கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் ஆகியோர் அரசாங்கத்தின் மகுடிக்கு ஆடுபவர்களே கஜேந்திரன் குற்றச்சாட்டு

15

கருணா, பிள்ளையான், மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் அரசாங்கத்தின் மகுடிக்கு ஆடுபவர்களே தவிர அவர்களினால் எந்த முடிவையும் எடுக்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கோப்பாவெளியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், விக்னேஸ்வரன் என்பவர் ஒரு மாயமான் என்றும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி அரசாங்கத்தை பாதுகாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்தார்கள். அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது எனத் தெரியாது. அவர்களின் உறவினர்கள் வீதிகளில் கண்ணீருடன் அலைந்து திரிகின்றனர். அரசியல் கைதிகள் சிறையில் வாடுகின்றனர். இதேவேளை, நாங்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி எந்த அரசாங்கத்தினையும் ஆதரிக்கவோ, எந்தவொரு சர்வதேச சக்திகளின் தேவைக்காவும் நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவினை அரசாங்கத்திற்கு வழங்கப் போவதோ கிடையாது.

அத்துடன் எமது பகுதிகளைத் திட்டமிட்டு புறக்கணித்து எமது மக்களை பொருளாதர ரீதியாக அழிக்க முற்படுகின்ற போது அந்த அரசாங்கத்தின் முகவர்களாக செயற்படுகின்ற வியாழேந்திரன், கருணா, பிள்ளையான் ஆகியோரால் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.

ஏனெனில் இவர்கள் இந்த அரசாங்கத்தின் முகவர்களாவார்கள். அவர்கள் அரசாங்கத்தின் மகுடிக்கு ஆடுகின்றனரே தவிர அவர்களினால் முடிவுகளை எடுக்க முடியாது. அவர்கள் எந்தக் கருத்துக்களையும் சொல்ல முடியாது.

மேலும் சி.வி.விக்னேஸ்வரனை ஆரம்பத்தில் முழுமையாக நம்பினோம். அவரை வைத்துத் தான் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் சமஸ்டியை உருவாக்குவதற்கான அழுத்தத்தினை வழங்கும் வகையிலேயே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. அந்த அடிப்படையில் ஒரு தீர்வுத் திட்டமும் எழுதப்பட்டது.

ஆனால் விக்னேஸ்வரனோ தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக செயற்படுபவர் என தன்னைக் காட்டிக் கொண்டு பேரவை தயாரித்த தீர்வுத் திட்டத்தில் தமிழ் தேசம் இறைமை என்பதை உள்ளடக்குவதற்கு அவர் மறுத்து விட்டார். எனவே விக்னேஸ்வரன் மாயமான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் மக்கள் கொள்கையில் உறுதியாக இருக்கின்ற கஜேந்திரகுமாரிற்குப் பின்னால் வராது, விக்னேஸ்வரனுக்குப் பின்னால் செல்ல வைக்கின்ற ஒரு ஏமாற்று நாடகத்தினை முன்னெடுத்து வருகின்றார்” என்று கூறினார்.