உலக ஒழுங்கை தலைகீழாக்கிய கொரோனா! -பி.மாணிக்கவாசகம்

234
7 Views

சீனாவின் வுஹான் மாநகரில் வெளிப்பட்டு உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ள கொரோன வைரஸ் உலக ஒழுங்கையே மாற்றி அமைத்துள்ளது. ஆயுத பலமும்,பொருளாதார பலமும் இருந்தால் போதும். உலக வல்லரசாகத் திகழ முடியும் என்ற சர்வதேச பலவானுக்குரிய தத்துவத்தை சாதாரண கண்ணுக்குப் புலப்படாத இந்த வைரஸ் தவிடு பொடியாக்கி உள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாய்கின்ற ஏவுகணைகளும் நீர்மூழ்கிக் கப்பல்களில் பொருத்தப்பட்ட பாரிய ஏவுகணை செலுத்தி பீரங்கிகளும் இருந்தால் உலக நாடுகளை ஆட்டிப்படைக்க முடியும். அச்சுறுத்திப் பணிய வைக்க முடியும் என்ற உலக வல்லரசு என்ற மேலாண்மைத் தன்மை இந்த வைரஸின் முன்னால் கூனிக் குறுகி நிற்கின்றது.

ஆளில்லாத விமானங்கள், விண்வெளிக் கலன்கள் என உயர் விஞ்ஞான தொழில்நுட்பத்தின் ஊடாக வளர்ச்சிப் போக்கில் வியக்கத் தக்க சாதனைகளைப் புரிந்துள்ள வல்லரசு நாடுகளினால் இந்த வைரஸின் தாக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. கையாளாகத ஒரு நிலையில் அந்த வல்லாண்மை மடங்கி ஒடுங்கி தடுமாறி நிற்கின்றது.

விஞ்ஞானத் தொழில்நுட்பத் திறனும், பொருளாதார மேன்மையும், ஆயுத பலமும் இருந்தால் மட்டும் போதாது. இவற்றை அளவீடாகக் கொண்டு உலகளாவிய நிலையில் மேலாண்மை நிலையை – வல்லரசுத் தன்மையை நிறுவ முடியாது என்ற கசப்பான பாடத்தைக் கொரோனா வைரஸ் உலக வல்லரசு நாடுகளுக்கு முகத்தில் அறைந்தாற்போல உணர்த்தி உள்ளது.

அளவற்ற செல்வம் இருக்கலாம்,உலகளாவிய ரீதியில் அதிகாரத்தைச் செலுத்தக் கூடிய புஜ வலிமை இருக்கலாம். ஆனால் உடல் ஆரோக்கியமுள்ள மக்களைக் கொண்டிருப்பதே உண்மையான மேலாண்மை நிலையாகும் என்பதை கொரோனா உலக நாடுகளுக்கு இடித்து உரைத்திருக்கின்றது.

கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி யுத்த மோதல்களில் வல்லாண்மையுடன் திகழ முடியும் என்ற நிலைமை படிப்பபாக மாற்றம் பெற்று நவீன முறையில் நேரடி மோதல்களின்றி யுத்தத்தைக் கொண்டு நடத்துவதற்கான வழிவகைகள் குறித்து வல்லரசு நாடுகள் பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி இருக்கின்றன.

அந்த ஆராய்ச்சியின் மூலம் உயிரியல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிறிய அளவில் எழுபதுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆயினும் 1975 ஆம் ஆண்டு உயிரியல் ஆயுதத்திற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சர்வதேச உயிரியல் ஆயுத சாசனம் அதனைத் தடை செய்துள்ளது. இந்த சாசனத்தில் 182 நாடுகள் கையெழுத்திட்டிருக்கின்றன. பத்து நாடுகள் அதனை ஏற்கவுமில்லை. கையெழுத்திடவுமில்லை.

ஆனால் கொரோனா வைரஸ் அத்தகைய உயிரியல் ஆயுதங்களை வெற்றிகரமாகப் பயன்படுத்தி எதிரிகளை அழித்தொழிக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளது. இத்தகைய ஒரு நிலைமை உருவாகலாம் என படைத்துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏனெனில் கொரோனா வைரஸ் தன்னளவில் ஓர் உயிராயுதமாகச் செயற்பட்டிருப்பதை உலக மக்கள் இன்று கண்ணாரக் காண்கின்றார்கள். ஆயுத வலிமையும் பொருளாதார பலத்தையும் கொண்டிருந்த நாடுகள் இந்த உயிர்க் கொல்லி வைரஸிற்கு ஈடு கொடுக்க முடியாமல் தளர்ந்து சோர்ந்து தவிக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி என்ற வல்லமை இருந்தாலொழிய இந்த கொரோனா வைரஸிற்கு எதிராகப் போராட முடியாது என்பது ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியும், நோய்த்தடுப்புக்கான கவசங்களும் இல்லையேல் இத்தகைய ஆபத்தான நிலைமையை எதிர்கொள்ள முடியாது என்ற பாடத்தைக் கொரோன வைரஸ் உலக மக்களுக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளது.

உலக வல்லரசுகளின் ஆயுத பலத்தினாலும், விஞ்ஞான தொழில்நுட்ப வலிமையினாலும்,பொருளாதார பலத்தினாலும் தடுக்க முடியாத கொரோனா வைரஸை சாதாரண முகக் கவசம் நெருங்க விடாமல் தடுத்து,தனது வலிமையை நிரூபித்திருக்கின்றது.

கொரோனா வைரஸ் நோய்த்தாக்கத்திற்கு அவசியமான சிகிச்சை அளிப்பதற்குரிய சரியான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய் வராமல் தடுப்பதற்குரிய தடுப்பு மருந்துகளும் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில் வெறும் முகக் கவசத்தையும், பிபிஈ ( PPE – Personal Protective Equipment) எனப்படுகின்ற தனிமனித தற்காப்பு சாதனங்கள் பொருட்களையும் பயன்படுத்தித்தான் கொரோனா வைரஸின் நோய்த்தொற்றில் இருந்து மருத்துவ நிபுணர்களும், மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களும் தங்களைத் தற்காத்து வருகின்றார்கள்.

இந்தத் தற்காப்பையும் மீறி, அந்தக் கவசங்களையும் உடைத்துக்கொண்டு உட்புகுந்ததனால் மருத்துவ நிபுணர்களும் மருத்துவர்களும் நூற்றுக்கணக்கில் கொரோனா வைரஸிற்குப் பலியாகி உள்ளனர். அதேபோன்று தாதியர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களும் பெரும் எண்ணிக்கையில் இந்த நோய்க்கு இரையாகி உள்ளனர்.

விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளலாம் அண்டவெளியில் உள்ள கோள்களில் சென்று குடியேறலாம். அங்கு குடியேறி வாழ்வதற்கு வேண்டிய தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பூவுலகத்தில் இருந்து அங்கு கொண்டு செல்வதற்குரிய வழி வகைகள் குறித்து விஞ்ஞான ஆய்வுகளின் மூலம் வழிவகைகளை மனிதன் கண்டறியலாம்.

ஆனால் கண்ணுக்குத் தெரியாத வகையில் தும்மல் இருமலின் மூலமாகவும் நெருங்கிய சுவாசத்தின் ஊடாகவும் தொற்றிப் படர்கின்ற வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பயன்படமாட்டாது என்பதும் நிரூபணமாகி உள்ளது.

கைகுலுக்குவதன் மூலமும், கட்டியணைப்பதன் ஊடாகவும், ஒருவர் பயன்படுத்திய பொருட்களின் ஊடாகவும் ஒரு மனிதனில் இருந்து மற்றொருவருக்கு எவ்வாறு தொற்றிக் கொள்ளலாம் எப்படி பற்றிக் கொள்ளலாம் என தனக்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற இந்தக் கொடிய வைரஸின் பிரசன்னத்தைக் கண்டு பிடிக்க முடியாத அவல நிலைக்கு மனிதனின் விஞ்ஞான தொழில்நுட்பத் திறன்கள் ஆளாகியிருக்கின்றன. அதற்கான வலிமையும் ஆற்றலும் அற்றவையாக அந்தத் திறன்கள் திகழ்கின்றன.

இந்த நிலைமையானது மனித குலத்திற்கு ஏற்பட்டுள்ள மாபெரும் பின்னடைவாகும். அமெரிக்காவைப் பற்றிப் பீடித்துள்ள கொரோனா வைரஸினால் அந்த நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பலத்தோடு, உலக வல்லரசாகத் திகழ்ந்த அமெரிக்காவின் பொருளாதாரம் கொரோனாவின் கோரப்பிடியினால் 74 வருடங்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வாளர்களும் பொருளாதார நிபுணர்களும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

பொருளாதாரப் பாதிப்புக்கு முன்னதாக கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் அதிக எண்ணிக்கையான பொதுமக்களின் உயிர்களைப் பறிகொடுத்த நாடாகவும் அமெரிக்கா மாறியுள்ளது. உலக நாடுகளைத் தனது பொருளாதாரப் பலத்தினாலும் ஆயுத வலிமையினாலும் ஆட்டிப்படைத்து உலக பொலிஸ்காரனாகத் திகழ்ந்த அமெரிக்காää கொரோனா வைரஸ் நோயை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமான மருத்துவ உபகரணங்களையும் இன்று சீனா, இந்தியா போன்ற நாடுகளிடம் கையேந்தி, கூனிக் குறுகி நிற்கின்ற நிலைமைக்கு ஆளாகியுள்ளது. இது மிகவும் வருத்தத்திற்கு உரியது.

அது மட்டுமல்லாமல் தனக்குத் தேவையான முகக் கவசங்கள் மற்றும் தற்காப்பு உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டில் தனது நேச நாடுகளையே பகைத்துக் கொள்கின்ற நிலைமைக்கு ஜனாதிபதி ட்ரம்பை அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் நிர்ப்பந்தித்துள்ளது.

சீனாவிடம் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கென அனுப்பி வைக்கப்பட்ட நோய்ப்பாதுகாப்பு உபகரணங்களைக் கூடிய விலை கொடுத்து ஜனாதிபதி ட்ரம்ப் தனதாக்கிக் கொண்டார் என்றும்,கனடாவுக்கு அனுப்புவதாக ஒப்புக்கொண்ட முகக் கவசத் தொகுதியொன்றை அங்கு அனுப்ப முடியாது என முரண்டு பிடித்து, முறுகல் நிலை ஏற்பட்டதன் பின்னர் அதனை வழங்கியதாகவும், செய்திகள் வெளியாகி இருந்தன. அத்துடன் கொரோனா வைரஸ் நோய்க்கு உரிய குளோரோகுயின் மருந்தை இந்தியா அமெரிக்காவுக்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதத்தையடுத்து, ஜனாதிபதி ட்ரம்ப் இந்திய அரசு அந்த மருந்தை அனுப்பாவிட்டால், அதன் விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் நோய்த்தாக்கத்தில் இருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பது மட்டுமல்ல. மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு ஆளாகியுள்ள நாட்டை பொருளாதார ரீதியாக நிமிர்த்த வேண்டிய பாரிய கடப்பாட்டிற்குள்ளேயும் ஜனாதிபதி ட்ரம்ப் சிக்கியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து, ஏற்பட்டுள்ள முடக்க நிலை காரணமாக 16.8 மில்லியன் பேர் வேலை இழந்திருப்பதாகவும், இந்த நோய் நெருக்கடி தொடருமானால் மேலும் மோசமடையலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

உலக பொலிஸ்காரன் என்ற பெயரோடு முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த அமெரிக்காவில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களைப் பற்றிப் பிடித்து, 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் உயிர்களைக் குடித்து, இன்னும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸின் கோரப்பிடியில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி ட்ரம்பும் அந்த நாட்டு மக்களும் கடினமாகப் போராட வேண்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அமெரிக்கா மட்டுமல்லாமல் இத்தாலி, பிரான்ஸ்,பிரித்தானியா, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் எவ்வாறு கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மீளப் போகின்றன என்பது தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here