உலக நாடுகள் சிறீலங்கா மீது அழுத்தம் பிரயோகிக்கா விட்டால் தமிழர்கள் அழித்தொழிக்கப்படுவர் – சார்ள்ஸ்

65

சிறீலங்கா அரசாங்கத்தின் மீது சர்வதேசத்தின் அழுத்தமோ அல்லது வல்லரசு நாடுகளின் அழுத்தமோ பிரயோகிக்கப்படா விட்டால் நாட்டில் வாழும் தமிழ் மக்கள் அழித்தொழிக்கப்படுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எச்சரித்துள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் தலையிட்டு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மன்னாரிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் ஊடக சந்திப்பை நடத்தும் போதே அவர் மேற்படி கருத்தை தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பத்தரமுல்லவிலுள்ள தேசிய யுத்த வெற்றி வீரர்கள் நினைவிடத்தில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற யுத்த வெற்றி விழாவில் இராணுவ வீரர்களை கௌரவித்து கோத்தபாயா ராஜபக்ஸ பேசிய போது நாட்டின் யுத்த வெற்றி வீரர்களை துன்புறுத்துவதற்கோ அல்லது அவர்கள் மீது எந்தவொரு அழுத்தங்களை பிரயோகிப்பதற்கோ தாம் இடமளிக்கப் போவதில்லை என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிறீலங்காவையும், இராணுவத்தினரையும் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. இதற்காக குறித்த நிறுவனங்கள், மற்றும் நாட்டின் உறுப்புரிமையை விலக்கிக் கொள்ள தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்தக் கூற்றிற்கு தான் அதிருப்தி தெரிவிப்பதாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் குறிப்பிட்டார்.