Tamil News
Home செய்திகள் ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை! ஸ்ரீலங்காவிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கை

ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை! ஸ்ரீலங்காவிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கை

இந்தியாவில் வசிக்கும் ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் வசிக்கும் ஈழ அகதிகள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள மனோ கணேசன்,

“ இலங்கையில் தமிழர்களின் போராட்டங்கள் தோற்று போனமை அல்லது எதிர்பார்த்த இலக்கை அடையாமை ஆகியவற்றுக்கு பல காரணங்கள் இருந்தாலும், தமிழர்களின் சனத்தொகைதான் அதற்கான முதற்காரணம்.

இந்நாட்டில் தமிழர் சனத்தொகை குறைய, குறைய அவர்களது அரசியல் பலம் குறைகிறது. அரசியல் பலம் குறைய, குறைய அவர்களது போராட்டங்கள் தோல்வியடைகின்றன.

தமிழரின் சனத்தொகை குறைவுக்கு இனமாற்றம், வெளியேற்றம் ஆகியவையே பெரும் காரணங்களாக அமைந்து விட்டன. இவற்றில் நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களில் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வரக்கூடிய நிலையில் இருப்பது இந்தியாவில் வாழும் இலங்கை ஏதிலிகள்தான்.

எனவே தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலிகளுக்கு இலங்கை-இந்திய இரட்டை குடியுரிமை கொடுங்கள் என்றுதான் நான் இந்திய அரசை நோக்கி கோரிக்கை விடுக்கிறேன் ” என்றார்.

இதேவேளை, தென்னிந்தியாவில் வசிக்கின்ற ஈழ அகதிகள் நாடு திரும்ப வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்று, வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version