எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை(செவ்வி) – அமலநாயகி

256

உயிரை துச்சமென மதித்தே உறவுகளை தேடி வருகின்றோம். எம்மீதான தாக்குதலால் எமது உறவுகளுக்கான போராட்டத்தை தடுத்துவிட முடியாது. ஐ.நா.மன்றத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினத்தன்று திட்டமிட்டபடி கிழக்கில் போராட்டம் நடைபெறும். என்னால் எழுந்து நடக்க முடியாது விட்டாலும் நொண்டி நொண்டியாவது நானும் அதில் பங்கேற்பது உறுதி என்று வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் துணைத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவருமான அமலநாயகி தெரிவித்தார்.

கடந்த ஆறாம் திகதி மட்டக்களப்பு உன்னிச்சை வீதியில் பயணத்துக் கொண்டிருந்தபோது திட்டமிட்ட முறையில் விபத்துக்குள்ளாக்கப்பட்ட வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் துணைத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவருமான அமலநாயகி இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு…

கேள்வி:- உன்னிச்சைப் பகுதியில் நீங்கள் பயணத்துக்கொண்டிருந்தபோது திட்டமிட்டே விபத்து சம்பவிக்கப்பட்டதாக எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள்?

பதில்:- நான் மரண வீடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக உந்துருளியில் எனது மகளுடன் மட்டக்களப்பு உன்னிச்சை வீதியில் பயணித்துக் கொண்டிருந்தேன். அச்சமயம் எதிர்த்திசையில் உந்துருளியில் மூன்று பேர் வந்தார்கள்.  அவ்வாறு வந்தவர்கள் எம்மை நோக்கி தமது உந்துருளியை வேகமாக செலுத்தினார்கள். திடீரென விரைந்து நாம் பயணித்த வீதியின் மறுபுறத்துக்கு வந்தவர்கள்  எனது உந்துருளி மீது மோதினார்கள். நானும் எனது மகளும் அந்த இடத்திலேயே விழுந்துவிட்டோம். நாம் கூச்சலிட்டோம். பின்னர் அவர்கள் எம்மை அச்சுறுத்தும் நோக்கத்துடன் பார்த்துவிட்டு அங்கிருந்து விரைவாக மறைந்து விட்டார்கள்.

கேள்வி:- உந்துருளில் வந்தர்வகள் யார் என்பதை அறிவீர்களா?

பதில்:- எனக்கு மூவரையும் தெரியாது. ஆனால் உந்துருளியில் வந்தவர்களில் ஒருவர் புளட் அமைப்பினைச் சேர்ந்த முக்கியஸ்தரான மோகன் என்பவரின் மைத்துனராவார். ஏனைய இருவர் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் தெரியாது. ஆனால் எம்மை மோதிவிட்டு தப்பிச் சென்றவர்களில் ஒருவரை பிரதேச இளைஞர்கள் மடக்கிப்பிடித்த சமயத்தில் ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். பிடிபட்ட நபர் மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கேள்வி:- காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா?

பதில்:- இந்த விபத்துச் சம்பவம் சம்பந்தமாக என்னிடத்தில் வாக்குமூலம் பெறுவதற்காக காவல்துறையினர் வந்தனர். அப்போது கைது செய்யப்பட்டவர் யார் என்று கேட்டபோது காவல்துறையினர் அவர்கள் தொடர்பில் பூரணமான தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர். கைது செய்யப்பட்டவர் களுவாஞ்சிக்குடி நீதவானின் முன்னால் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஏனையவர்களை தேடிவருவதாக கூறினார்கள். ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு என்னை அழைக்கின்றபோது மன்றில் ஆஜரா குமாறு கூறிச்சென்றனர். எனது  உந்துருளி காவல் நிலையத்திலேயே உள்ளது.

கேள்வி:- உங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதற்காக இச்சம்பவம் இடம்பெற்றதென்று கருதுகின்றீர்களா?

பதில்:- என்னால் முழுமையாக அவ்வாறு கூறமுடியவில்லை. ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சேர்ந்த எமது  உறவுகளை ஒன்றிணைத்து திட்டமிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை மீட்பதற்கான போராட்டங்களை ஆரம்பித்தபோது சிறீலங்கா புலனாய்வாளர்கள் என்னை படம்பிடித்தார்கள். காணொளி எடுத்தார்கள். நான் செல்லுமிடமெல்லாம் என்னை பின்தொடர்ந்தார்கள். எனது அயலவர்களிடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்கள். எனது உறவினர்களிடத்தில் என்னை இந்த விவகாரத்திலிருந்து விலகியிருப்பதற்கு அறிவுறுத்துமாறு கோரினார்கள்.

இவற்றையெல்லாம் விடவும் எனக்கு நன்மை அளிப்பவர்கள் போன்று வார்த்தை ஜாலம் காட்டி என்னை ஒதுங்கியிருக்குமாறு கூறினார்கள். மாதாந்தம் எனது செயற்பாடுகள் பற்றி அறிக்கையை உயர்மட்ட புலனாய்வு கோரியிருப்பதாக கூறினார்கள். எனக்கு புலம்பெயர் தேசங்களிலிருந்து நிதி அனுப்பப்படுவதாக கூறினார்கள். ஆனால் அவற்றையெல்லாம் கண்டு அஞ்சி எமது நியாயமான கோரிக்கையை கைவிடவில்லை. ஒதுங்கி நிற்கவில்லை. எத்தனை அச்சு றுத்தல்கள் ஏற்படுத்தப்படடாலும் நீதிக்கான எமது போராட்டம் எமது உயிருள்ளவரையில் தொடரும்.

கேள்வி:- தற்போது உங்களது நிலைம எவ்வாறு உள்ளது? உங்களுடைய அடுத்தகட்டச் செயற்பாடுகள் என்னவாகவுள்ளன?

பதில்;:- நான் காலில் காயத்துடன் வீட்டில் முடங்கியுள்ளேன். என்னை வீட்டில் முடக்குவதே அவர்களின் திட்டமாக இருக்கின்றதோ என்று ஐயம் கொள் கின்றேன். இந்த திட்டமிட்ட விபத்துச் சம்பவத்திற்காகவாவது நீதி கிடைக்கின்றதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எதிர்வரும் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு கிழக்கில் பாரிய போராட்டத்தினை முன்னெடுக்க திட்டமி ட்டுள்ளோம். அந்த போராட்டத்தைத் திட்டமிட்டபடி முன்னெடுப்போம். எனது கால் காயம் முன்னேற்றமடையாது விட்டாலும் நொண்டிநொண்டியாவது அந்தப்போராட்டத்தில் பங்கேற்பேன். அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை.