Home ஆய்வுகள் உலகத் தமிழராய்ச்சி மன்றம் அமைப்பதற்கு வழிகோலியவர் தனிநாயகம் அடிகளார் அவர்களே

உலகத் தமிழராய்ச்சி மன்றம் அமைப்பதற்கு வழிகோலியவர் தனிநாயகம் அடிகளார் அவர்களே

1913ஆம் ஆண்டு ஆவணி மாதம் இரண்டாம் திகதி யாழ்ப்பாணம் கரம்பொன் என்னுமிடத்தில் கணபதிப்பிள்ளை நாகநாதன் ஸ்ரனிஸ்லாஸ், சிசீலியா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு மூத்த மகனாக சேவியர் பிறந்தார். ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலே ஆரம்பக் கல்வியை தொடங்கினார். 1923ஆம் ஆண்டு தொடக்கம் 1930ஆம் ஆண்டு வரை தனது மேற்படிப்பை யாழ். சென்.பத்திரிசியார் கல்லூரியில் தொடர்ந்தார்.

இக்காலகட்டத்தில் ஆங்கில இலக்கியம், ஆங்கில மொழி, ஆங்கில கவிதைகள், ஆகியவற்றில் நாட்டம் ஏற்பட்டது. அவரின் பன்னிரெண்டாவது வயதில் அவரின் தாயார் இறந்தார். அதன் பின்னர் அவர் தான் ஒரு குருவானவராக வரவேண்டும் என எண்ணினார். இதற்குக் காரணம் தோல்ஸ்டோய் என்பவரின் உயிர்ப்பு என்ற நாவல் தன்னுடைய உள்ளத்திலே ஏற்படுத்திய தாக்கம் தான் காரணம் என்று தெரிவித்தார்.

அந்த வாக்கியம் “ஒரேயொரு முறை தான் இவ்வுலகில் நான் பயணிப்பேன். இக்காலத்தில் ஏதாவதொரு நற்செயலை என்னால் செய்ய முடியும் என்றால், இன்னொரு உயிருக்கு என்னால் அன்பு காட்ட முடியும் என்றால், அதை நான் இப்போதே செய்யப் போகிறேன். ஏனென்றால், மீண்டும் ஒரு தடவை இவ்வுலகில் நான் கால் பதிக்க மாட்டேன்” என்பதே அந்த வாக்கியம்.

1931ஆம் ஆண்டு தனது குருத்துவக் கல்வியை மேற்கொள்வதற்காக கொழும்பிலுள்ள பேணாட் குருமடத்திற்குச் சென்றார். அங்கே மெய்யியலைக் கற்றதுடன், உயிரோட்டமுள்ள ஓர் எழுத்தாளனாகவும் திகழ்ந்தார். உரோமாபுரிக்குச் சென்று இறையியல் கல்வியைத் தொடர அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. இதேவேளை, அவரை ஆதரித்த கியோமர் ஆண்டகை அவரை தொடர்ந்து ஆதரிக்க மறுத்து விட்டார்.

இந்த வேளையில் அவருக்கு ஆதரவு தெரிவித்தவரகள் யாழ். சென் பத்திரிசியார் கல்லூரி அதிபர் சாள்ஸ் மத்தியுஸ் அடிகளார் மற்றும் சாள்ஸ் லோங் அடிகளார் ஆவர். இவர்களின் ஆதரவுடன் கேரளாவில் உள்ள சீரோ மலங்கார் ஆயரான மேதகு மார் இவானியூஸ் ஆண்டகை அவர்கள் சேவியர் அவர்களை உரோமாபுரிக்கு அனுப்பி வைத்தார்.

Thaninayagam 4 உலகத் தமிழராய்ச்சி மன்றம் அமைப்பதற்கு வழிகோலியவர் தனிநாயகம் அடிகளார் அவர்களே1934ஆம் ஆண்டு 21 வயதான சேவியர், தனது இறையியல் கல்வியை தொடர்வதற்காக கடல் வழியாக உரோமாபுரிக்கு பயணமானார். 1938 மார்ச் 19ஆம் திகதி உரோமாபுரியில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இக்காலகட்டத்திலேயே தமிழ் மொழி மீதான ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. அங்கே வீரமாமுனிவர் கழகத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

அத்துடன் வத்திக்கான் வானொலியிலும் தமிழ் மொழி பிரிவில் பணியாற்றினார். 1939ஆம் ஆண்டு ரோமில் தனது இறையியற் கல்லூரியை நிறைவு செய்த சேவியர் தன்னை ரோமாபுரிக்கு அனுப்பி வைத்த இவானியூஸ் ஆண்டகையின் மறைமாவட்டத்திலே பணியாற்றுவதற்காக கேரளா, திருவனந்தபுரம் சென்றார். அங்கு பணியாற்றுவது அவருக்கு ஒத்துவரவில்லை.

இதனால் தனிநாயம் அடிகளார் இவானியூஸ் ஆண்டகையின் அனுமதியில்லாமலே உரோமாபுரிக்கு மீண்டும் செல்வதற்குத் தீர்மானித்தார். பின்னர் மேதகு திபூஸியஸ் ஆண்டகை அவர்களின் மறைமாவட்டமான தூத்துக்குடியில் சேவியர் அவர்கள் தனது குருத்துவப் பணியைத் தொடர உரோமாபுரியிலுள்ள அவரது பேராசிரியர் அவருக்கு வழிசமைத்துக் கொடுத்தனர்.

1941ஆம் ஆண்டு சேவியர் அவர்கள் தனக்கு தமிழ்ப் பெயரை சூட்டுவதற்கு விரும்பி தனது தந்தையுடன் கலந்தாலோசித்து தந்தை வழி மூதாதையாரான தனிநாயகம் என்ற பெயரை சூட்டிக் கொண்டார். தூத்துக்குடி, வடக்கன்குளம், அத்துடன் புனித திரேசா கல்லூரியில் உப அதிபராக பதவியேற்றார். அக்காலப்பகுதியிலேயே தமிழை உரிய முறைப்படி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. தூத்துக்குடியிலுள்ள சுப்பிரமணியம் பண்டிதரிடம் தமிழ் மொழியை முறைப்படி கற்கத் தொடங்கினார்.

1945ஆம் ஆண்டு 32 வயதிலே சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவனாக சேர்ந்து கொண்டார். இங்கு கல்வி கற்ற காலப்பகுதியில் பல்வேறு தமிழ் அறிஞர்களையும் சந்திப்பதற்கான வாய்ப்பு தனிநாயகம் அடிகளாருக்கு கிட்டியது. 1947இல் தமிழ் மொழியில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து கல்வி கற்று 1949இல் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

பேராசிரியர் சிதம்பரனாரின் ஆதரவுடன் ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ என்னும் விடயம் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த ஆய்வு பின்னர் நூலாக வெளியிடப்பட்டது. இந்த நூலை ஆய்வு செய்த கபில் சுவெலபேல் அவர்கள், பழந்தமிழ் இலக்கியத்தில் இதுவரை எழுதப்பட்டவற்றை இந்நூல் விஞ்சி நிற்கிறது எனப் பாராட்டுத் தெரிவித்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலப்பகுதியில் தான் அடிகளாருக்கு இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது. 1949 – 1951 வரை மலேசியா சீனா யப்பான், அமெரிக்கா ஐக்கிய நாடுகள், தென்னமெரிக்காவிலுள்ள பனாமா, ஈகுவாடோர், பெரு, சிலி, ஆஜென்டீனா, உருகுவே, பிறேசில், மெக்ஸிகோ, மேற்கிந்திய தீவுகளான திரினிதாத், ஜமேய்க்கா, மார்த்தீனிக், மத்திய ஆபிரிக்கா, வட ஆபிரிக்கா, இத்தாலி, பாலஸ்தீனம், எகிப்து, போன்ற பல நாடுகளுக்கும் பயணம் செய்து, தமிழ் மொழி, கலை, வரலாறு பற்றி அடிகளார் உரையாற்றினார்.

இந்தப் பயணத்தை முடிவு செய்து இந்தியாவிற்குத் திரும்பிய வேளையிலே, வெளிநாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் மத்தியில் தமிழாய்வு பற்றிய ஈடுபாட்டைத் தோற்றுவிக்கவும், பல்வேறு நாடுகளில் வாழும் பல்வேறு அறிஞர்களிடையே தொடர்புகளை ஏற்படுத்தவும் ஆங்கிலத்தில் ஒரு இதழ் தேவையென்பதை உணர்ந்து கொண்டார். இதற்காக ‘தமிழ் கல்ச்சர்’ (‘Tamil Culture’) என்ற இதழை 1952 பெப்ரவரியிலிருந்து வெளியிடத் தொடங்கினார். பல்வேறு நாடுகளில் வாழும் தமிழாய்வில் ஈடுபடும் பல்வேறு அறிஞர்களை ஒன்றிணைக்க இந்நூல் சிறந்ததாக விளங்கியது.

1952ஆம் ஆண்டு இலங்கை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியேற்று 1961ஆம் ஆண்டுவரை இந்தப் பணியை அவர் தொடர்ந்து ஆற்றினார். கல்விக் கொள்கைகள், தமிழ் மொழியை கற்பிக்கும் முறைகள், சமூகக் கல்வியியல் போன்ற தலைப்புகளில் விரிவுரையாற்றியிருந்தார். பல்கலைக்கழகத்தில் இன, மத வேறுபாடுகள் இன்றி அடிகளார் அனைவருடனும் நன்றாகப் பழகினார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பித்த போது, அங்கு தமிழ் ஆர்வத்தை வளர்ப்பதிலும், ஆராய்ச்சி உணர்வை ஊக்குவிப்பதிலும் முன்னின்று செயற்பட்டார். இதற்கிடையில் 1955 – 1957 காலப்பகுதியில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் ‘பழந்தமிழ்ச் சிந்தனைகள்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இதனையடுத்து இலங்கை திரும்பிய அடிகளார், முதுநிலை விரிவுரையாளராக பதவியுயர்வு பெற்றார்.

இலங்கையில் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. ஈழத் தமிழர் சமவுரிமை கோரி நடத்திய போராட்டத்தை ஆதரித்தார். 1961ஆம் ஆண்டு காலிமுகத்திடலிலே நடத்திய சத்தியாக்கிரகத்திலே அடிகளார் பங்குபற்றினார். இதற்காக அடிகளார் அரசியலில் ஈடுபடுகின்றார் என்று அப்போதைய இலங்கை அரசு தவறாக எண்ணியது, இதனால் அவர் தனது பல்கலைக்கழகப் பணியை துறந்துவிட தீர்மானித்தார்.

அதன் பின்னர் 1961ஆம் ஆண்டிலிருந்து 1969ஆம் ஆண்டு வரை மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியத்துறை தலைவராக பணியாற்றினார். அடிகளாரின் முயற்சியால் பல்கலைக்கழகத்தில் பல்வேறு தமிழ் மொழி ஆய்வுகள் மேற்கொள்ள வழிவகுத்தார். அடிகளாரின் முயற்சியால் மலாயா பல்கலைக்கழகத்தின் இந்தியத்துறை உலகப் புகழ் பெற்றது. இவ்வாறான தனது செயற்பாட்டினால், தனிநாயகம் அடிகளார் மலாயா பல்கலைக்கழகத்தில் சிறந்த பேராசிரியர்களுள் ஒருவராக திகழ்ந்தார்.

1964ஆம் ஆண்டு கீழ்த்திசை அறிஞர்களின் மாநாடு டில்லியில் நடைபெற்ற போது, உலகத் தமிழராய்ச்சி மன்றம் நிறுவப்பட்டது. அதற்காக முன்னின்று உழைத்தவர் தனிநாயகம் அடிகளாரே ஆவார். இந்த மன்றத்தின் செயலாளராக அவரே தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

1964 ஏப்ரல் 17 – 23ஆம் திகதி வரை தனிநாயகம் அடிகளார் தலைமையில் முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடந்தேறியது. 21 நாடுகளிலிருந்து அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இங்கு முன்வைக்கப்பட்டிருந்த கட்டுரைகள் ஆங்கில மொழியில் இடம்பெற்றிருந்தாலும், தமிழ் மொழியிலும் ஆய்வுக்கட்டுரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. உலகத் தமிழராய்ச்சி மாநாடு என்பது முற்றுமுழுதாக தனிநாயகம் அடிகளாரின் சிந்தனையில் உதித்த எண்ணக்கரு என்பது கவனத்திற்கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.

தனிநாயகம் அடிகளாரின் குருத்துவ வாழ்வு தன்னை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து வாழும் முக்தியை அவருக்கு கொடுத்தது. தமிழ் மொழிக்கு பணியாற்றுவதை இறைபணியாகவே அவர் கருதினார். நாற்பத்து மூன்று நாடுகளிலிருந்து வந்த 250 மாணவர்களுடன் ஐந்து ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த அனுபவம் ஒரு விரிந்த, பரந்த பார்வையை அடிகளாருக்குத தந்தது. அடிகளார் கற்றுத் தேர்ந்த பன்மொழிப் புலமை உலகின் பல பாகங்களில் உள்ள மக்களுடனும், அவர்களுடைய இலக்கியம் பண்பாடுகளுடன் இலகுவாக தொடர்பை ஏற்படுத்த அவருக்கு உதவியது.

தனது வாழ்நாளில் 51 நாடுகளை அவர் தரிசித்திருக்கின்றார். அவர் செல்லும் நாட்டில் அந்த நாட்டு மொழியிலேயே உரையாற்றும் திறன் பலரையும் ஈர்க்கும் ஒரு விடயமாக இருந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே அவரது வாழ்வும் ஆய்வும் பல்வேறு தமிழறிஞர்களுடைய தொடர்பையும் நட்பையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. அவர் வெளியிட்ட ‘தமிழ்க் கல்ச்சர்’ முத்திங்கள் இதழ் உலகத் தமிழரிடையே ஒரு உறவுப் பாலமாக அமைந்தது.

தூத்துக்குடி ஆயர் மேதகு திபூசியஸ் றோச் ஆண்டகை தனிநாயகம் அடிகள் சுதந்திரமாக தனது தமிழ்மொழித் தேடல்களை மேற்கொள்ளவும், அதற்காக உலகம் பூராவும் பயணம் செய்யவும் வேண்டிய அனுமதியை அவருக்கு அளித்திருந்தார். இவை அத்தனையும் தான் தமிழ்த்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளாரை, எங்கள் தாய்மொழியாம் தமிழ்மொழியை உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்ற உயர்ந்த தளத்துக்கு எடுத்துச்செல்ல அவரை இட்டுச் சென்றன

எழுத்து வடிவம் கல்யாணி.

Exit mobile version