ஐ.நா தீர்மானத்தில் இருந்து வெளியேறுகின்றது சிறீலங்கா

21

சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் போது மெற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து நீதியான விசாரணை வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கொண்டுவந்த தீர்மானத்தில் இருந்து வெளியேற சிறீலங்கா அரசு தீர்மானித்துள்ளது.

நேற்று (17) சிறீலங்கா அரச தலைவர் செயலகத்தில் இடம்பெற்ற அசவர கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு சிறீங்கா அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 30/1 மற்றும் 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு சிறீலங்கா அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 40/1 ஆகிய தீர்மானங்களில் இருந்து வெளியேறவே தாம் திட்டமிட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த கூட்டத்தில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா உட்பட பல முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஐ.நா தீர்மானம் கலப்பு நீதிமன்ற விசாரணைகளை கொண்டுள்ளதுடன், அரச தலைவரின் அதிகாரங்களை குறைத்து அதிகாரங்களை பரவலாக்கும் சரத்துக்களையும் கொண்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

மேலும் சிறீலங்கா அரசின் தீர்மானத்தை அடுத்த வாரம் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.