காலனிய நீக்கமும் கொரொனா பேரனர்த்தமும்-து.கௌரீஸ்வரன்    

424

இன்று உலகளவில் கொரொனா பேராபத்து சூழ்ந்திருக்கும் காலத்தில் உலக நாடுகளின் இயக்கத்தில் இதுவரை ஆதிக்கஞ்செலுத்தி வரும் கொள்கைகளும் நடைமுறைகளும் ஆட்டங்காணத் தொடங்கியுள்ளன. தாராள சந்தைப் பொருளாதாரத்தையும், தனியார் துறையின் வலுவாக்கத்தையும் அது வலியுறுத்தும் தனிமனித சுதந்திரத்தையும் பற்றிப்பிடித்து வளர்ச்சிக்கு இதுதான் ஒரேவழி என்று கடைப்பிடித்த நாடுகள் இன்று கொரொனாவின் சமூகப்பரவலைக் கட்டுப்படுத்த வழி தெரியாது திக்குமுக்காடுகின்றன.

நாளாந்தம் பலநூறு மனித உயிர்களைக் காவு கொடுத்து வருகின்றன. இன்னொரு பக்கம் நாட்டின் வளங்களை முழுமையாகவும், பகுதியளவிலும் அரசின் அதிகாரத்திற்குட்படுத்தி வைத்திருக்கும் பொதுவுடமைச் சித்தாந்தத்தின் செல்வாக்கிற்குள்ளான நாடுகளும் மாநில அரசுகளும் கொரொனாவைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதில் முன்னேற்றகரமான  விளைவுகளைக் காட்டுவதாக அடையாளங் காணப்பட்டு வருகின்றன.

இந்தப்பின்புலத்தில் இனிவரும் உலகின் பொருளாதாரம் அதன் கட்டமைப்பு மற்றும் பொறிமுறைகள் பற்றி புதிய தேடல்கள் புதிய அணுகுமுறைகள் உரையாடலுக்குரியதாக மாறி வருகின்றன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் படிப்படியாகத் தனியார்மயப்படுத்தலிலும், தாராளவாத சித்தாந்தத்திலும் ஆர்வங்காட்டித் தமது தேசிய வளங்களை பல்தேசிய வணிக நிறுவனங்களிடம் கையளித்து வந்த நாடுகளும் அரசுகளும் தற்போதைய கொரொனா பேரனர்த்தத்தின் பின்னரான பொருளாதார ஆபத்துக்களிலிருந்து மீள்வதற்காக உள்நாட்டுப் பொருளாதார விருத்திக்கான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முன்முயற்சிகளில் இறங்கியுள்ளதனைக் காண்கின்றோம்.

அதாவது இதுவரை காலமும் ஏகாதிபத்திய நலன்பேணும் நிதிநிறுவனங்களின் நிபந்தனைகளுக்குட்பட்டு உள்நாட்டு விவசாயத்தை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களில் ஆர்வஞ்செலுத்தாமலும், பொதுச்சேவைகளுக்கான (கல்வி,சுகாதாரம்) நிதிவழங்கலை வருடாந்த பாதீட்டில் அதிகரிக்க விரும்பாமலும்,உள்நாட்டு உற்பத்தித் துறைகளை விருத்தி செய்யாமல் சேவைத் தொழிற்துறையினை நோக்கி நாட்டின் மனித வளத்தைத் திசை திருப்பி வந்துள்ள அரசாங்கங்கள் தற்போது அதற்கு மாறாக உள்நாட்டு விவசாயத்தின் விருத்தி பற்றியும், பொதுச்சேவைகளின் விரிவாக்கம் குறித்தும், உள்நாட்டு மூலவளங்களை அடிப்படையாகக் கொண்ட வேலைவாய்ப்புக்களைப் பெருக்குதல் சம்பந்தமாகவும் வெளிப்படையாகப் பேசும் நிலைமை வலுவடைந்துள்ளது.

சுருங்கச்சொன்னால் கொரொனா பேரனர்த்தமானது பனிப்போர் காலத்தின் பின்னரிலிருந்து தமது விருப்பத்திற்கு மாறாக ஓர் ஒற்றை வழிப்பாதையில் பயணஞ்செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட உலகின் பல்வேறு நாடுகளையும் அரசுகளையும் அப்பாதையிலிருந்து விலகிச் சிந்திப்பதற்கான,புதிய பாதைகளை உருவாக்குவதற்கான வெளிகளைத் திறந்து கொடுத்துள்ளதை நாம் தற்போது அவதானித்து வருகின்றோம்.

இத்தகைய சூழலில் புதிய பாதைகளை வகுக்க முனையும் நாடுகளுக்கும், அரசுகளுக்கும், தேசங்களுக்கும் அடிப்படை வழிகாட்டியாக காலனீயநீக்க சிந்தனைகளும் செயற்பாடுகளும் அமைந்திருக்க வேண்டியது இன்றியமையாததாகும். குறிப்பாக மேற்குலகின் காலனித்துவ ஆக்கிரமிப்பிற்குள் அகப்பட்டிருந்து காலனியச்சிந்தனைகளைக் காவும் வளர்முகநாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகளும்,அரசுகளும் இன்றைய பொருளாதார மறுசீரமைப்புக் காலத்தில் காலனீயநீக்கச் சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் ஆதாரமாகக்கொண்டு புதிய திட்டங்களைத் தீட்ட வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.

ஏனெனில் இதுவரை காலமும் வளர்முகநாடுகள் என அழைக்கப்படும் அரசுகளின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் காலனித்துவ ஆக்கிரமிப்பை மேற்கொண்ட நாடுகளைச் சேர்ந்த (மேற்கு ஐரோப்பிய மையம்) ஆய்வறிவாளர்களதும் கருத்துருவாக்கிகளதும் செல்வாக்கே பெருந்தாக்கஞ்செலுத்தி வந்துள்ளன.

இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு விடயம் காலனித்துவத்தின் நேரடியான ஆக்கிரமிப்பிலிருந்து காலனித்துவத்திற்குள் அகப்பட்டிருந்த நாடுகள் விடுதலையடைந்ததன் பின்னர் இத்தகைய நாடுகளில் முற்போக்கான சக்திகள் எழுச்சிபெற்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி பெரும்பாலும் மக்கள்மைய ஆட்சியியலை முன்னெடுத்த சூழலில் அத்தகைய அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டு அந்நாடுகள் எதேச்சாதிகார ஆட்சிகளின் கீழ் கொண்டுவரப்பட்ட வரலாறு கவனத்திற்குரியது.

இந்நாடுகளின் ஆட்சியதிகாரங்கள் ஏன் கவிழ்க்கப்பட்டன? எவ்வாறு கவிழ்க்கப்பட்டன என்பதை ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்கின்ற நூலை எழுதியுள்ள ஜாண்பேகின்ஸ் அவர்களுடைய வாக்குமூலங்கள் மிக விளக்கமாகக் கூறிநிற்கின்றன.

இதேபோல் மேற்குலகின் காலனித்துவ ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகள் உலகில் பனிப்போர் நடைபெற்ற காலத்தில் இந்த ஆதிக்கப்போரினுள் அகப்பட்டு சீரழிவதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்காக உருவாக்கிய அணிசேரா நாடுகளின் அமைப்பும் அதன் இலக்கு நோக்கி நகராமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே கடந்த உலக வரலாற்றில் உலகசனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானோர் வாழும் வளர்முகநாடுகள் எனப்படும் அரசுகளும் தேசங்களும் தமது தலைவிதியைத் தாமே தீர்மானித்து அதற்கான கட்டமைப்புக்களை மேற்கொண்டு முன்செல்வதற்கான எத்தனங்கள் தடைப்படுத்தப்பட்ட வரலாற்றுப் பின்புலத்தில் கொரொனா பேரனர்த்தம் மீண்டும் இந்த வளர்முகநாடுகளின் சுயாதீனமான எழுச்சிக்குரிய வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய நீண்ட பின்புலத்தில் அதாவது மேற்குலகின் காலனித்துவம், பனிப்போர்க்கால அனுபவங்கள், உலகமகா யுத்தங்கள்,சர்வாதிகார சோசலிச ஆட்சியியல்,மேற்குலக வடஅமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளின் நவகாலனித்துவ நடைமுறைகள், அதன்  விளைவுகளான தேசியவாதம், மதஅடிப்படைவாதம், ஒடுக்கப்படும் மனிதர்களின் விடுதலைக்கான எழுச்சிகர நடவடிக்கைகள் குறிப்பாக பெண்கள் அமைப்புக்களின் தீவிர எழுச்சி எனப்பல்வேறு அனுபவங்களினதும் திரட்சியாக காலனியநீக்கத்திற்கான கோட்பாடுகளும் நடைமுறைகளும் விருத்திபெற்றுள்ளன.

இக்கோட்பாடுகள் முழுக்க முழுக்க மேற்குலகம் சாராத ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க,ஆசிய கண்டங்களைச் சேர்ந்த ஆய்வறிவாளர்களதும், கருத்துருவாக்கிகளதும்,செயற்பாட்டாளர்களினதும் அனுபவங்களுடன் கூடியது. எனவே நம்மையொத்த அனுபவங்கள் கொண்ட நாடுகளில் வாழும் ஆய்வறிவாளர்களுடைய மிகப்பிந்திய கருத்துக்களைக் கவனத்திற்கொள்ளுதல் நிலைத்து நிற்கும் பொருளாதார சமூக விருத்தியை ஏற்படுத்த மிகவும் துணைநிற்கவல்லனவாகும்.

கலனியநீக்கம் என்பது எம்மிடம் இருந்த தற்போதுவரை இருக்கின்ற வளங்களையும் வாய்ப்பு வசதிகளையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு சுயசார்புகொண்ட ஏற்றத்தாழ்வுகளற்ற புதிய வாழ்வுக்கான புதிய பொறிமுறைகளை புதிய கட்டமைப்புக்களை உருவாக்குவதற்குரிய செயற்பாடுகளை மையமாகக் கொண்ட நடைமுறையாகும்.

அதாவது நம்மிடமுள்ள பாரம்பரியமான பண்பாடுகளை தற்போதைய காலத்திற்குரிய வகையில் கட்டவிழ்ப்புச் செய்து அதன் பலம் பலவீனங்களை இனங்கண்டு பலகீனங்களை நீக்கி பலமான அம்சங்களை வலுப்படுத்தி அவசியம் சேர்த்தேயாக வேண்டியவற்றைச் சேர்த்து மீளுருவாக்கம் செய்வதுடன் சம்பந்தப்பட்ட நடவடிக்கையாகும். இதனையே அடையாள மீட்பு என்று காலனியநீக்கச் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

தேசியங்கள், (மொழி,இனம்,மதம்,பிரதேசம்) பால்நிலை, சூழலியல், பொருளாதாரம்,மருத்துவம்,கல்வி, கலை, போக்குவரத்து, வழக்காறுகள், சட்டங்கள்ää வளப்பங்கீடு,ஆட்சிமுறை, அதிகாரம் எனச்சகல விடயங்களும் நமது பாரம்பரியங்களிலிருந்து இற்றைவரைக்கும் கட்டவிழ்க்கப்பட்டு அவற்றின் நிறைகுறைகள் அலசி ஆராயப்பட்டு தற்போதைய தேவைகளுக்கேற்ற வகையில் முற்போக்கானதாக மீளுருவாக்கஞ்செய்து முன்னெடுப்பதாக இந்த காலனியநீக்கச் செயற்பாடு அமைந்திருக்கும். இது வெளியிலிருந்து வரும் கோட்பாடுகளுக்கும்,நிபந்தனைகளுக்கும், நிர்ப்பந்தங்களுக்கும் கட்டுப்படாமல் அல்லது வெளியிலிருந்து வரும் கோட்பாடுகளின் பரிசோதனைக்களமாகத் தமது நாடுகளை ஆக்காமல் ஒரு நாடோ அல்லது ஒரு மக்கள் திரளோ அதன் தேவைகளுக்கேற்ப சுதந்திரமாக சிந்தித்து தமது எதிர்காலத்திற்கான கட்டமைப்புக்களை வடிவமைத்துச் செயலாற்றுவதற்கான ஆக்கபூர்வமான திசைகள் நோக்கி வழிப்படுத்துகின்றது.

நமது நாட்டிலே வெற்றிகரமாக முன்னகர்ந்த கூட்டுறவுத் துறையின் உருவாக்கமும் விருத்தியும் இதற்கான ஓர் எடுத்துக்காடாக உள்ளது. “ஒருவருக்காகப் பலரும் பலருக்காக ஒருவரும்” என்ற கூட்டுறவுத் தத்துவத்திற்கான அடிப்படை நமது நாட்டின் பாரம்பரியமான மனிதக்குழுமங்களின் கூட்டு வாழ்வியலிலிருந்து உருவாக்கம்பெற்றது. நமது பாரம்பரிய சமூக இயக்கத்தில் குறித்த எண்ணிக்கையான குடும்பங்கள் வாழும் கிராமம் ஒன்றில் பகிர்ந்துண்ணும் வாழ்வு அம்மக்கள் குழுமத்தின் பாரம்பரியப் பண்பாடாக இருந்து வந்தது.

பகிர்ந்துண்ணும் வாழ்வியலே பாதீட்டுப்பண்பாடு எனப்படுகின்றது. இந்தப்பாதீட்டுப் பண்பாட்டின் அடியாகவே கூட்டுறவுத்துறை நம்மத்தியில் தழைத்து வளர்ந்தது. இதை இன்னொரு விதத்தில் சொல்வதென்றால் பொதுவுடமைச் சித்தாந்தம் நமது பண்பாட்டில் கூட்டுறவு இயக்கமாக விருத்தியடைந்தது எனலாம். (ஆனால் நவீன தாராளவாத பொருளாதாரப் பண்பாட்டின் திட்டமிட்ட செயற்பாடுகள் இக்கூட்டுறவுத்துறையினை ஆட்டங்காணச் செய்துள்ளது)

இத்துடன் காலனீய நீக்கமானது ஒரு இனக்குழுமத்தில் உள்ளார்ந்து இருந்துவரும் மேலாதிக்கக் கருத்தியல்களையும் அதுசார்ந்த நடவடிக்கைகளையும் கேள்விகளுக்குள்ளாக்கி அவற்றை நீக்கி முன்செல்வதற்கான தேவைகளையும் வலியுறுத்தி வருகின்றது. அதாவது பாரம்பரியம் என்றும் சம்பிரதாயம் என்றும் தாக்கஞ்செலுத்திக் கொண்டிருக்கும் சாதி ஏற்றத்தாழ்வு, பால்நிலை ஏற்றத்தாழ்வு,நிறவேற்றுமை, வர்க்க ஏற்றத்தாழ்வு முதலிய பிற்போக்கான வாழ்வியல் முறைமைகளை கேள்விக்குள்ளாக்கி அவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிவகைகள் குறித்து மிகவும் அக்கறை செலுத்துகின்றது.

காலனியநீக்கம் என்பது நவீனத்துவத்தைப் போன்று ஒற்றைப்பரிணாமத்தன்மை கொண்டதாகவோ பொதுமைப்படுத்தப்பட்ட பொறிமுறைகளைக் கொண்டதாகவோ அமைந்திருக்கமாட்டாது மாறாக நாடுகளினதும் மக்கள் திரளினதும் பண்பாட்டு வித்தியாசங்களுக்கு,தட்ப வெப்ப நிலைமைகளுக்கு ஏற்ப பல்வகைத்தன்மைகள் கொண்டதாகக் காணப்படும். உதாரணமாக ஒரு விவசாய நாட்டில் மனிதவளம், கால்நடை வளம் நிரம்பிய பிரதேசத்தின் உற்பத்தி முறைமைகள் மனித வளத்தையும் கால்நடை வளங்களையும் முதன்மைப்படுத்தும் விதத்திலும், மனித வளம் குறைந்த பிரதேசங்களில் இயந்திரப்பாவனையினை மையப்படுத்தியதாகவும் மேற்கொள்ளப்படுதலைக் குறிப்பிடலாம். இங்கு ஒரே நாட்டிலேயே வௌ;வேறு உற்பத்தி முறைமைகள் பேணப்படுவதாக இது அமைந்திருக்கும்.

மீளுருவாக்கம் செய்தல் காலனியநீக்க நடைமுறையின் முக்கிய விடயமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, நமது விவசாயத் துறையினை நிலைபேறான வகையில் விருத்தி செய்வதில் பாரம்பரியமாக உள்ள சாதகங்கள், பாதகங்கள் மற்றும் நவீன முறையினால் உருவான சாதகங்கள்,பாதகங்கள் தொடர்பில் ஆழமான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு இன்றைய நிலைமைகளுக்கு எத்தகைய முறைமை பொருத்தமானது என்பதைக் கண்டறிந்து அதனைக் கட்டமைப்பதற்கான பொறிமுறைகளை வலுவாக்கம் செய்யும் போது நமது விவசாயத்துறையினை தேவைக்கேற்ப மீளுருவாக்கிக்கொள்ள முடியும்.

இத்தகைய செயற்பாட்டில் விவசாயத்துறையில் சம்பந்தப்படும் சகல நபர்களினதும் பங்குபற்றுதல் மிகவும் அவசியமானதாக வேண்டப்படுகின்றது. (பாரம்பரிய விவசாயிகள், நவீன விவசாயிகள், விவசாயத்துடன் சம்பந்தப்படும் ஏனைய நபர்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள்) இப்பங்குபற்றுதல் சமத்துவத்துடன் நடைபெறவேண்டியது மிகவும் அவசியமாகும் பங்குபற்றுனர்களிடையே ஏற்றத்தாழ்வை உண்டுபண்ணும் விதத்தில் அமைந்திருந்தால் விளைவு பொருத்தமானதாக அமையமாட்டாது.

இந்த இடத்திலேயே  காலனித்துவம் கட்டமைத்துள்ள காலனிய மனப்பாங்கிலிருந்து நாம் எம்மை விடுவித்தல் அவசியமாகின்றது. அதாவது பாரம்பரியமான அறிவு திறன்களுடன் இயங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களைக் காலனிய மனப்பாங்கு அறிவற்றவர்கள்,பாமரர்கள் எனப்பதிவாக்கி வைத்துள்ளது. இதன்காரணமாக விவசாயம் சம்பந்தமான உயர்மட்டக் கலந்துரையாடல்களுக்கு அவர்களை அழைக்க முடியாதநிலை வலுவாகவுள்ளது. ஒரு விவசாயி தனது அனுபவங்களைக்கூட விவசாயத்தைக் கற்கும் மாணவர்களிடையே கூறமுடியாத நிலைமையினை நவீன அறிவு வலுவாக வைத்துள்ளது. ஆகவே காலனியநீக்கம் என்பது ஒவ்வொரு துறைசார்ந்தும் நவீன அறிவு கட்டமைத்துள்ள ஏற்றத்தாழ்வை நீக்கி முன்செல்வதாக அமைந்திருக்கும் பண்பினையுடையதாகவுள்ளது.

இதன்காரணமாக காலனீயநீக்க செயற்பாடுகளில் பாரம்பரியமான உள்@ர் அறிவு திறன் ஆக்க முன்னெடுப்புக்கள் பிரதானம் பெற்று வருகின்றன. அதாவது நவீன அறிவு கவனத்திற்கொள்ளாது வேண்டுமென்றே தட்டிக்கழித்த, பொய்களைப்புனைந்து அழித்தொழித்த ஒரு மக்கள்திரளின் பாரம்பரியமான அறிவு ஞானங்களை மீளுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளை காலனீயநீக்கம் பிரதானப்படுத்துகின்றது.

ஆதிக்குடிகளின் வாழ்வியல் முறைமைகள் பற்றிய அக்கறைä,பாரம்பரியமான நிகழ்த்து கலைகளின் பல்பரிமாண நிலைமைகள்,பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கம், பாரம்பரியமான சேமிப்பு முறைமைகள், பாரம்பரிய விவசாயம் அதன் உற்பத்தி முறைமைகள் அவற்றில் கடைப்பிடிக்கப்படும் சமூக அறம், பாரம்பரிய வைத்திய முறைமைகள் அதன் பயில்வு முறைமைகள் அவற்றில் கடைப்பிடிக்கப்படும் அறம்,தலைமுறை தலைமுறையாக பயில்வு நிலையில் பரிசோதனையில் இருந்து வருகின்ற பாரம்பரிய வாழ்வியலின் விஞ்ஞானபூர்வ உண்மைத்தன்மை  எனப்பல்வேறு விடயங்கள் குறித்த அக்கறைகளுடன் அவைபற்றிய ஆராய்ச்சிகள் முக்கியம்பெற வேண்டியதை காலனியநீக்கம் முதன்மைப்படுத்துகின்றது.

இதன்காரணமாக பாரம்பரிய அறிவு ஞானங்களில் துறைபோர்ந்த நபர்களும் அவர்களது அனுபவப்பகிர்வுகளும் பிரதானம் பெற்று வருகின்றன உதாரணமாக ஈழக்கூத்தரங்கில் 2002 களின் பின்னரான காலத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் கூத்துமீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச்செயற்பாடும் அது முன்மொழியும் காலனீயநீக்க அணுகுமுறைகளும் குறிப்பிடத்தக்கன இதனைத்தொடர்ந்து அண்ணாவிமார்கள்,பாரம்பரிய பட்டிக்காரர்கள்,பாரம்பரிய வைத்தியர்கள், பாரம்பரிய மருத்துவிச்சிகள் முதலானோர் உயர்கல்வி நிலையங்களுக்குள் வந்து துறைசார் உரையாடல்களில் பங்குகொள்வதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு பாரம்பரிய அறிவு ஞானங்களில் துறைபோர்ந்த நபர்களின் பங்களிப்பு வலுவாகவும் அதிகமாகவும் மாறும்போதுதான் காலனியநீக்கத்துடனான புதிய ஓழுங்கமைப்புக்களை ஆக்கிக்கொள்ள முடியும். என்பதை காலனியநீக்கச் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகிறார்கள். இயற்கைக்கும் மனிதருக்கும் பாதகமான விளைவுகளைத்தரவல்ல நவீன விவசாயத் தொழில்நுட்பங்களை அறிமுகஞ்செய்யும் போது பாரம்பரியமான விவசாய நிபுணர்களின் கருத்துக்களை கவனத்திற்கொள்ளாமை பற்றியும் சிலதசாப்தகால பட்டறிவின் பின்னர் நவீன தொழில்நுட்பங்களால் உருவான பாதகங்களை எடுத்துக்காட்டி ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி வருத்தப்படும் நவீன அறிஞர்களின் கதைகள் பற்றியும் காலனீய நீக்கச்செயற்பாடுகள் கவனஞ்செலுத்துகின்றன.

காலனிய நீக்கத்திற்கான புதியகட்டமைப்பாக்குதலில் காலனியநீக்க கருத்துவிளக்கங்கொண்ட ஏற்பாட்டாளர்கள்ää இணைப்பாக்குனர்கள் என்போரின் தேவை இன்றியமையாததாக வலியுறுத்தப்படுகின்றது. இத்தகையோரின் வகிபாகம் செயற்பாட்டாளர் எனும் தன்மை பெற்றதாக அமைந்திருக்கும். பொருத்தமான மீளுருவாக்கத்திற்குரிய இணைப்பாக்கம் இங்கு வேண்டப்படுகின்றது. இணைப்பாக்குனர்கள் பங்குகொள் ஆராய்ச்சியாளர்களாக ஈடுபட்டு நிறைவில் தமது பரிந்துரைகளை வழங்குவதாக இது அமைந்திருக்கும்.

இவ்விதமாக ஒவ்வொரு துறைகள் சார்ந்தும் காலனியநீக்கம் எனும் நோக்கத்துடன் கட்டவிழ்த்தல்களும் ஆராய்ச்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டு ஒரு கட்டத்தில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்படும் போது எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் நிலைபேறான வளம்மிக்க நாடாக நாம் எம்மை மாற்றிக்கொள்ள முடியும்.