உளத்தை அழிப்பதுதான் பெரும் வாதை – தீபச்செல்வன்

149

ஈழத் தமிழ் இனம், சந்தித்த இன அழிப்பு என்பது வெறுமனே உயிர்களும், உடல்களும் மாத்திரம் அழித்து நிகழ்த்தப்பட்ட ஒன்றல்ல. தமிழ் மனங்களை இலக்கு வைத்து இங்கொரு மாபெரும் இன அழிப்பு நடந்தது. அது இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. போரை முடித்து விட்டோம் என்று இலங்கையின் ஆட்சியாளர்கள் மார் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். போரின் வெற்றிக்கு சண்டை போடுகிறார்கள். இன்றைக்கும் ஈழத் தமிழர்கள் மீது வார்த்தைப் போரைத் தொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றது சிங்கள தேசம்.

அண்மையில் கிளிநொச்சியில் ஒரு அறிவித்தல் சுவரொட்டியைப் பார்த்தேன். சுமார் 55 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், அவரை கண்டவர்கள் தொடர்பு கொள்ளுமாறும் அதில் எழுதப்பட்டிருந்தது. போரின் வலியை, பாதிப்புக்களை இன்னமும் சுமந்து கொண்டு திரிபவர்களின் கண்களுக்கு அந்த சுவரொட்டி தென்படுமா என்று நினைத்துக் கொண்டே அந்த அம்மாவைப் பார்த்தேன். நெற்றி நிறைய குங்குமம். நசிந்து வதைபடும் ஒரு புன்னகை முகத்தில். ஒரு குழந்தையைப் போல பரிதாபமான பார்வை கொண்ட முகம் அது. போர் தன் கோரத்தை எழுதிச் சென்றிருக்கிற முகமாகவே இருந்தது.

அந்த தாயின் மகன் காணாமல் ஆக்கப்பட்டவராம். பேரூந்தில், அருகில் இருந்தவர் சொல்லிக் கொண்டிருந்தார். பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்ட மண்ணில் தாய்மார்கள் காணாமல் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். மனம் பிசகியவர்களாக தொலைந்து கொண்டிருக்கிறார்கள். ஈழம், தாய்மார் தொலைகின்ற நிலம். ஈழம், மனிதர்கள் தொலைகின்ற நிலம். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக போராடிக் கொண்டிருந்த பல தாய்மார்கள் திடீர் திடீரென்று தமது உயிரை விடுகின்ற நிகழ்வுகளும் ஈழத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அண்மையில், முல்லைத்தீவில் ஒரு மாணவன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். போருக்குப் பிறகு தற்கொலைகள் அதிகரித்திருப்பது இயல்பான விடயமா? பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், முன்னாள் போராளிகள், சிறுவர்கள் என்று போர் வேட்டையாடிய விளிம்பு மனிதர்கள்தான் இவ்வாறு தம்மை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். போர் சிதைத்த குடும்பங்களும், போர் சிதைத்த மனங்களைக் கொண்டவர்களும்தான் இப்படி அழிக்கப்படுகிறார்கள்.

இவை கொலையா? தற்கொலையா? இவை கொலைதான். இவை இன அழிப்புக் கொலை. ஈழத் தமிழர்கள்மீது சிங்கள அரசு நடாத்திய யுத்தம் முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிடவில்லை. முள்ளிவாய்க்காலில் மாத்திரம் நம் குருதியை சிந்தவில்லை. இன்றைக்கும் குருதியை சிந்திக் கொண்டுதான் இருக்கின்றோம். முள்ளிவாய்க்காலில் மாத்திரம் உடல்களைப் புதைக்கவில்லை. இன்றைக்கும் உடல்களை இந்த மண்ணில் புதைத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். குண்டுகள் வீசப்பட்டு, விமானங்களால் தாக்கப்படாவிட்டாலும் ஈழத் தமிழ் மக்களின் உடல்களும், உள்ளங்களும் வீழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

போரில் அழிக்கப்பட்டவர்களுக்கு நீதி இன்றுவரை வழங்கப்படவில்லை. இன அழிப்புப் போரின் நீதி மறுக்கப்பட்டவரையில், பாதிக்கப்பட்ட மனங்கள் ஆற்றுப்படுத்தலுக்கு உள்ளாகப் போவதில்லை. கொடிய போர்தான் இன்றுவரை சிங்களப் பேரினவாத்தின் அரசியல் இருப்பாக இருக்கிறது. ஈழத் தமிழர்களை நானே வென்றேன், போர் வெற்றி எனக்கே உரியது என்று மீண்டும் மீண்டும் வார்த்தைப் போர் நிகழ்த்தப்படுகின்றது. அவ்வாறு வார்த்தைப் போர் நடக்கின்ற ஒவ்வொறு சந்தர்ப்பத்திலும் ஈழத் தமிழர்களின் மனங்கள் கொல்லப்படுகின்றன.

2009இற்குப் பின்னர்  நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் மரணித்துள்ளனர். மர்மமாகவும், தெற்றாநோய்களாலும், தற்கொலைகளாலும் இவர்களின் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. முன்னாள் போராளிகள் வெளியில் விடப்படாலும் தொடர்ந்து கண்காணிப்படுகின்றனர். எச்சரிக்கப்படுகின்றனர். இவைகளே அப் போராளிகளை உளவியல் ரீதியாக பெரும் வாதைக்கு உள்ளாக்கி இறுதியில் அவர்களின் உயிர்களைப் பறித்துள்ளன. முன்னாள் போராளிகளின் திடீர் மரணத்தைத் தடுக்க எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடவில்லை.

கடந்த ஆண்டு கிளிநொச்சியில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போரில் தந்தையை இழந்த மாணவி, பாடசாலை செல்வதற்கு சீருடை, புத்தகப் பை இல்லாத நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்வு கிளிநொச்சியை மாத்திரமல்ல, தமிழர்களின் தாயகத்தையே உலுக்கியது. போர் குழந்தைகளின் புற உலகத்தை மாத்திரமல்ல, அகவுலகத்தையும் எதிர்காலத்தையும்கூட சிதைத்துள்ளது.

இத்தகைய மாணவர்கள், சிறுவர்கள் இனங்காணப்பட்டு உளவியல் ரீதியாக பலமூட்டப்பவில்லை. அத்துடன் அவர்களின் எளிய தேவைகள்கூட நிறைவு செய்யப்படவில்லை. போர் முடிவடைந்து பத்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் ஈழத் தமிழ் சமூகம் உளவியல் ரீதியாக முள்ளிவாய்க்கால் போரிலிருந்து விடுபடவில்லை என்பதை இதுபோன்ற பல நிகழ்வுகளும் எடுத்துக் காட்டுகின்றன. சிங்கள அரசின் திட்டமே அதுதான். நிலத்தை பறிப்பது, கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதியை மறுப்பது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கள்ள மௌனத்தில் இருப்பது போன்ற பிரச்சினைகளை கொதி நிலையில் வைத்திருந்து ஈழத் தமிழ் சமூகத்தை அழித்தொழிப்பதே சிங்கள அரசின் தீர்வாகும்.

அண்மையில் முல்லைத்தீவு செம்மலை நீராவியடியில் சிங்கள பௌத்த பிக்குவை தமிழர்களின் ஆலய வளாகத்தில் வைத்து தீமூட்டிய சம்பவம் சிங்களத்தின் பௌத்த பேரினவாத உளவியல் வெறிக்கு சிறந்த உதாரணம். அத்தகைய செயல்களின் மூலம் உளவியல் ரீதியாக ஈழத் தமிழ் மக்களை சீண்டி, அடக்கி ஒடுக்க சிங்களம் முயல்கின்றது. ஆனால் அந்த நெருக்கடிகளை, எழுச்சி மிகு எதிர்ப்பாக, ஒரு போராட்டமாக தமிழர் தேசம் அடுத்த நாளே செய்தது. அவ்வாறான எழுச்சிகளும், எதிர்ப்புக்களுமே ஈழத் தேசத்திற்கு இன்று தேவைப்படுகின்றன.

சிங்களப் பேரினவாதம் ஏற்படுத்தும் உள நெருக்கடிகளை ஒரு போராட்டமாக மாற்ற வேண்டிய தேவை ஈழத் தமிழ் மக்களுக்கு உள்ளதையே இந்த ஆண்டின் சர்வதேச உளநல தினம் எடுத்துரைக் கின்றது. எல்லா மரணங்களையும் வென்று வாழ்வை வரைய வேண்டும். தலை நிமிர்ந்த, வல்லமை உள்ள இனமாக மாற வேண்டும். அதுவே சிங்களத்திற்கு ஈழத் தமிழ் மக்கள் வழங்கும் சிறந்த பதிலாகவும், போராட்டதாகவும் அமையும். ஈழத் தமிழ் மக்கள் முப்பது ஆண்டுகளாக விடுதலை தேசத்திற்காக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். அறுபது ஆண்டுகளாக சிங்கள அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடுகின்றார்கள்.

எனவே சிங்கள அரசின் உயவியல் ரீதியான இன அழிப்பு போரையும், அதன் தாக்கத்தையும் புரிந்து கொள்ளுவதுடன் அதிலிருந்து தப்புகின்ற வழிமுறைகளையும் வகுத்து கொள்ள வேண்டியது அவசியமானது. சிங்களப் பேரினவாத்திற்கு எதிராக தலைசிறந்த விடுதலைப் போராட்டத்தை நடாத்திய ஈழத் தமிழ் இனம் அதை செய்ய வேண்டும். அதுவே அப் போராட்டத்தினை வெற்றி பெறச் செய்வதுடன் அதற்குகந்த மரியாதையாகவும் அமையும்.