காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் – நவீன் திஸாநாயக்க

161

13ஆவது திருத்தத்திற்கு அமைவாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தமிழர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று அமைச்சரும், காலம்சென்ற காமினி திஸாநாயக்கவின் புதல்வருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும், சிங்கள மக்களிடம் இதுதொடர்பாக தெளிவூட்டி, இலகுவாக இதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “80களில் இருந்த நிலைமை தற்போது இல்லை. நாம் இளைய தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள்.

எமக்கு தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைத் தொடர்பாகவும் நன்றாக தெரியும். எனவே, தமிழர்களின் காணிகளை அரசாங்கத்துக்கு சொந்தமாக மாற்றவோ, அதனை அபகரித்து வேறு தேவைகளுக்கு பயன்படுத்தவோ நாம் எந்தக் காரணம் கொண்டும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை.

தமிழர்களுக்கு தேவையான அரசியல் உரிமையையும் பெற்றுக்கொடுக்க வேண்டியது தற்போதைய நிலைமையில் அவசியமாக இருக்கிறது.

அத்தோடு, 13ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள அனைத்து அதிகாரங்களையும் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட யோசனையாக இருக்கிறது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சினைக்கு இலகுவாக தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றே கருதுகிறேன். இதுதொடர்பாக சிங்கள மக்களுக்கு தெளிவூட்டி, சர்வஜன வாக்கெடுப்புடன் ஒரு தீர்வினை முன்வைக்க முடியும். இதுதொடர்பான நம்பிக்கையும் எமக்குள்ளது” என மேலும் தெரிவித்தார்.