கொரோனா வைரஸ்:முகக்கவசம் அணியமாட்டேன் என அடம்பிடிக்கும் ட்ரம்ப்

15

கொரோனா வைரஸ்முகக்கவசம் அணிய வேண்டும் என்று புதிய மருத்துவ வழிகாட்டுதல் பரிந்துரைத்தாலும், நான் முகக்கவசம் அணிய மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது அலுவலகத்தில் “அதிபர்கள், பிரதமர்கள், சர்வாதிகாரிகள், இளவரசர்கள், இளவரசிகள்” என யாரேனும் வருகைத்தரும்போது தன்னால் முகக்கவசத்தை அணிந்துகொண்டு அவர்களை வரவேற்க முடியாது என்று அவர் கூறினார்.

துணியால் ஆன முகக்கவசத்தை பொதுவெளியில் செல்லும்போது மக்கள் அணியலாம் என்று அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தி இருந்தது.

“நீங்களும் அணிய வேண்டும் என்று அவசியமில்லை. நான் அணிய மாட்டேன் என்று நினைக்கிறேன்” என டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவில் 2,70,473 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 7000 பேர் இந்த தொற்றால் உயிரிழந்ததைத் தொடர்ந்தே, முகக்கவசம் அணிய மக்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

இதுவரை, உடல்நலம் சரியில்லாதவர்கள் மற்றும் கொரோனா தொற்று இருப்பவர்களைப் பார்த்துக் கொள்பவர்கள் மட்டுமே அணிய வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், கவனக்குறைவான வைரஸ் பரிமாற்றத்தைத் தடுக்க ஒருவர் முகக்கவசம் அணிவது முக்கியம் என்று புதிய ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.

“கொரோனா தொற்று இருந்தும் அதன் அறிகுறிகள் தென்படாமல் இருக்கும் நபர்கள், இந்த வைரஸை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன” என டிரம்ப் கூறினார்.

எனினும் தான் முகக்கவசம் அணியப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்கர்கள். சுத்தமான துணி அல்லது துணியால் ஆன முகக்கவசம் அணிய பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள். என்95 ரக முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால். அவை சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தக் கிடைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.