காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கைக்கு வெளியே பொறிமுறை ;புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்

185
8 Views

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதியை வழங்குவதற்காக இலங்கைக்கு வெளியே பொறிமுறையை அமைக்குமாறு நான்கு புலம்பெயர் அமைப்புக்கள் சர்வதேச சமுகத்திடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

சர்வதேச காணாமலாக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழ் காங்கிரஸ், அமெரிக்க தமிழர் செயற்பாட்டு குழு ஆகிய நான்கு புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் 900நாட்களுக்கு அதிகமாக தமது வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கும் தாய்மார்கள் உள்ளிட்ட உறவினர்களுக்கு நாம் பூரண ஆதரவினை வழங்குகின்றோம். அத்துடன் புலம்பெயர் நாடுகளில் தயாகத்தில் போராடும் உறவுகளுக்காக குரல்கொடுப்பவர்களுக்கும் எமது ஒத்துழைப்புக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சர்வதேச மன்னிப்புச்சபையின் தகவல்களில் பிரகாரம் 1980ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் இலங்கையில் மூவின சமூகத்தினையும் சேர்ந்த 60ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரையிலானவர்கள் காணமலாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40ஆயிரம் முதல் 80ஆயிரம் பேர் வரையிலானவர்கள் தமிழர்களாக காணப்படுகின்றார்கள்.

காணமலாக்கப்பட்டவர்கள் பற்றி ஆராய்வதற்காக 2015ஆம் ஆண்டு இலங்கைக்குச் சென்றிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழுவானது பல்வேறு ஆராய்வுகளைச் செய்திருந்தது. காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் அக்குழு குறிப்பிட்டிருந்தது.

மேலும் அண்மையில் இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக இறுதி போரில் பங்கேற்றிருந்த சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இறுதிப்போரில் பல்வேறு கட்டளைகளை வழங்கியவர். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டடிலும் காணப்படுகின்றன. மிக முக்கியமாக சரணடைந்தவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு சவேந்திர சில்வாவின் கீழ் இயங்கிய படைப்பிரிவினர் காரணமாக இருந்துள்ளனர்.

மேலும் அவர் சரணடைந்தவர்கள் குறித்து பொறுப்புக்கூறவேண்டிய ஒருவராகவும் உள்ளார். அவ்வாறான நிலையில் அவரது நியமனமானது, காணமல்போன உறவினர்களின் போராட்டத்தினையும் அவர்களது கோரிக்கையும் அவமரியாதைக்குட்படுத்துவதாகும்.

போர் நிறைவடைந்து பத்து ஆண்டுகளாகின்ற போதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவற்குரிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. 40.1தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவற்கு கால அவகாசமும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலையில் போரின் இறுதியில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது, காணமலாக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்பது குறித்து உரிய பதில்களை அரசாங்கம் அளிக்க வேண்டும். ஆனால் அதுகுறித்த முற்போக்கான செயற்பாடுகள் எவற்றையும் முன்னெடுக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடியவில்லை.

ஆகவே நீதிக்காகவும், உண்மைகளை கண்டறியவும் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கும் உறவுகளுக்கு பொறுப்பான பதிலளிப்பதற்காக இலங்கைக்கு வெளியே நீதிவழங்குவதற்கான பொறிமுறையொன்றை ஸ்தாபிக்குமாறு சர்வதேச சமுகத்திடம் கோருகின்றோம். தாமதமின்றி இக்கட்டமைப்பினை உருவாக்க வேண்டும் என்றும் நாம் கோருகின்றோம் என்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here