மட்டுநகரில் பொருள் கொள்வனவில் பெருமளவான மக்கள்

17

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட 19மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் இன்று காலை 6.00மணி தொடக்கம் பிற்பகல் 2.00மணி வரையில் தளர்த்தப்பட்டிருந்த நிலையில் பெருமளவான பொதுமக்கள் இன்று காலைமுதல் பொருள் கொள்வனவில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் பல்பொருள் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில் நீண்ட வரிசையில் மக்கள் நின்று பொருட்களை கொள்வனவு செய்ததை காணமுடிந்தது.

குறிப்பாக இன்றைய தினம் மக்கள் சமூக இடைவெளியை பேணிய வகையில் நின்று பொருட்கள் கொள்வனவுசெய்வதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு மாநகரசபை பகுதியில் மட்டக்களப்பு பொதுச்சந்தை மூடப்பட்டு நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு பொதுச்சந்தை வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம்,ஊரணி பூங்கா,சின்ன ஊறணி பாடசாலை விளையாட்டு மைதானம்,சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானம் ஆகியன பொதுச்சந்தைகளாக ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளிகளை பேணி பொருட்கொள்வனவில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மட்டுமே திறக்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிலர் அத்தியாவசியமல்லாத பொருட்கள் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் நேரடியாக சென்று குறித்த வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்தார்.

இன்றைய தினம் பெருமளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.