காட்டப்படாத காட்சிகளும் கண்டுகொள்ளப்படாத வலிகளும்- சுடரவன்

372
7 Views

உலகெங்கும் பல்வேறு காரணங்களால் பறிக்கப்படுகின்ற  மில்லியன் கணக்கான மனித உயிர்கள் தொடர்பில் நாம் வாழும் தற்போதைய மனித சமூகம் அதிக அக்கறை கொள்வதில்லை. ஆனால் தற்போதைய கொரோனா மரணங்கள் தொடர்பில் உலகநாடுகள் அலறித்துடித்து ஒப்பாரி வைத்து அழுகின்றன. ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு  உலகில் வேறெந்த செய்திகளும் இல்லை  என்பது போல் இவை தொடர்பான செய்திகளை அள்ளிக் கொட்டுகின்றன.

இந்த நாட்டில் இத்தனை பேருக்கு தொற்று, இத்தனை பேர் மரண மடைந்துள்ளனர் என்ற செய்திகள் கிறிக்கெற் விளையாட்டின் நேரடி வர்ணனை போல அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகில் கொரோனா தொடர்பான மரணங்களை விட இது போன்ற அல்லது இதையும் விஞ்சிய அளவிலான மரணங்கள் நிகழவில்லையா?

உலகில் ஒவ்வொரு நாளும் பட்டினி, தொற்று நோய்கள் போன்றவற்றால் கொரோனா மரணங்களைவிட பன்மடங்கு அதிகமான மரணங்கள் நிகழ்கின்றனவே. ஏன் அவைபற்றி எதுவும் அதிகமாக பேசப்படுவதில்லை? ஏன் கொரோனா பற்றிமட்டும் இன்று இத்தனை ஆர்ப்பாட்டம் ?

இன்றைய கொரோனா பரவலானது, அதிகளவில் ‘பணக்கார நாடுகளை’ ,‘பலம்வாய்ந்த நாடுகளை’ பதம்பார்த்துள்ளதன் விளைவே இது. இந்த பலத்த சலசலப்புகள் ஒன்றும்  மனித உயிர்கள் பற்றிய கரிசனைகள் தொடர்பானவை அல்ல. முதலாளித்துவத்தின் முள்ளந்தண்டு பலவீனப்படுகின்றதே என்ற ஆதங்கத்தின் விளைவு.

சீனாவில்  இந்த  ஆண்டு  சனவரி 11 அன்று கொரோனா  வைரஸ் தாக்கத்தினால் முதல் மரணம் பதிவாகியது. இன்றைய  நிலையில் உலகளாவிய ரீதியில் நாளொன்றிற்கு  நிகழும் கொரோனா வைரஸ் தொடர்பிலான மரணங்களின் தொகை அண்ணளவாக  1,500 என கொள்ளலாம்.

ஆனால் வருடம் தோறும் 09மில்லியன் மக்கள் பட்டினியாலும் அது தொடர்பான நோய்களாலும் இறக்கின்றனர். இதில் 3.1 மில்லியன், சிறுவர்கள் என்பது மனதை உருக்கும் செய்தி. ஆக இங்கு பட்டினியால் நாளொன்றிற்கு உயிர்விடும் மக்களின் எண்ணிக்கை அண்ணளவாக 25,000 ஆகிறது.

இன்று உலகில் தவிர்க்கக்கூடிய தொற்றுநோய் மரணங்கள் பல மில்லியன்களாக உள்ளன. வயிற்றோட்டம், நிமோனியா என்பவற்றால் பாதிக்கப்பட்டு தகுந்த சிகிச்சை வசதிகள் இன்றி 02 மில்லியன் சிறார்கள் உயிரிழக்கின்றார்கள்.

நிமோனியாவினால் மொத்தம் 2.56மில்லியன் மக்கள் மரணமடைகின்றனர் (2017). இந்த வகையில் ஒரு நாளைக்கு 7,000 பேர் மரணமடைகின்றனர்.

 கசரோகம் (tuberculosis-TB) உலகில் 1.5மில்லியன் உயிர்களை பலிகொள்கிறது. இந்தவகையில் பார்த்தால்  TB தொற்று நோயால் நாளொன்றிற்கு 4000 பேர் பலியாகின்றனர்.

 உலகில் 750 மில்லியன் மக்கள் சுத்தமான குடிநீரை பெறமுடியாத நிலையில் இருக்கின்றனர். போதிய சுத்தமான குடிநீரின்மை, குறைவான சுகாதார நடைமுறைகள் என்பவற்றால் 842,000 மக்கள் இறக்கின்றனர், அல்லது நாளொன்றிற்கு 2,300 பேர் மடிகின்றனர்.

உலகில் வருடம்தோறும் 228மில்லியன் பேர் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். 40;5000பேர் மரணமடைகின்றனர் ((2018). மலேரியாவால் நாளொன்றிற்கு உயிர்விடுபவர்களின் தொகை 1100 என்றாகிறது.

 இதுபோலவே தவிர்க்கக்கூடிய பல்வேறு நோய்களால் உயிரிழக்கும் மக்களின் தொகை பாரியதாகும். ஆனால் இவைபற்றி அநேகமான உலக நாடுகளோ அனைத்துலக அமைப்புகளோ அல்லது ஊடக உலகோ அதிகமாக எதுவும் பேசுவதில்லை. இத்தகைய மரணங்கள் பெரும்பாலும் மூன்றாம் உலகநாடுகள் என்று கூறப்படுகின்ற வறிய நாடுகளிலேயே பெரிதும் இடம்பெறுகின்றன.

இதற்கான காரணங்களாக சிலவற்றை மேலெழுந்தவாரியாக கூறிவிட்டு, ஒப்புக்கு சில நடவடிக்கைகளை எடுத்துவிட்டு, உலக துறைசார் அமைப்புகள் அமைதியாகிவிடுகின்றன.

மேற்குறிப்பிட்ட வகையான பாரிய உயிர்ப்பலிகளுக்கான அடிப்படையான காரணங்கள்   பற்றி  ஆழமாக  ஆராயப்படுமிடத்து,  அவை  இன்றைய  உலக ஒழுங்கை ஒருதலைப்பட்சமாக வடிவமைக்க முயல்கின்ற சக்திகளை குற்றவாளிக் கூட்டில் கொண்டு நிறுத்துகிறது.

இந்த அடிப்படையான காரணத்துக்காகவே இவ்வாறான மரணங்கள் மறைக்கப் படுகின்றன அல்லது இதுதொடர்பில் அடக்கிவாசிக்கும் நடைமுறை கடைப் பிடிக்கப்படுகிறது.

இன்றைய கொரோனா மரணங்கள் தொடர்பில் எடுக்கப்படும் விழிப்புணர்வு செயற்பாடுகள், விரைவு நடவடிக்கைகள், பொருளாதார உதவிகள் போன்ற செயற்பாடுகளை நாம் வேறெந்த காலத்திலும் காணவில்லை. “இது உலகளாவிய நோய்த்தொற்றுநிலை (pandemic)” என காரணம் கூறப்பட்டாலும்  இந்த நோய்த்தொற்றை விட மில்லியன் கணக்கில் உயிர்ப்பலிவாங்கும் பட்டினி  மற்றும் ஏனைய தொற்று நோய்களையிட்டு ஏன் அக்கறை காட்டப் படுவதில்லை என்ற வினாவுக்கு நேர்மையான, உண்மையான பதில் கிடைக்கப்போவதில்லை.

இன்று ஏற்பட்டுள்ள கொரோனா நோயின் தாக்கம் பணக்கார நாடுகளின், முதலாளிகளின் ஆட்சி சராசரி குடிமக்கள் தொடர்பில் கொண்டிருந்த கரிசனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது.

பல நாடுகளில் பணிக்கான கொடுப்பனவுகளை வழங்குவது முடியாததாக உள்ளது.மக்களின் அன்றாட உணவுத் தேவையைக்கூட  கண்டுகொள்ளாமல் பல ஆட்சியாளர்கள்   கசிசனையற்ற நிலையில் அல்லது  கையறு நிலையில் செயலற்றிருக்கின்றனர் .

போதிய மருத்துவக் கருவிகள், அவசர சிகிச்சைக்கான படுக்கைகள், முகக் கவசங்கள், தொற்று நீக்கிகள் இன்றி சிகிச்சைக்கு  வரும்  நோயாளர்கள்  மட்டுமன்றி பெருந்தொகையான மருத்துவர்கள், தாதியர்கள்  நாளாந்தம் மடிந்து கொண்டிருக்கின்ற  செய்திகள்  யாவரையும்  சிந்திக்க  வைக்கின்றன.

நட்பு நாடுகள், பொருண்மிய, படைத்துறை  கூட்டுக்கள் என்றெல்லாம் போடப்பட்ட வேடங்கள் இன்று வெளுத்துப்போய் நிற்கிறன. இங்கிலாந்துக்கு வரும் மருத்துவ பொருட்களை அமெரிக்கா கைப்பற்றிச் செல்கிறது சுவிற்சலாந்துக்கு வரும் மருத்துவ பொருட்களை ஜெர்மனி எல்லையில் தடுக்கிறது. இத்தாலி தான் கைவிடப்பட்டதாக உணர்கிறது.

இந்த நிலைமைகள் இவ்வாறிருக்க, மனிதஇனம்  எதிர்நோக்கியிருக்கின்ற பேராபத்து கண்முன்னே விரிகிறது. பேராசை பிடித்த முதலாளித்துவத்தின் கட்டுமீறிய சுரண்டலின் விளைவாக பூமி கொதித்துப்போய் கிடக்கிறது. வானம் விஷவாயுக்களால் நிரம்பிப்போய் நிற்கிறது.

விளைவு காலநிலை மாற்றம் என்ற பேரழிவு மனித இனத்தை வேரறுக்க ஆரம்பித்துள்ளது. கடும் வறட்சியும், பெரும் வெள்ளப்பெருக்கும்  உலக உணவு உற்பத்தியை கேள்விக்குறியக்கி நிற்கிறது. அத்துடன் காலநிலை மாற்றமானது பல்வேறு நோய்களுக்கும், தொற்று நோய்களுக்கும் காரணமாக அமைவதாகவும் ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன. எனவே எதிர்வரும் நாட்களில் உலகம் மிகக்கடுமையான பட்டினி நிலைமையை, நோய்த்தாக்கங்களின் கடுமையை காணுகின்ற நிலைமை ஏற்படும்.

இனியும் உலக சமூகம் இவற்றை உணர்ந்து மனித சமூகத்தின் பாதுகாப்பில், நலனில் அக்கறைகொண்ட அரசுகளை  நிறுவத் தவறினால், அவ்வாறான சமூகத்தை உருவாக்கத் தவறினால்  இந்த பூமிப்பந்தில்  மனிதவாழ்வு அதிககாலம் நீடிக்கும் என எதிர்பார்க்கமுடியாது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here