரிமாளிகையை விட்டு வெளியேற மறுத்தார், ஆனாலும் அமெரிக்கா விடவில்லை, அப்போது அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளராக இருந்து ஜோன் ஹெரியிடம் இருந்து வந்த தொலைபேசி மிரட்டலைத் தொடர்ந்து மகிந்தா அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்.

நல்லாட்சி என்ற போர்வையில் மைத்திரிபால சிறீசேனாவும், ரணிலும் கைகோர்த்தனர், மகிந்தாவின் 18 ஆம் திருத்தச்சட்டம் ஒழிக்கப்பட்டது, 19 ஆவது திருத்தச்சட்டம் 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
அதன் மூலம் அரச தலைவரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பிரதமரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன. ஒருவர் இரு தடவைகள் தான் அரச தலைவராக வர முடியும் என்ற சட்டமும் கொண்டுவரப்பட்டது.

இதன் முலம் முதலில் சீனாவை வெளியேற்றுவது பின்னர் தாம் பங்குபிரிப்பது என்பதே அமெரிக்க – இந்திய கூட்டு முன்னனியின் அன்றைய திட்டம். ஆனால் மகிந்தா சீனாவுடன் மேற்கொண்ட 99 ஆண்டு கால அம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தம் சீனாவை வெளியேற்ற முடியாது என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்தியது.

அதற்கு இணையாக திருமலைத்துறைமுகத்தை அமெரிக்கா ரணிலிடம் கோரியது. திருமலைத்துறைமுகத்தை வைத்து சில நன்மைகளை அடைய சிங்களம் திட்டமிட்டது, எனவே அது சிங்களவர்களின் பிரதேசம் என காண்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை ரணில் அரசு முன்னனெடுத்தது.
எனவே கண்ணியா நீரூற்று நிலைகளை சிங்களம் ஆக்கிரமித்துக் கொண்டது. ஆனால் இதனை மேப்பம் பிடித்த இந்திய விழித்துக் கொண்டது.

அமெரிக்காவின் திருமலைத்துறைமுகக் திட்டத்தை தவிர்ப்பதற்கு மீண்டும் மகிந்தாவை பயன்படுத்தியது, அதன் தாக்கமே கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி. ஆனால் திட்டம் தோல்விகண்டது.
ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் தோல்வியை சீர் செய்ய இந்தியாவும், தனது படைத்துறை உடன்படிக்கையில் எற்பட்ட பின்னடைவுகளை சீர்செய்வதற்கு அமெரிக்காவும் தற்போது முயற்சிக்கின்றன. எனவே தான் கோத்தபாயா மீது அவசரமான வழக்குகள் தொடுக்கப்பட்டன, அவர் குடியுரிமையை இழந்துள்ளதாக அறிவித்துள்ள போதும், அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவை திணைக்களம் அதனை உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் போட்டியில் குதித்துள்ளார்.

கோத்தபாயா வெற்றியீட்டினால் அமெரிக்கா முதலில் நட்புக் கரத்தை நீட்டும், அதற்கான முன்முயற்சியாகவே அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இராஜதந்திரிகள் மகிந்தாவை சந்தித்துள்ளனர். அமெரிக்காவின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தால்?

போர்க்குற்ற ஆதாரங்களுடன் மேற்குலகம் களம் இறங்கும். கோத்தபாயாவை அடிபணிய வைப்பதற்கோ அல்லது தண்டிப்பதற்கோ அவர்களிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

அனைத்துலக மன்னிப்புச்சபை, அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு, அனைத்துலக எல்டேர்ஸ் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு என பல அமைப்புகள் மேற்குலகம் சார்பானவை. அவர்களை புறம்தள்ள சிறீலங்காவால் முடியாது.

எனவே பொருளாதாரத் தடையை ஏற்படுத்தவோ அல்லது போர்க்குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்கள் மீது பயணத்தடை விதிக்கவோ அவர்களால் முடியும். சீனா அல்லது ரஸ்யா தமது வீட்டோ அதிகாரம் மூலம் அதனை தடுக்கலாம் எனினும் அது சந்தேகமே ஏனெனில் முன்னாள் யூகோஸ்லாவாக்கிய அதிபரின் விடயத்தில் அவர்கள் அதனை பயன்படுத்தவில்லை.

அதற்கான காரணம் போர்க்குற்றம், ஜனநாயக விழுமியங்களை மீறும் செயற்பாடுகள் என வைக்கப்படும் சான்றுகளின் மீது பிரயோகிக்கப்படும் வீட்டோ அதிகாரம் அந்த நாடுகளின் நன்மதிப்பை குறைத்துவிடும்.

சரி அவ்வாறு அவர்கள் பயன்படுத்தி சிறீங்காவைக் காப்பாற்றினலும் அது அமெரிக்காவை மேலும் சீற்றம் கொள்ளவே செய்யும். எனவே கோத்தபாயாவின் வெற்றி என்பது பல திருப்பங்களுக்கு வழிவகுக்கும் என்பதுடன் சிங்கள மக்களுக்கு அனுகூலமானதல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here