கிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள், வரலாற்று இடங்கள் திட்டமிட்ட வகையில் கையகப்படுத்தப்படுகின்றன – தமிழ் மக்கள் கூட்டணி உபதலைவர்

தமிழ்மக்கள் கூட்டணியின் உபதலைவர் சோமசுந்தரம் (நேர்காணல்)

‘கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற நிலங்கள் திட்டமிட்ட வகையில் கபளீகரம் செய்யப்படுகின்றன. இதனைவிடவும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள், வரலாற்று இடங்கள் போன்ற அனைத்தும் திட்டமிட்ட வகையில் கையகப்படுத்தப்பட்டு அவற்றினை தமிழர்களுடன் தொடர்பற்ற பகுதிகளாக அடையாளப்படுத்துவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன’

என  தமிழ் மக்கள் கூட்டணியின் உபதலைவரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும், தமிழ் மக்கள் பேரவையின் கிழக்கு மாகாண நிருவாகச் செயலாளருமான சி.சோமசுந்தரம் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார். அந்தச் செவ்வியின் முழுவடிவம் வருமாறு…

கேள்வி: சமகாலச் சூழலில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் நிலைமை கள் எவ்வாறு உள்ளன?

பதில்: கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் அண்மைக்காலமாக அதிகரித்தவண்ணமுள்ளன மிகவும் சிக்கல்கள் நிறைந்த இப்பிரச்சினைகள் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றமையானது பல்வேறு அச்சங்களையே முதலில் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றன.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற நிலங்கள் திட்டமிட்ட வகையில் கபளீகரம் செய்யப்படுகின்றன. இதனைவிடவும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள், வரலாற்று இடங்கள் போன்ற அனைத்தும் திட்டமிட்ட வகையில் கையகப்படுத்தப்பட்டு அவற்றினை தமிழர்களுடன் தொடர்பற்ற பகுதிகளாக அடையாளப்படுத்துவதற்கான செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இதனைவிடவும், தமிழர்கள் தமது நிருவாகச் செயற்பாடுகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து நிருவாக அலகுகளை கோருகின்றபோது சொற்ப விடயத்தினைக் கூட பூதாகாரமாக்கி ஒருபிரதேசத்தில் கூட அதிகாரத்தினை கோருவதற்கு தகுதியற்றவர்கள் என்று அடிமைப்படுத்த விளைகின்ற மனநிலை போக்கு அதிகரித்துச் செல்கின்றது.

இதனைவிடவும் ஒருமொழிபேசுகின்ற இருசமூகங்கள் வாழுகின்ற கிழக்கு மாகாணத்தில் பகிரங்கமாக கூறமுடியாத பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். எல்லைக்கிராமங்களை பறிகொடுப்பது முதல் எம்முறவுகளையும், அடையாளங்களையும் இழக்க வேண்டிய சூழ்நிலைகள் தோற்றம்பெற்றுவருகின்றன.

இதனைவிடவும் கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு மத்தியில் காணப்படுகின்ற பிளவுகளை சாதுரியமாக பயன்படுத்தி எமது இருப்பையே கேள்விகுள்ளாக்குகின்ற செயற்பாடுகளும் செவ்வனே முன்னெடுக்கப்பட்டு வருகின்ற துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆகவே கிழக்கில் எமது அடையாளங்களை வெளிப்படுத்தி எமது இருப்பினை திடகாத்திரமாக உறுதிப்படுத்துவதற்கான தலைமையின் கீழ் அனைத்து தரப்பினரும் அணிதிரள வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது. இல்லாது விட்டால் முக்கால்வாசியை பறிகொடுத்த நாம் முழுமையாக அனைத்தையும் இழக்க வேண்டிய நிலைமைக்கே தள்ளப்படுவோம். இதனால் கிழக்கில் தமிழினம் முற்றாக அழிந்துவிடும் நிலை ஏற்படும் என்பது தான் நிதர்சனமான உண்மையாகும்.

கேள்வி : வலிந்து காணாமாலாக்கப்பட்டவர்களுக்கான நீதிகேட்டு அவர்களின் உறவுகளால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வருகின்ற நிலையில் அதற்கான தீர்வினை எவ்வாறு பெறமுடியும் எனக் கருதுகின்றீர்கள்?

பதில்:-  எமது உறவுகள் அசாதாரண சூழலிலும், இறுதி யுத்தத்தின்போதும் தமது உறவுகளைப் பறிகொடுத்து இற்றைக்கு ஒரு தசாப்த காலமாக தொடர்ச்சியாக வீதிகளில் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்கள். தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் இந்தப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

உள்நாட்டில் இந்த விடயத்திற்குரிய தீர்வினை வழங்குவதாக மாறிமாறி ஆட்சிக்கு வந்த சிங்கள, பௌத்த பேரின அரசாங்கங்கள் வாக்குறுதிகளை வழங்கி ஆணைக்குழுக்களையும் அலுவலகங்களையும் நியமித்தாலும் அவையெல்லாமே வெறும் கண்துடைப்பு செயற்பாடுகளே.

உள்நாட்டில் உறவுகளைப் பறிகொடுத்த மக்களின் அழுத்தங்களை நீர்த்துப்போகச் செய்து அவர்களை திசைதிருப்புவதற்கான செயற்பாடுகளாகவே அவை அமைகின்றன. ஆனால் அண்மைக்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்போதைய ஆட்சியாளர்கள் பொறுப்புறுக்கூறல் பொறிமுறைகளை முன்னெடுப்போம் என்று கூறி அதற்காக கால அவகாசத்தினைப் பெற்றுள்ள சூழலிலும் அவர்களும் இந்த விடயத்தில் கண்கட்டிவித்தையே செய்கின்றார்கள்.

அவர்கள் உறவுகளை மட்டுமன்றி முழுச் சர்வதேசத்தினையும் ஏமாற்று வதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளார்கள். இதற்காக காணாம லாக்கப் பட்டவர்களுக்கான அலுவலகங்களை ஸ்தாபித்து அவ்வப்போது பிராந்திய காரியாலங்களையும் திறக்கின்றார்கள். இவை அனைத்துமே சர்வதேசத்தினை ஏமாற்றி தொடர்ந்தும் பொறுப்புக்கூறலை தாமதப்படுத் துவற்கான நாடகமாகும். இதனை சர்வதேச நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும். நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் சர்வதேச காணாமலாக் கப்பட்ட தினமன்றும் கல்முனையிலும், தமது உறவுகளை படையினரிடத்தில் கையளித்த ஓமந்தையிலும் பாரிய கனவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

ஆகவே இந்த விடயம் ஆறிப்போன பழங்கஞ்சியாக என்றுமே கொள்ளமுடியாது என்பதை சர்வதேசம் புரிந்துகொண்டு உணர்வுகளுடன் தொடர்புடைய இவ்விவகாரத்தினை சர்வதேச தலையீட்டுடன் குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றாவது எமது மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் சற்றேனும் கூட சர்வதேசம் தாமதிக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். அவ்வாறு தாமதிக்கின்றபோது தங்களது உறவுகளுக்காக ஏங்கிப் போராடிக் கொண்டிருக்கும் உறவுகள் தமது இறுதி ஆசைகளைக் கூட நிறைவேற்றாது உயிர்களை மாய்க்கின்ற நிலைமைகளே அதிகரித்துச் செல்லும் பேராபத்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

கேள்வி : சவேந்திர சில்வா இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: பேரினவாத அரசாங்கங்கள் தமது மனநிலையில் எள்ளவும் மாற்றத்தினைக் கொள்ளவில்லை என்பதையே இந்த நியமனம் வெளிப்படுத்தி யுள்ளது. ஆயுத ரீதியிலான எமது உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாத மாகச் சித்தரித்து ஆயிரக்கணக்கானோரை கொன்றுகுவித்த ஒருவருக்கு அதியுயர் பதவி வழங்கப்படுகின்றது என்றால் தமிழர்கள் குறித்து தென்னிலங் கை தலைவர்களின் கரிசனையை தெளிவாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. தற்போது இராணுவத்தளபதி நியமிக்கப்பட்டி ருக்கின்றார். அடுத்துவரும் காலத்தில் சனாதிபதியும் அத்தகைய மனநிலை கொண்ட ஒருவர் வருவாரானால் தமிழர்கள் நாடற்ற அநாதைகளாக்கப் பட்டுவிடும் ஆபத்தே உள்ளது.

கேள்வி: செப்டம்பர் 16இல் நடைபெறும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் கிழக்கு தமிழர்களின் வகிபாகம் எவ்வாறு அமையப்போகின்றது?

பதில்:- தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் அதன் இணைத்தலைவரும், எமது கட்சியின் பொதுச்செயலாளருமான நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் எழுக தமிழ் நிகழ்வானது தாயகத்தின் எட்டுமாவட்டங்களையும் உள்ளடக்கியவாறு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இதில் தாயகத்தின் அனைத்துப்பிரதேசத்திலும் இருந்து பெருந்திரளானவர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழர்களின் தாயகம் தற்போது சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பின் பிடிக்குள் வெகுவாக சிக்கியுள்ளது. எமக்கு பாரம்பரியங்கள் பறிபோகின்றன. எமது இழைக்கப்பட்ட எந்தவொரு அநீதிகளுக்கும் நீதி கிடைப்பதாக இல்லை. பொறுப்புக்கூறல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது எட்டாக்கனியாக உள்ளது.

ஆயுதப்போராட்டத்தினை மௌனித்து விட்டோம் என்ற மமதையில் சிங்கள பேரினவாதம் தனது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலைமைகளை நாம் சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பேரினவாத ஆட்சி முதல் நல்லாட்சி வரையில் தமிழர்களுக்கு எந்தவிமோசனமும் கிடைக்கவே இல்லை என்பதை சர்வதேசத்திற்கு உரத்துக் கூறவேண்டும். இதற்கான கிழக்கு மாகாண தமிழர்கள் முழுமையாக தமது ஆதரவை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்கள்.

இது தனிப்பட்ட நபர்கள் சார்ந்த பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் இருப்பு சம்பந்தமான பிரச்சினை. ஆகவே தான் இந்த எழுச்சிப்பேரணியில் அனைவரும் பேதமின்றி கலந்து சர்வதேசத்திற்கு அழுத்தமாக எமது நிலைமையை உரத்துச் சொல்ல தலைப்பட்டிருக்கின்றோம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஆகவே எழுக தமிழ் எழுச்சிப்பேரணி மாபெரும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. கிழக்கின் பல்வேறு அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் தமது ஆதரவினை வழங்குவதற்கு முன்வந்துள்ளன.

கேள்வி : ஆணைபெற்ற தமிழ்த்தலைவர்கள் தமிழ் மக்களின் விடயங்களை கையாளுகின்றமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் நான் தந்தை செல்வாவின் பாசறையில் உருவான தமிழரசுக்கட்சியின் உறுப்பினராகவே ஆரம்பகாலத்தில் இருந்தேன். தற்போது அந்தக்கட்சியி லிருந்து வெளியேறிவிட்டேன். அந்தக்கட்சியின் தலைவர்களைப் பொறுத்த வரையில் அவர்களால் இயலுமான விடயங்களையே செய்கின்றார்கள். அவற்றால் தமிழ் மக்கள் எவ்விதமான விமோசனத்தினையும் பெறவில்லை.

ஆகவே அவர்களை விமர்சிப்பதால் எவ்விதமான பயனும் கிடைக்கப் போவதில்லை. அவர்களை விமர்ச்சித்துக்கொண்டிருப்பதால் எம்மால் முன்னெடுத்துச் செய்ய வேண்டிய கடமைகளே தாமதமடைந்துவிடும். நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டோம். இனி இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆகவே இருக்கின்றவற்றை பாதுகாக்க வேண்டும். அதற்காகவே தமிழ் மக்கள் பேரவை அமைக்கப்பட்டது.

அதன்மூலம் எமது பிரச்சினைகளை முன்வைத்துள்ளதோடு தீர்வு தொடர்பிலும் தெளிவான நிலைப்பாட்டினை குறிப்பிட்டோம். ஆயுதபோராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் தந்தை செல்வா காட்சிய அஹிம்சை வழியில் மக்கள் எழுச்சிப்போராட்டங்களை முன்னெடுப்பது தான் எமக்குள்ள ஒரே வழியாகும்.