கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் மக்கள்..!-கோ-ரூபகாந்

33

வவுனியாவிலிருந்து 22 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்தள்ள கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதி இங்கு 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 உறுப்பினர்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருகிறார்கள்.

உலகம் நாகரீகத்தின் உச்சியை தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் கள்ளிக்குளத்தின் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருக்கும் மக்களின் நிலைமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 30 வருடகாலமாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் ‘காற்றில் அகப்பட்ட பஞ்சு போல்” வடக்குக்கிழக்குத் தமிழ் மக்களை அதிகளவில் பாதித்ததுடன் அவர்களைப் பல வருடங்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டுப் பல்வேறு பகுதிகளுக்கு துரத்தியிருந்தது.உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த அம்மக்கள் யுத்தம் முடிவிற்கு வந்தபின்னர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 11 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் மீள்குடியேற்றம் என்பது கிள்ளித்தெளிக்கும் நடவடிக்கையாகவே இருப்பதாகச் சந்தேகம்கொள்ள வைக்கிறது. கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் குடியிருக்கும் இளம் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் அடிப்படை வசதிகள் ஏதுமின்றியும் குடிப்பதற்கு நீரின்றியும் பெரும் துன்பத்துடன் வாழ்ந்துவருகிறார்கள்.

காட்டு யானைகள்,கரடி மற்றும் பாம்பு போன்ற விலங்குகளின் தொல்லைக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இரவில் ஒன்றாக ஒர் இடத்தில் கூடி உறங்குகிறார்கள். பகலில் தங்கள் கொட்டில்களில் உணவு தயாரித்து உண்கிறார்கள். தங்கள் வீடுகளைக் கற்களாலும் களிமண்ணாலும் அமைத்திருக்கும் மக்கள் இந்த நாகரீக உலகத்தைவிட்டு வெகு தூரத்தில் இருக்கிறார்கள்.

வவுனியாவில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் வீட்டுத்திட்டங்களில் அதிகார துஸ்பிரயோகம் செய்யப்பட்டுப் பல வீடுகள் இன்றும் கட்டப்பட்ட நிலையில் காடுவத்தி வெளவால்களும் குரங்குகளும் வாழ்ந்து வரும் நிலையில் உண்மையில் வீடு தேவைப்படும் மக்கள் காடுகளுக்குள் துரத்தப்பட்டுள்ளனர்.நல்லாட்சி அரசு உருவாகி மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காகவே தனி அமைச்சும் உருவாக்கப்பட்டு வடக்கு மாகாணசபைக்கு அதிகாரங்கள் வழங்ப்பட்ட நிலையிலும் கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் வாழ்ந்துவரும் மக்களின் நிலைமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யுத்தத்தின் கொடுமையால் பல இடங்களிலிருந்து அகதிகளாக வந்த மக்கள் அகதிமுகாம்களிலும்,உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்து கள்ளிக்குளம் கிரமத்தின் காட்டுப்பகுதியில் குடியேறிய பின் அரச அதிகாரிகளிடமும் அரசியல் வாதிகளிடமும் சென்று தங்கள் நிலைமையைத் தெரிவித்தும் இன்னும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதோடு எங்களை அவர்கள் மனிதர்களாகவே மதிக்கவில்லையென கவலையும் வெளியிட்டனர்.

கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் குடியிருக்கும் மக்களிடம் நேரடியாகச் சென்று அவர்களின்நிலைமையை கேட்றிந்தபோது

எஸ். குகதாசன் கருத்துத் தெரிவிக்கையில்,

நுவரெலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் வவுனியாவில் திருமணம் முடித்துள்ளேன். இருப்பதற்கு ஒரு வீடு இல்லாத காரணத்தினால் இந்தக் காட்டுப்பகுதிக்குக் குடி வந்தோம் நாங்கள் அதிகாரிகளிடம் எழுத்து மூலமாக உதவிகளைக் கோரியிருந்தபோதும் அவர்கள் எங்களைக் கண்டுகொள்ளவில்லை. அதன் காரணமாகப் பெரும் பாதிப்பை அனுபவித்து வருகிறோம். அடிப்படை வசதிகள் இல்லாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

யானைகளின் தொல்லை, கரடித் தொல்லையின் மத்தியில் எங்கள் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள் வேலைக்குச் சென்றபின் எங்கள் மனைவி மற்றும் குழந்தைகள் இந்தக் காட்டில் தனியாகவே இருக்கின்றனர் தினமும் பயத்துடனே எமது வாழ்க்கை கழிகிறது எனத் தெரிவித்தார்.

மாணவனான சஞ்சீவன்;

கந்தபுரம் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் நான் ஐந்து கிலோமீற்றர் நடந்தசென்றே கல்வி கற்று வருகிறேன். பாடசாலை உபகரணங்கள் இல்லாதநிலையிலும் சீருடைகள் கிழிந்த நிலையிலும்தான் எனது கல்விப் பயணம் தொடர்கிறது.பாடசாலை செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தரும் பட்சத்தில் என்னால் சாதிக்க முடியும். இந்தக்காட்டுப் பகுதியில் இருப்பதற்கே பயமாக இருக்கிறது எங்களுக்கு வீடு இல்லாத காரணத்தால் வேறு வழியில்லாமல் இருக்கிறோம் எனத் தெரிவித்தான்.

ராமையா சமந்தநாயகி;

முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்து கொழும்பு சென்று பின் அங்கிருந்து வவுனியா வந்து உறவினர் வீடுகளில் தங்கியிருந்து இருக்க இடம் இல்லாத காரணத்தினால் கள்ளிக்குளம் காட்டுப்பகுதியில் கடந்த 9 மாதங்களாக இருந்து வருகிறோம்.அரசாங்க அதிகாரிகளிடம் எங்கள் பிரச்சினைகளை முன்வைத்த போது அதற்கான தீர்வு எங்களுக்கு கிடைக்கவில்லை.

மீள்குடியேறிய மக்களுக்கு அரசிடமிருந்து பல உதவித்திட்டங்கள் கிடக்கப் பெறுவதாக அறிவிக்கப்படுகின்றபோதிலும் எங்களுக்கு எந்தவிதமான உதவித் திட்டங்களும் வழங்கப்படவில்லை. வவுனியா பிரதேச செயலகத்திற்கு சென்று எங்கள் நிலையை எடுத்துக்கூறியபோதும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

குழந்தைகளுடன் காட்டுப்பகுதியில் வாழ்ந்துவருகிறோம். மின்சார வசதிகள் இல்லை. காட்டு யானைகளின் வருகை எங்களுக்குப் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை வசதிகளோ வாழ்வாதார வசதிகளோ இல்லாத நிலையில் மழைக் காலத்தை எதிர்நோக்கியிருக்கிறோம்.

வீட்டை கட்டுவதற்கு தகரமோ அல்லது கிடுகு போன்ற உதவிகளை பிரதேச செயலகத்திடம் கோரியிருந்தோம் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இன்னும் கொட்டில் அமைக்கப்படாத குடும்பங்கள் இருக்கின்றன. கொட்டில் அமைக்கத் தடிகளை வெட்டி வீடு அமைத்துக்கொண்டிருக்கும் தருணத்தில் காட்டு யானைகள் வந்து கொட்டிலை உடைத்து விட்டு சென்றுவிடுகின்றன. எனக் கண்ணீரோடு தெரிவித்தார்.

நிரோசன் தமிழ் நிலா;

யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து உறவினர் வீட்டில் வசித்து வந்த நிலையில் திருமணம் செய்து நான்கு மாத கைக்குழந்தையுடன் வீடில்லாத நிலையில் கள்ளிக்குளம் காட்டுப்பிரதேசத்தில் வசித்து வருகிறேன்.எனது கணவர் கூலிவேலை செய்துவரும் நிலையில் அவர் வேலைக்குப் போனபின் நான் குழந்தையுடன் தனியாகவே இந்தக் காட்டுப்பகுதியில் இருக்கவேண்டிய நிலை இருக்கிறது.

எனது கணவர் வேலைக்குச் செல்லாதவிடத்துக் குழந்தைகளின் செலவு, வீட்டுச் செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகிறோம்.இந்த நிலையில் காடுகளை வெட்டி நாங்களே வீடு அமைத்து இருப்பது எனபது முடியாத காரியமாக இருக்கிறது. எங்கள் எதிர்காலத்தை நினைக்கும் போது பயமாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.

மோகனதாஸ் கிருஸ்டினா;

யுத்தத்தின் காரணமாக கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வந்து உறவினர் வீடுகளில் தங்கியிருந்த நிலையில் இப்போது கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் வசித்து வருகிறோம்.

இன்னொருவரின் கொட்டிலில் தங்கியிருந்துதான் காடுகளை வெட்டித் துப்பரவாக்கி வீடு அமைக்க வேண்டிய நிலையிலிருக்கிறோம் நாங்கள் அரச அதிகாரிகளைக் கேட்பது எங்களுக்கு இந்தக் காணியை துப்பரவாக்கி தாருங்கள் என்று அவர்கள் எங்களையே துப்பரவாக்க சொல்லிவிட்டார்கள்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அலைந்து திரிந்த எங்களுக்கு நிரந்தர வருமானம் இல்லை எனது கணவர் கூலிவேலையே செய்கிறார். எங்களிடம் பணமில்லை. இரண்டு நாட்கள் கூலி வேலைக்குச் செல்லும் எனது கணவர் இரண்டுநாட்கள் காடுவெட்டுகிறார.எங்கள் குடும்ப வாழ்க்கை கண்ணீரின் மத்தியிலேயே செல்கிறது எனக் கவலையுடன் தெரிவித்தார்.

லோறன்ஸ் சசிதேவி;

யுத்தத்தின் காரணமாக கிளிநொச்சியிலிருந்த இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வந்த நிலையில் உறவினர்களின் வீடுகளில் வசித்து வந்த நிலையில் இப்போது கள்ளிக்குளத்தில் வசித்துவருகிறேன.;  எனது கணவர் கடந்த 2000 ஆம் ஆண்டு வேலைக்குச் சென்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டுவிட்டார்.

அதன் பின் எனது ஐந்து குழந்தைகளுடன் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வந்த எனக்கு அரசினால் எந்தவிதமான உதவித்திட்டங்களும் வழங்கப்படவில்லை.கணவன் இல்லாத எனக்குச் சமூர்த்தி உதவிகள் கூட வழங்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சென்று கூட எனது நிலைமையைத் தெரிவித்திருந்தேன.

அவர்கள் எந்தவிதமான உதவிகளையும் எங்களுக்கு வழங்கவில்லையெனத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத்  தெரிவித்த அவர் எனது இரண்டு பிள்ளைகள் மன்னாரில் கிறிஸ்தவ மடத்தில் படித்துவருகிறார்கள். நானும் முன்று பிள்ளைகளும் கள்ளிக்குளம் காட்டுப்பகுதியில் வசித்து வருகிறோம் என தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக உயிரை காப்பாற்ற போராடிய மக்கள் யுத்தம் முடிவடைந்த நிலையிலும் தங்கள் வாழ்க்கைக்கான போராட்டம் முடியவில்லையென விரக்தியோடு தெரிவித்தனர்.

யுத்தகாலத்தில் பயத்துடன் வாழ்ந்ததைப்போலவே இன்றும் இந்த கள்ளிக்குளம் காட்டுப்பகுதியில் எமது குழந்தைகளுடன் தினம் தினம் பயத்துடன் வாழ்ந்து வருகிறோம்.எமது குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது எனத் தெரியவில்லை என ஏக்கத்தோடு தெரிவிக்கும் அம் மக்கள், எமது வாழ்வாதாரத்துக்கு ஏதும் உதவிகள் கிடைக்காதா என எதிர்பார்த்திருக்கின்றனர்.

இவ்வாறு தாயகத்தில் பல கிராமங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றது. இக் கிராமங்களில் வாழும் மக்களின்  வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் இதுவரை அரசோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களே முன்வரவில்லை. இவர்களின் நிலையறிந்து வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கு புலம் பெயர் உறவுகள் உதவிக்கரம் நீட்டவேண்டும் என்பதே இம் மக்களின் பாரிய எதிர்பார்ப்பாக உள்ளது.