கிழக்கின் பாதுகாப்பானது வடகிழக்கு இணைப்பிலேயே தங்கியுள்து(நேர்காணல்)-சுரேஷ் தர்மலிங்கம்

76

‘எங்களைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும்.கிழக்கின் பாதுகாப்பானது இந்த இணைப்பிலேதான் தங்கியுள்ளது.அது இணைக்கப்பட்டு எங்களுக்கான தேச அங்கீகாரம் கிடைக்கப்பெறும்வரை நாங்கள் தொடர்ச்சியாக குரல்கொடுப்போம்’என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட  அமைப்பாளர் திரு.சுரேஷ்  தர்மலிங்கம் அவர்கள் இலக்குடனான நேர்காணலில் தெரிவித்தார்,

கட்சி தொடர்பான விடயங்கள் ,சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் அவர்  செவ்வியின் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறோம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை கொள்கைகளாக எவற்றினை நீங்கள் முன்னிறுத்துகின்றீர்கள்?

நாங்கள் ஒரு நாடு இரண்டு தேசம் என்ற அடிப்படையில் கொள்கையை முன்வைத்து பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான ஒரு நிலை நீடிக்கப்படவேண்டுமானால் தமிழ் மக்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படவேண்டும்.அத்துடன் இணைந்து அவர்களின் இறைமையும் அங்கீகரிக்கப்பட்டால் மாத்திரமே தமிழ் மக்கள் நிம்மதியாக இலங்கைத்தீவில் சிங்கள மக்கள் போன்றும் முஸ்லிம் மக்கள் போன்றும் சமூகத்தில் வாழக்கூடிய சூழல் உருவாகும்.

அந்த வகையில் தமிழ் மக்களின் தீர்வாக எமது விடுதலைப் போராட்டத் தலைமையானது பேச்சுவார்த்தை மேசையில் முன்வைத்த தேச அங்கீகாரம் என்ற விடயம் பிரதானமானது. அந்த அடிப்படையில் தமிழர்களின் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் எங்களுடைய கொள்கையாக கொண்டிருக்கின்றோம்.

பிள்ளையான்,கருணா போன்ற பல கட்சிகள் கிழக்கினை பிரித்தாளும் நோக்குடன் பல்வேறுவிதமான கருத்துகளை  மக்கள் மத்தியில் முன்வைத்து வருகின்றனர்.

எங்களைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும். கிழக்கின் பாதுகாப்பானது இந்த இணைப்பிலேதான் தங்கியுள்ளது.அது இணைக்கப்பட்டு எங்களுக்கான தேச அங்கீகாரம் கிடைக்கப்பெறும்வரை நாங்கள் தொடர்ச்சியாக குரல் கொடுப்போம்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் உங்கள் கட்சியின் வளர்ச்சிப்போக்கு எவ்வாறு உள்ளது?

எங்களது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தமட்டில் கடந்த பத்து வருடமாக கிழக்கு மாகாணத்தில் நாங்கள் தனியாக நின்று பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சவால்களுக்கு மத்தியில் பலரின் உதவியோடு  கட்சியைக் கட்டியெழுப்பி வந்துள்ளளோம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடு என்பது ஒரு வீச்சாக மாறியிருக்கின்றது. நாங்கள் கொள்கையில் உறுதியான ஒரு தரப்பு என்ற ஒரு எண்ணம் மக்களிடம் காணப்படுகிறது.

தற்போது நாங்கள் பலமாக இருக்கின்றோம். அரசியல் கட்சிகள்,பொதுஅமைப்புகள்,  புத்திஜீவிககள்   மாணவர்ககள்,  சிவில் அமைப்புகள்  என பல்வேறு அமைப்பினரும் எங்களை சந்தித்து பேசிவருகின்றனர்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் எவ்வாறான பணிகளை நீங்கள் முன்னெடுத்துவருகின்றிர்கள்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மையமாக வைத்தே நாம் வேலைகளை செய்து வருகின்றேம். குறிப்பாக முன்னாள் போராளிகள்,விதவைகள்,போரில் பாதிக்கப்பட்ட நபர்களை இனங்கண்டு அவர்களுக்கான வசதிவாய்ப்புகளையும் வாழ்வாதாரத் திட்டங்களையும் நாங்கள் செய்துவருகின்றோம்.

திடீரென ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தங்கள் போன்ற தருணங்களில் புலம்பெயர் மக்களிடமிருந்து உதவிகளைப்  பெற்று   பெற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக சென்று கடந்த காலங்களில் உதவிகளை செய்திருக்கின்றோம்.

கல்வித்துறையை நாங்கள் வளர்த்தெடுக்க வேண்டும். இனி எமது மக்களுக்கு இருக்கின்ற ஒரே ஆயுதம் கல்வியாகும். கல்வித் துறையை முன்னேற்றும் விதமாக மட்டக்களப்பு மாவட்டததில் கோப்பாவெளி, புல்லுமலை, வாகரை,வாகனேரி, கட்டுமுறிவு போன்ற பின்தங்கிய எல்லைக்கிராமங்களிலுள்ள மாணவர்களுக்கு கல்வி நிலையங்களை அமைத்து அவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி கற்றல் நடவடிக்கைகளை ஊக்குவித்து வருகின்றோம்.

எதிர்கால சந்ததியினர் நன்கு கற்று நல்வழிப்படவேண்டும் என்பது தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள்  எம்முடன் பேசுவார்கள்.அவ்வாறே அவர்களின் செயற்பாடும் அமைந்திருக்கின்றது.புலம்பெயர் தமிழ் மக்கள் எம் மூடாக பலவழிகளில் இங்கு உதவிவருவது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

 மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் பொதுவான விடயங்களில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றும் சூழ்நிலையிருக்கின்றதா?அவ்வாறு இல்லாதுவிட்டால் அதற்கான காரணம் என்ன?

நாங்கள் எமது கொள்கையில் உறுதியாகவுள்ள கட்சி.அந்த அடிப்படையிலேயே நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தும் பிரிந்துவந்தோம்.கிழக்கில் பல கட்சிகள் இருக்கின்றன.அவர்கள் தமிழ் மக்களின் நலன்கருதியோ தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்க்கும் வகையிலேயோ அவர்களின் கொள்கைகள் இல்லை.

எமது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய,தமிழ் தேசம் அங்கீகரிக்கும் விதமாக செயற்படும் கட்சிகளுடனேயே நாங்கள் பயணிப்பது என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.அந்தவகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிபோன்று கொள்கையுடன் பயணிக்கும் கட்சி கிழக்கில் இல்லையென்பதே உண்மை.

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?

தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக,நீதிக்காக வேண்டி   எந்த தரப்புக்கு வாக்களித்தார்களோ அந்தத்தரப்பு கடந்த பத்து வருடங்காக அவர்களை ஏமாற்றி வந்திருக்கிறது.

தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் தரப்புடன் இருக்கப் போகின்றீர்களா, தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் தொடர்ச்சியாக குரல்கொடுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற மக்கள் இயக்கங்களை ஆதரிக்கப்போகின்றீர்களா என்பது உங்கள் கைகளில்தான் உள்ளது.

தமிழ் மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ அந்த இலட்சியத்தினை,அடையாமல், அதில் ஒரு துளி முன்னேற்றம் கூட அடையாமல் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அநாதையாக்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைக்காக ஏராளமான மாவீரர்களை இழந்திருக்கின்றோம்.இந்த விடுதலைப்போராட்டத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.இவ்வளவு இழப்புகளையும் கொண்ட இலட்சியத்தினை அடையவேண்டும் என்பதே எமது இலக்காகும்.அந்த வழியிலேயே எமது கொள்கையும் கூட அமைந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு கொண்டுசென்றதும் அதற்காக குரல்கொடுக்கும் ஒரேயொரு தலைவர் அது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மட்டுமேயாகும்.வடகிழக்கு இணையவேண்டும் என்பதற்காக அன்று தொடக்கம் இன்றுவரை குரல்கொடுத்துவருபவரும் அவரே.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் சிங்களவர்கள் முஸ்லிம்களை பாவித்து தமிழர்களை முடக்குவதற்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.நாங்கள் வடக்குடன் சேரும்போதுமட்டும் தான் தமிழர்கள் பெரும்பான்மை.எதிர்காலத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பதன் மூலம் மட்டுமே ஏமாற்றமடையாமல் தமிழ் மக்களின் உரிமையினை வெல்லமுடியும்.