கூடாதவர்களின் கூடாரமாகிறதா கூட்டமைப்பு;பியசேனாக்களும் வியாழேந்திரன்களும்-மண்மகன்

164

அண்மையில் பட்டிருப்புத் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக பாராளமன்ற உறுப்பினராக சாணக்கியா ராகுல் இராசபுத்திரனை முன்னிலைப்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.இது பட்டிருப்பு தொகுதி மக்களை மட்டுமன்றி தமிழரசுக் கடசியின் பாரம்பரிய ஆதரவாளர்களையும் மிகுந்த விசனத்துக்குள்ளாக்கியது.

இதுதொடர்ப்பிக்க கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களுடன் தொடர்புகொண்டு கேட்டபோது தாம் இன்னும் அதுதொடர்பான எந்த முடிவுக்கும் வரவில்லை என கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் கூட்டமைப்பில் நாடாளமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவதாக சாணாக்கியா ராகுல் தற்போது அறிவித்துள்ளார்.இவர் முன்னாள் தமிழரசுக் கட்சி நாடாளமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் அவர்களின் அடையாளத்துடன் இன்று வலம் வந்தாலும் இவரின் கடந்தகால செயற்பாடுகள்  எந்த தமிழனாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையே.

சிங்கள பேரினவாத கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளராக அக்கட்சியின் 2015 ஆண்டு தேத்தல் பட்டியலில் 06 இடத்தில் சேர்க்கப்பட்ட உறுப்பினராக தமிழின விரோதி ஹிஸ்புல்லாவுடன் கைகோர்த்து செயற்பட்ட மனிதர் இவர். மேடைகளில் தமிழ் கட்சித் தலைவர்களுக்கு எதிராக வசைமாரி பொழிதவர். ஆக தமிழ் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டவர்.

இவரின் தாயார் ஒரு சிங்களப் பெண்மணி என்பதற்காக நாம் இவர்மீது எந்த வன்மமும் கொள்ளவில்லை.நாம் பார்த்திருக்க தமிழ் தேசியத்துக்கு எதிராக செயற்பட்ட இந்த மனிதர் நாளை மீண்டும் சிங்களக் கட்சிகள் பக்கம் தாவமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அம்பாறையில் கூட்டமைப்பில் இருந்து தனது கூட்டத்தோடு ஓடிய பியசேனாவிடமிருந்து,மட்டக்களப்பில் ராஜபக்சவின் கோடிகளில் தடுக்கி விழுந்த வியாழேந்திரனிடமிருந்து கூட்டமைப்புகற்ற பாடத்தை இன்று காற்றில் விட்டுவிட்டதா?

பதவிக்காக இன்று தமிழரசுக் கட்சிக்கு தாவியிருக்கும் சாணாக்கியா இராசபுத்திரன் போன்றவர்களை சரியாக இனங்கண்டுகொள்ள வேண்டியது கூட்டமைப்பின் கடப்பாடாகும்.

இவர்போன்ற பச்சோந்திகளை தவிர்த்து இந்த மண்ணில் உறுதியாக நிலைத்து நின்று தமிழ் மக்களுக்கு பணியாற்றக்கூடிய தேசப்பற்றாளர்களே இன்று எமக்குத் தேவையாகும்.

சாணாக்கியா போன்றவர்களை தவிர்த்து கொள்கைப் பற்றுள்ள மனிதர்களை முன்னிறுத்துவதே கூட்டமைப்பின் தார்மிக கடமையாகும்.இது இந்த மண்ணுக்கும் மண்ணை நேசித்த அந்த மனிதர்களுக்கும் நீங்கள் செய்யக்கூடிய குறைந்த பட்ச நன்றிக்கடனாகவாவது அமையும்.