கோத்தபயாவை தோற்கடிக்க தமிழ் மக்கள் ஒருமித்து வாக்களிக்க வேண்டும் – சுமந்திரன்

தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து வாக்களிப்பதன் மூலம் கோத்தபயா என்ற ஆபத்தை தவிர்க்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த சுமந்திரன் மேற்படி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இத்தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தமிழ் மக்களை குடும்பமாகக் கொன்றழித்த ராஜபக்ஸ குடும்பம் தமிழர்களின் வாக்கு இல்லாமையாலேயே 2005இல் ஆட்சிபீடம் ஏறியது.

இவர்களின் ஆட்சிக் காலத்திலேயே பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றன. எமது இனத்தவர்களை கொன்றொழித்தார்கள். மிகவும் கொடூரமான ஆட்சி தேவையில்லை என்று தமிழ் மக்கள் ஒதுக்கினார்கள்.

மகிந்த தோற்கடிக்கப்பட்ட பின்னர், தான் ஈழத்தின் வாக்குகளாலேயே தோற்கடிக்கப்பட்டதாக மகிந்த ராஜபக்ஸ உரை நிகழ்த்தினார்.

தமிழ் மக்கள் சரியான முறையில் இந்தத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். எமது ஆயுதம் வாக்குரிமையே ஆகும்.

ராஜபக்ஸ குடும்பத்திலேயே கோத்தபயா மிக மோசமானவர். கடந்தகால யுத்தத்திற்கு காரணமானவரும் அவரேயாகும்.

சஜித் பிரேமதாசா, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு சார்பான பல வாக்குறுதிகளை முன்வைத்துள்ளார்.

தமிழ் மக்கள் அனைவரும் சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என்று கூறினார்.