கொரோனா வைரஸ் பரவிய பகுதிகளில் சீன அதிபர்

56

கொரோனா பரவ தொடங்கிய வுகான் நகருக்கு முதல்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்றார். சீனாவில் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் கோர தாண்டவமாடி வருகிறது. இதன் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஆரம்ப புள்ளியான சீனாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும், வுகான் நகரில் இன்னமும் உயிர்பலிகள் நின்றபாடில்லை. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் 17 பேர் பலியானதை அடுத்து அங்கு உயிரிழப்பு 3136 ஆக உயர்ந்துள்ளது. 80,552 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை தொடர்ந்து இத்தாலி அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. இதுதவிர ஈரான், தென்கொரியா அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4011-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 1,10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் உருவான வுகான் நகருக்கு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் சென்றுள்ளார். கொரோனா தாக்குதலால் ஜின்பிங் ரகசிய இடத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் ஜின்பிங் வுகான் சென்றார். அங்கு தற்போதையை நிலை குறித்து கேட்டறிந்ததாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளது. வைரஸ் தாக்கம் துவங்கிய பிறகு அவர் வருவது இதுவே முதல்முறையாகும்.