எமது கோரிக்கைகளை காலம் தாழ்த்தி செய்து அதனை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன

279

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஓகஸ்ட் 30 திகதி தாயகத்திலே மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒழுங்குகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்னெடுத்துள்ள நிலையில் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய கருத்துக்கள்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமே ஒரே தீர்வு

வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கனகரஞ்சினி ஜோகராசா

 போர்க் காலத்தில் காணாமல் ஆக்கப் பட்ட உறவுகள் சரணடையும்போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய படையணி ஊடாகவே அவர்களை கையளித் திருக்கின்றோம். தற்போது அவர்கள் காணாமலாக் கப்பட்டிருக் கின்றார்கள். ஆனால் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத்தளபதி பதவி வழங்கப்படுகின்றது. எமது உறவுகள் பற்றிய கேள்விக்கு அவர் பதிலளிப்பதாகவும் இல்லை. நாங்கள் தாயகத்தின் அனைத்து பகுதிகளிலும் எமதுபோராட்டத்தினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.

அவை காலச்சூழலுக்கு ஏற்ப வடிவங்கள் மாறினாலும் நீதிக்கான பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. உள்நாட்டில் அரசாங்கமோ, படைத்தரப்போ எமது விடயங்களுக்கு பதிலளிப்பதாக இல்லை. இந்த நிலையில் தான் நாம் சர்வதேசத்தினை நாடினோம். இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தினோம். எனினும் தமிழ் பிரதிநிதிகள் சிலரின் தலை அசைப்பால் சர்வதேச நாடுகளும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கியிருந்தன. ஆனால் எதுவுமே நடைபெறவில்லை என்பதை இன்று கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது. ஆகவே தொடர்ந்தும் சர்வதேச நாடுகள் பொறுத்துக்கொண்டிருக்க கூடாது.

சரணடைந்து, கடத்தப்பட்டு, விசாரணைக்காக அழைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிரதான பொருளாக கொள்ள வேண்டும். எமது சாட்சிகளுக்கு அமைவாக உரியவர்களை நீதிமன்றின் முன்நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தற்போதே உறவுகளை தேடியவர்கள் நாற்பது பேர் வரையிலானவர்கள் இறந்துவிட்டார்கள். அதுபோன்ற நிலைமை தான் அனைவருக்கும் ஏற்படும் என்றார்.

அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  சங்கத் தலைவி அமலநாயகி,

வலிந்து காணா மலாக்கப்பட்ட உறவுகளை ஒன்றிணைத்து எமது உறவுகளுக்காக நீதிகேட்டு போராட ஆரம்பித்த போது எம்மை புலனாய்வாளர்கள் தொடர்ந் தார்கள்.  காணொளி எடுத்தார்கள். நாம் செல்லுமிடமெல்லாம் பின்தொடர்ந் தார்கள்.

காணாமலாக் கப்பட்ட விவகாரத்தினை கைவிடச் செய்வதற்காக எமக்கு எதிராக பல முயற்சிகளை எடுத்தார்கள். குறிப்பாக என்னை இலக்கு வைத்து திட்டமிட்ட அச் சுறுத்தல்கள், தாக்குல்கள் என அனைத் தையுமே முன்னெடுத் துள்ளார்கள். இறுதியாக என்மீது தாக்குதலையும் திட்டமிட்டு மேற் கொண் டார்கள். எனக்கு புலம்பெயர் தேசங் களிலிருந்து நிதி அனுப் படுவதாக கூறி என்னை கைது செய்வதற்கு விளைந்தார்கள். ஆனால் அவற்றையெல்லாம் கண்டு அஞ்சி எமது நீதிக்கான நியாயமான கோரிக் கையை கைவிடவில்லை.

எமது உறவுக்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கு நாம் எமது உயிர்களை துச்சமென மதித்தே வீதிக்கு இறங்கியுள்ளோம். இதனை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டும். சர்வதேசத்திடமே நீதிகேட்கின்றோம். அவர்கள் எங்களுக்கான உத்தரவாதங்களை தர வேண்டும். நாம் ஒன்றிணைந்து போராட்டத்தினை முன்னெடு த்து சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்ப்போம் என்பதில் மாற்றமில்லை என்றார்

நாமும் காணாமலாக்கப்படும் ஆபத்துள்ளது

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  சங்கத் தலைவி மதியசுரேஸ்  ஈஸ்வரி.

போர்க் குற்றங்களுடன் தொடர்புடைய  இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப் பட்டுள்ள நிலையில் அத்தகைய தொருவர் சனாதி பதியாக வந்தால்  எம்முடைய உறவு களைத் தேடிப் போராடிக் கொண்டிருக்கின்ற நாங்களும் காணா மலாக்கப்படும் நிலையே ஏற்படும். சனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்மை முழுமையாக ஏமாற்றிவிட்டார். காணி விடுவிப்பு, காணாமல்போனோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த அவரின் பதவிக்காலம் முடிவடையப் போகிறது.

மஹிந்தவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி அரசாங்கம் அமைத்ததைப் அவர் மீண்டும் ராஜபக்சவிடத்திலேயே ஒப்படைத்துவிட்டுப் போகப்போகிறார். கடந்த மூன்று வருடகாலமாக எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியிருக் கிறோம். எமது பிரச்சினைக்கு எவ்வித நிரந்தர தீர்வும் பெற்றுத்தரப்படாத அதேவேளை, சர்வதேசமும் எமது போராட்டங்கள் தொடர்பில் பாராமுகமாகவே இருந்து வந்திருக் கிறது. எதிர்காலத்தில் சர்வதேசமும் எம்மை கைவிடும் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட இடமளிக்க கூடாது என்றார்.

.நா தீர்க்கமான பதிலளிக்க வேண்டும்

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  சங்கத் தலைவி  தம்பிராசா செல்வராணி,

தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான போராட்டத்தை மேற்கொண்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகளாகிய நாம் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பின்னர் எமது போராட்ட வடிவத்தினை மாற்றியுள்ளோம்.

சர்வதேச காணா மலாக்கப்பட்ட தினமான ஓகஸ்ட் 30ஆம் திகதியை ஒவ்வொருமாதமும் நினைவு கூர்ந்து மாதாந்தம் 30 ஆம் திகதிகளில் கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் கொல்லப் பட்டவர்களுக்கும் காயமடைந் தவர்களுக்கும் அரசாங்கம் உடனடியாக இழப்பீடுகள் மற்றும் கொடுப்பனவுகள் என்பனவற்றை ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் போர் நிறைவடைந்து பத்து வருடங்கள் சென்றுள்ள நிலையிலும் ஏன் எமது உறவுகளை தேடிக்கண்டு பிடிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவில்லை.

நாம் தமிழர்கள் என்பதால் எமக்கு ஒரு நீதியும் பெரும்பான்மையினருக்கு ஒரு நீதியுமாகவே உள்ளது.  இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்திலாவது பாராமுகம் காட்டாது. சரி சமமாக நடக்க வேண்டும். ஐ.நாவின் அமர்வில் யுத்தக்குற்றம் தொடர்பாகவும், காணாமலாக்கப் பட்டவர்கள் தொடர்பாகவும் சரியான முறையில் விசாரணை செய்து ஒரு தீர்க்கமான முடிவினை பெற்றுத்தரவேண்டும் என்றார்.

அனைவருமே ஏமாற்றி விட்டார்கள்

திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  சங்கத் தலைவி    செல்வராஜா சறோஜாதேவி

காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவிதமான பதிலையும் வழங்கவில்லை. எனினும் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக அதுவே எமக்கான நியாயமான தீர்வை வழங்கும் என்றும்  நம்பியிருந்தோம். ஆனால் அவை எதுவுமே நடைபெறவில்லை.  இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிய சர்வதேசமும் எம்மை ஏமாற்றிவிட்டதாகவே உணர்கின்றோம். சிங்கள பௌத்தவாத அரசினால் எமக்கான தீர்வினை நீதியினை வழங்கமுடியாது என்பதனை சாதாரண மக்களாகிய நாம் புரிந்து கொண்டுள்ளோம்.ஆயினும் ஐக்கியநாடுகள் சபையும் சர்வதேச நாடுகளும் அதனை புரிந்து கொள்ளவில்லை

மஹிந்த காலத்தில் மட்டுமல்ல தற்போதைய ஆட்சியிலும் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. காணாமலாக் கப்பட்டோர் தொடர்பான பட்டியல் வெளியிடப்படவில்லை, அலுவலகத்தினை அமைத்து அனைத்தையும் முடக்குவதற்கு முயற்சிக்கின்றர்கள். நீதி வழங்கல் தொடர்பாக மௌனம் சாதிக்கின்றனர். திட்டமிட்ட குடியேற்றங்கள், பௌத்த ஆக்கிரமிப்புக்கள், பாரம்பரிய வரலாறுகளை மாற்றுகின்றமை ஐக்கியநாடுகள் சபையின் இனவழிப்பு தொடர்பான வரைவிலக்கணத்தின் படி மேற்படி செயற்பாடுகளும் கட்டமைக்கப்பட்டஇன அழிப்பு செயற்பாடுகளே என்றார்.

காலம்கடத்தி மழுங்கடிக்க முயற்சி

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  சங்கத் தலைவி    சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா

நாங்கள் காணாமல் போன எங்களுடைய பிள்ளைகளை தேடிஅலைகின்றோம். ஆனால் இலங்கை அரசாங்கங்கள் இந்த விடயத்தினை காலம்கடத்தவே முயல்கின்றன.

எமது விடயத் தினை பொருட்டாகவே கருதாது இருந்து வருகின்றார்கள். நாங்கள் ஆடு, மாட்டை படையினரிடம்  கொடுக்கவில்லை. எங்களிடம் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்பதற்கு இடமே இல்லை.

எமது உறவுகள் இருக்கின்றனரோ, இல்லையோ? தற்போது இருக்கின்ற உறவுகளை விடச் சொல்லியே கேட்கின்றோம். அவர்கள் இல்லை என்றால் அவர்களை என்ன செய்துள்ளனர். ஏன்? எதற்காக எமது உறவுளை பிடித்துக்கொண்டு சென்றனர். அவர்களை என்ன செய்துள்ளனர். இவற்றுக்கான பதில்களை நீதியுடன் கூறவேண்டும். இலங்கை அரசில் நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே ஐ.நாவை நம்பியுள்ளோம். இருப்பினும் தற்போது வரையில் அரசாங்கம் எதனையுமே செய்யவில்லை.  எனவே ஐ.நா சபை இலங்கை அரசாங்கத்துக்கு இனியும் கால அவகாசம் வழங்கக் கூடாது. இந்தவிடயத்தில் உடனடியாக காத்திரமான நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும் என்றார்.

கால அவகாசம் வெறும் கண்துடைப்பே.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  சங்கத் இணைப்பாளர் திருமதி சரோஜா சண்முகம்பிள்ளை

எமது பிள்ளைகளை தொலைத்து 10 வருடங்கள் கடந்தும் இன்றுவரை தீர்வில்லை. இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. கண் துடைப்புக் காக காணாமல் போனோர் அலுவலகத்தை இலங்கை அரசுஆரம்பித்தது. இதைப்போலவே கடந்தகாலங்களில் பல ஆணைக்குழுக்களை அமைத்து எம்மை ஏமாற்றினார்கள். எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கியது போன்று எம்மைகாணாமல் போக செய்வதற்காக மிகுதியாக உள்ள எம்மை எமது குடும்பங்களின் விபரங்களையும் பதிவு செய்தார்கள்.  என எண்ணத்தோன்கிறது. ஏனெனில் கால அவகாசம் கொடுத்தததற்கு ஏற்றவாறு எந்த நன்மையும் தீர்வும் எமக்கு வழங்கப்படவில்லை.

எமது பிள்ளைகள் உயிருடன் இருக்கிறார்கள்  என்ற நம்பிக்கையில் போராடு கிறோம். சர்வதேசம் இலங்கை அரசுக்கு இனியும் கால அவகாசம் வங்கக் கூடாது. எமது பிள்ளை களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரிய வேண்டும். என்பதுடன் எமக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் உடனடியாக சர்வதேசம் தலைதலையிட்டு எமக்கு நீதியை பெற்றுத் தரவேண்டும்.

சர்வதேசம் உடன் தலையிட வேண்டும்

யாழ். மாவட்டவலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  சங்கத் தலைவி இளங்கோதை.

எமது உறவுகளை தேடிய போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எமது ஒவ்வொரு போராட்டங்களைம் முடக்கி எமது நீதிக் கோரிக்கையை அமிழ்த்தி விடுவதே தென்னிலங்கை பௌத்த சிங்களவாத தரப்புக்களின் அடிப்படை நோக்கமாக இருக்கின்றது என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. யாழில் காணாமலாக்கப் பட்டவர்களுக்கான அலுவலகம் திறக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் எத்தனையோ ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் முன்னிலையில் நாங்கள் சாட்சியங்களை வழங்கியிருந்தோம். எமது சாட்சியங்கள் வெறுமனே வாக்குமூலங்கள் போன்று பதியப்பட்டனவே தவிர அவை அனைத்துமே கண்துடைப்பு நாடகங்களே. காணாமலாக்கப்பட்டவர்கள் அலுவலகம் பற்றிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு இத்தனை காலத்திற்கு பின்னரே கிளைகள் நிறுவப்படுகின்றன. அதிலேயே இத்துணை தாமதங்கள் என்றால் ஆயிரக்கணக்கில் இருக்கும் எமது உறவுகளின் முறைப்பாடுகளை அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தி தீர்ப்பளிப்பது எப்போது?

எமது கோரிக்கைகளை காலம் தாழ்த்தச் செய்து அதனை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகள் ஆகின்ற நிலையில் இனியும் உள்நாட்டில் இந்த விடயங்கள் சரியாக கையாளப்படும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. ஆகவே சர்வதேச தரப்புக்கள் உடனடியாக தலையீடு செய்து இவ்விடயதிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.