காஸ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து பறிப்பு;இரண்டாகப்பிரிப்பு தொடர்பில் சீமான் ,திருமா கண்டனம்

227

காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரத்தை ரத்துச் செய்து தன்னாட்சி உரிமையைப் பறித்திருப்பது காஷ்மீரத்து மக்களுக்குச் செய்யப்பட்ட பச்சைத்துரோகம்! ஜனநாயகத்தைப் படுகொலை செய்து சட்டத்தின் வழியே நிகழ்த்தப்பட்ட சர்வாதிகாரம்! என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா என்பது பல்வேறு மொழிவழி தேசிய இனங்கள் சங்கமித்து வாழும் ஓர் ஒன்றியம். அத்தகைய தேசிய இனங்கள் அதிகாரத்தின் மூலம் இந்தியா எனும் ஒற்றைக்குடையின் கீழ் இணைக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் ஒவ்வொருவிதத் தன்மையுண்டு. பன்முக இயல்புகளுண்டு. மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், வேளாண்மை, உணவுப்பழக்கவழக்கம், ஆடை அலங்காரம், நிலவியல் சூழல், பொருளாதாரப்பின்புலம் என ஒவ்வொரு தேசிய இனமும் தனித்த குணநலன்களையும், மாறுபட்டப் பண்புகளையும் கொண்டு வாழ்ந்து வருகின்றன. அவையாவற்றையும் சிதைத்தழித்து தேசிய இனங்களின் தனித்தன்மையைக் குலைத்து, தன்னுரிமையை முற்றாக மறுத்து ஒற்றைமுகமாக இந்தியாவை நிறுவ முனைவதே இந்துத்துவச் சித்தாந்தத்தின் அடிநாதம். அதனையேற்று ஆட்சி செய்யும் பாஜக அதற்கான செயல்வடிவத்தினை மாநிலங்களின் அதிகாரப்பறிப்பு மூலமாகச் செய்துவருகிறது. அதன் நீட்சிதான், காஷ்மீரத்தின் சிறப்பு அங்கீகாரத்தை ரத்து செய்திட்டு, தன்னாட்சி உரிமையைப் பறித்திட்ட இக்கொடுஞ்செயல் என்பதில் துளியவும் ஐயமில்லை.

 இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  ‘’காஷ்மீர் மாநிலத்திற்குரிய சிறப்பு அங்கீகாரமான 370, 35ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்யும் மசோதாவைத் தாக்கல் செய்திருக்கும் மத்திய அரசின் முடிவு நாடு முழுக்கப் பெரும் அதிர்ச்சியினையும், கொந்தளிப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறது. இத்தோடு ஜம்மு காஷ்மீர், லடாக்கைப் இரண்டாகப் பிளந்து பிரித்து ஜம்மு காஷ்மீரைச் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியினைச் சட்டமன்ற அங்கீகாரமில்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்ற முனைந்திருப்பது மிகப்பெரும் அநீதி. இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாக எதிர்க்கிறது; கண்டிக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன்,

’’காஷ்மீர்  மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 370 ஐ ரத்து செய்தும் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப்   பிரித்தும் இன்று அவசர அவசரமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  இது அப்பட்டமான சர்வாதிகாரப் போக்காகும். அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த யுத்தத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக எதிர்க்கிறோம்.  இந்தியாவை அமைதியற்ற பகுதியாக ஆக்குகிற பாஜக அரசின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்க்க ஜனநாயக சக்திகளை அறைகூவி அழைக்கிறோம்.

கடந்த சில நாட்களாக காஷ்மீரில் துருப்புகள் குவிக்கப்பட்டன. காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு அனைத்து விதமான தொடர்பு சாதனங்களும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. காஷ்மீர் மாநிலத்தின் மீது அறிவிக்கப்படாத யுத்தம் இந்திய அரசால் தொடுக்கப்பட்டிருக்கிறது .இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள ஆணை இதுவரை காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது. அதுமட்டுமின்றி அவசர அவசரமாக இன்று மாநிலங்களவையில் சட்ட மசோதா ஒன்றை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்திருக்கிறார். காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையாகும்.

அரசியலமைப்புச்சட்ட உறுப்பு 370 இன் கீழ் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டது சலுகை அல்ல. அது  காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும்போது ஏற்கப்பட்ட நிபந்தனை. அதை ரத்துசெய்வது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல.

மோடி அரசின் இந்த நடவடிக்கை காஷ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பதிலாக அதிகரிக்கச் செய்திருக்கிறது. அமைதியை சீர்குலைப்பதன்மூலம் ஆட்சியின் அலங்கோலங்கள் வெளியில் தெரியாமல் மறைக்கலாம் என மோடி அரசு நினைக்கிறது. அதற்காக காஷ்மீர் மக்களைப் பலிகடாவாக்கியிருக்கிறது. இதைக் கடுமையாக எதிர்க்கவேண்டும் என அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக்கொள்கிறோம். ’’