காணாமல் போன தென்கொரிய, சியோல் நகர மேயர் சடலமாக மீட்பு

35

தென்கொரிய நாட்டின் தலைநகரான சியோலின் மேயராக செயற்பட்டு வந்த பார்க் ஒன் சூன் மீது அவரின் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு தென்கொரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் தனது தந்தையை காணவில்லை எனவும், அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் பார்க்கின் மகள் கடந்த புதன்கிழமை பொலிசில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து காணாமல்போன பார்க்கை தேடும் பணியில் சியோல் நகர பொலிசார் 600 பேர் ஈடுபட்டிருந்தனர். கண்காணிப்பு கமரா, செல்போன் சிக்னல் ஆகியவற்றின் உதவியோடு 7 மணி நேரம் தேடுதல் நடத்தினர். இதையடுத்து மாயமான பார்க் ஒன் சூன், சங்பக் மலைப்பகுதியில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். தன்மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்த அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

அவர் இறப்பதற்கு முன்னர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் பார்க்கின் அலுவலகத்தில் இருந்து பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அந்தக் கடிதத்தில் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். “எனது வாழ்க்கையில் இருந்த அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தினரிடம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு நான் மிகுந்த வலியைக் கொடுத்து விட்டேன். நான்போகிறேன்” என எழுதி வைத்துள்ளார்.