உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சிறீலங்கா அரசு பொறுப்பேற்றுள்ளது – அரசு பதவி விலகுமா?

238

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் 250 இற்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சிறீலங்கா அரசு பொறுப்பு ஏற்பதாக சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்.

நேற்று (06) நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன் சாட்சியம் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த தாக்குதலுக்கு சிறீலங்கா அரசும் ஒட்டுமொத்த அமைச்சர்களும் பொறுப்பாளிகள். அரசின் தவறுகளே தாக்குதலுக்கு காரணம். பல இடங்களில் தவறுகள் நிகழ்ந்துள்ளன. புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதில் தோல்வி கண்டுள்ளோம்.

எங்கு தவறு நடந்தது என்ற விசாரணைகளில் இருந்து அரசு தப்ப முடியாது. ஐ.எஸ் இன் நடவடிக்கைகள் தொடர்பில் எமக்கு அறிக்கைகள் கிடைத்தன, சிரியாவில் போரிடும் சிறீலங்கா முஸ்லீம்கள் தொடர்பிலும் எம்மிடம் புலனாய்வுத் தகவல்கள் இருந்தன.

சிறீலங்கா புலனாய்வுத் துறையினர் எமக்கு இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். ஆனால் பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு நான் அழைக்கப்படவில்லை. இறுதியாக 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே அதில் நான் பங்குபற்றியிருந்தேன். அதன் பின்னர் காவல்துறை மாஅதிபரும் அதற்கு அழைக்கப்படவில்லை. பின்னர் தான் எனக்கு தெரிந்தது பாதுகாப்புச் சபைக் கூட்டம் ஒக்டோபர் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்தது என.

பல நாடுகளில் இருந்தும் புலனாயவுத் தகவல்கள் பரிமாறப்பட்டிருந்தன. ஆனால் ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் எனக்கு தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த தாக்குதலுக்கு சிறீலங்கா அரசும் அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ளதால் அவர்கள் அனைவரும் பதவி விலகுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சிறீலங்கா போன்ற சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள நாடுகளில் அவ்வாறு நிகழாது என தெரிவிக்கப்படுகின்றது.