எங்கள் தமிழும் இனமும் நிலைக்க ஆதவனை வணங்குவோம்

125

ஆங்கிலப்புத்தாண்டின் ஆரவாரங்கள்
ஓய்ந்திடப் போகின்ற ஒருகாலச் சூழலில்
வாங்கிய திருக்கடன் வங்கியின் வரவுக்குள்
சேர்ந்து சிரிக்கின்ற செழிப்பான வாழ்வினில்
ஓங்கு தைப்பொங்கலின் ஒருதமிழ்ப்பண்பாட்டை
ஏந்திட நிற்கின்ற என்னரும் உறவுகாள்!
நீங்கிடும் இன்னல்கள்.. நிலவிடும் அமைதியென்
றேங்கிடும் இதயங்காள்! ஏர்கொண்ட உழவர்காள்!
தேங்கிய வாழ்வதன் தேரோட்டம் தொடர்ந்திடத்
தூங்காமற் துவளாமல் உழைக்கின்ற தோழர்காள்!

இயந்திர இயக்கத்திற் சுழன்றிடும் உலகினில்..
வியந்திட வளர்ந்திடும் விஞ்ஞான வளர்ச்சியில்..
சுயந்தனை இழக்காது சுதந்திர உணர்வோடு
உயர்ந்திட முயன்றிடும் ஒப்பற்ற மனிதர்காள்!

புலம்பெயர்ந்தாலும் உளம் பெயராது
பலங்கொண்ட குடியெனப் பாரெலாம் வதிந்து
இளந்தலை முறையின் எதிர்காலம் ஒன்றே
நிரந்தரம் என்று நீள்தவம் இயற்றி
வளம்பல பெருக்கிடும் எம்தமிழ்க்குடியே!
வாழிய என்றுமை வாழ்த்தி மகிழ்கிறேன்!

பூங்குயில் கூவிடப் புள்ளினம் பாடிடப்..
பொன்னொளிக் கதிர் வீசிப் பகலவன் புறப்பட.
மூங்கிலின் முகப்போடு முற்றத்தில் மாக்கோலம்….
முழுமையை விளக்கிட முன்வைத்த அருட்கும்பம்
தீங்கனி கரும்பொடு மாவிலை தோரணம்
;தோன்றிடத் தாய்க்குலம் துரிதமாய்க் கடன் செயத்
தூங்கிய பாலர்கள் இளைஞர்கள் யுவதிகள்
துள்ளியே எழுந்தோடித் துடிப்புடன் குளித்துப் பின்
தாங்கள் தம் வெடி வாண வேடிக்கை தொடர்ந்திட…
ஆங்கொரு பானையில் ; அரிசி தேன் நெய்; வெல்லம்
அன்றைக்கு மடிதந்த ஆவின்பால் அவைகூட்டிப்
பாங்குடன் பொங்கியாம் பாருடன் பகிர்ந்துண்ட
பழம் பெரும் திருநாளே தமிழர் தைப்பொங்கலாம்!

‘நாங்களோர் இனம்! நமக்குமோர் வாழ்வுண்டு!
நாவிலும் பாவிலும் நடமிடும் மொழியுண்டு!
தீங்கு நினைத்திடாத் தெளிந்த உறவுண்டு!
தேர்ந்து அறம் செய்யும் திடமான பண்புண்டு!
தாங்கிய வீரமும் தடம் காணா வரலாறும்
தலைதாழ்த்தி விருந்தோம்பி யணைக்கின்ற அகவாழ்வும்;
நீங்காத அன்பினை நெறியாக்கும் இலக்கியமும்
நாம்காண வைத்த நல்லகுடி மரபுண்டு!’

என்றதொரு செய்தியினை எழுச்சியுடன் உலகுக்கு
எடுத்துரைக்க வென்றே இனியதை மகள் வந்தாள்!

ஆழிசூழுலகின் தேசங்கள் பலவும்
அறிந்தனர் தமிழர் விழுமிய மரபினை!
கூழையும் பகிர்ந்து குடித்திடும் பண்பைக்
குவலயம் இன்று கூடிக் கொண்டாடிற்று!
யாவரும் சமமெனும் சத்திய நெறியினைத்
தூவிய செம்மொழி தமிழெனக் கண்டனர்!

வான்புகழ் கொண்டு வையத்தில் ஒலிக்கும்
தேன்தமிழ்த் தாயின் திருவடி போற்றியே
யான் கரங்கூப்பி வாழ்த்துகள் நல்கினேன்!

அன்பால் இனங்கள் இணைந்திடும்போதே
அகிலம் அழிவின் பிடியினை விலகும்!
இன்பம் பொங்கி இருளது விலகி
எல்லா நாளும் பொங்கலாய் விடியும்!
போரெனும் கொடிய பேயது அடங்கி
ஏரதன் பெருமை பாரினைத் தழுவுமே!

அன்பே தமிழ்! அதிலே அமிழ்!

திங்களும் கதிரும் தென்றலும் தீயும்
பொங்கு கடலும் பூமியும் உளவரை
எங்கள் தமிழும் இனமும் நிலைக்குமே!

புலவர் சிவநாதன்