கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சீனாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ரோபோக்கள்

105

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சீன அரசாங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 2 றோபோக்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் போதைப் பொருள் மற்றும் வெடிபொருடகளை இனங்கண்டு கொள்ளும் எனக் கூறப்படுகின்றது.

மேற்படி றோபோக்களை கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி சீனா அன்பளிப்பாக வழங்கியிருந்தது. 750 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த றோபோக்களை சீன அதிகாரிகள் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கியிருந்தனர்.

இந்த றோபோ 5மீற்றர் தூரத்தில் போதைப் பொருட்கள் இருக்குமிடத்து அதனை கண்டறியும் சக்தி வாய்ந்தவை. அத்துடன் உடலில் மறைத்து வைக்கப்பட்டுள்ள வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கண்டுபிடிக்கும் இயந்திரங்களும் இந்த றோபோவில் பொருத்தப்பட்டுள்ளது.

இவ்வகையான றோபோக்களை இலங்கையில் பயன்படுத்துவது இதுவே முதற்தடவையாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த றோபோக்கள் விமான நிலைய பயணிகள் நுழைகின்ற வளாகத்தில் ஒரு றோபோவும், பயணிகள் வெளியேறும் வளாகத்தில் இன்னொரு றோபோவும் வைக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து போதைப் பொருட்களை நாட்டிற்குள் கடத்தி வரும் சம்பவங்கள் அண்மைக் காலங்களில் அதிகமாக நடைபெற்று வருவதால், அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.