ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)

143

தமிழ்நாட்டின் ஈழ ஏதிலிகள் முகாம்களில் தங்கியுள்ள எமது உறவுகளுக்கு நாம்தமிழர் கட்சியினர் பல்வேறு உதவிகளையும் ஆதரவையும் வழங்கிவருகின்றனர். தற்போதைய கொரோனா நெருக்கடி நிலையிலும் அவர்கள் அம்மக்களுக்கு தமது உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர்.இதுதொடர்பில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு  பாலமுரளிவர்மன் அவர்களை நேர்க்காண்கிறோம்

கேள்வி -தமிழகத்திலுள்ள ஈழ ஏதிலிகள் முகாம்களில் தங்கியுள்ள எமது மக்களுக்கு தற்போதைய கொரோனா பாதிப்பு காலங்களில் தொடர்ச்சியாக அத்தியவசிய உணவுப் பொருட்களை நாம் தமிழர் கட்சியால் வழங்கி வருகின்றீர்கள். அது தொடர்பாக எங்களது வாசகர்களுக்கு அறியத் தாருங்களேன்?

இந்திய அரசின் பார்வையில் தான் அவர்கள் ஏதிலிகள். எமக்கு அவர்கள் சொந்த உறவுகள் தான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்க கூட இங்கு யாரும் இல்லை. எந்த அரசியல் கட்சிக்கும், தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் தலைவர்களுக்கும் முகாம் என்ற பெயரிலான திறந்த வெளிச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எமது சொந்தங்கள் குறித்த அக்கறையோ நினைவோ அறவே இல்லை.

ஏனெனில் எம் ஈழ உறவுகளுக்கு இந்த மண்ணில் வாக்களிக்கும் உரிமை இன்னும் வழங்கப்படவில்லை. எனவே மனிதர்களை வெறும் வாக்குகளாகப் பார்க்கும் அரசியல் தலைமைகள் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. வாக்களிக்காதவர்கள் வாழ்ந்தாலென்ன இல்லாவிட்டால் என்ன என்பது தான் அவர்களின் நிலைப்பாடு.

ஆனால் எமக்கு அப்படியல்ல. குருதி உறவு தொப்புள்கொடி உறவு என நாங்கள் பேச்சுக்காக  சொல்பவர்கள் அல்ல. எனவே தான் ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல. தமிழினத்தின் அவசியம் என்று உலகுக்கு உரக்கச் சொல்கிறோம்.

எமது உயிரனைய உறவுகள் படுந்துயர் பார்த்திருக்க முடியாமல் இந்த பெருந்தொற்றுப் பேரிடர் காலத்தில் அவர்களின் வாழ்நிலை மேலும் சிக்கலுக்குள்ளாகும் என்பதை அவதானித்த எமது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களது அறிவுறுத்தலின் படி ஈழ உறவுகளின் மறுவாழ்வு முகாம்கள் அமைந்துள்ள அந்தந்த தொகுதிகளில் உள்ள கட்சியின் பொறுப்பாளர்கள் வழியாக எமது ஈழ உறவுகளுக்கு அன்றாடம் தேவைப்படுகிற இன்றியமையாத பொருட்களை நாடடங்கு தொடங்கிய நாளிலிருந்தே தொடர்ந்து வழங்கிவருகிறோம். இப்போதும் அந்த பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உலகமே முடங்கியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் முகாம்வாழ் உறவுகளுக்கு துணைநிற்பது நாம் தமிழர் கட்சி மட்டும் தான். அதற்கு உலகெங்கும் பரவி வாழும் எம் உயிர் உறவுகள் உங்களின் பங்களிப்பும் முதன்மையானது.

இந்த மண்ணையும் மக்களையும் இனத்தையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் எமது உறவுகளாகிய உங்களில் பலரும் அரும்பாடுபட்டு உழைத்து சிறுக சிறுக சேமித்ததில் அளித்த உதவியிலிருந்து தான் இந்த பெரும்பணியை எங்களால் செய்ய முடிகிறது.

நாங்கள் உண்மையாகவும் உளப்பூர்வமாகவும் நமது உறவுகளுக்கு வேண்டியவற்றை கொண்டு சேர்ப்போம் என்று எம்மீது நம்பிக்கை வைத்து உவந்தளித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் மறுவாழ்வு முகாம் வாழ் உறவுகள் சார்பாக எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது முற்றுப்பெறும் பணியல்ல. எத்தகைய துயர் காலங்களிலும் பேரிடர் பொழுதுகளிலும் நாம் இணைந்திருந்து இங்குள்ள ஈழ உறவுகளின் துயர் துடைப்போம்.

கேள்வி -எவ்வகையான உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றீர்கள். தமிழகத்திலுள்ள அனைத்து முகாம்களுக்கும் வழங்கக் கூடயதாக இருந்ததா?

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான அரிசி, பலவகை காய்கறிகள் வெங்காயம் தக்காளி, எண்ணெய், கோதுமை மாவு மற்றும் குழந்தைகளுக்கு ரொட்டி, பால் உள்ளிட்ட பொருட்களை வழங்குகிறோம். இவை தவிர உறவுகள் கேட்கும் பொருட்களையும் வழங்குகிறோம். இராமேசுவரம் தொடங்கி கும்மிடிப்பூண்டி வரை தமிழ்நாடு முழுவதும் பெரும்பான்மையான முகாம்களுக்கு கொடுத்திருக்கிறோம். தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி-உங்களது இந்த அத்தியவசிய உணவு வழங்கல் திட்டத்துக்கு தமிழக அரசிடமிருந்து வரவேற்புக் கிடைத்ததா? அல்லது பல தடைகளைத் தாண்டியே இவைகளை செய்ய முடிந்ததா?

தடை என்று எதுவும் இல்லை. மாவட்ட ஆட்சியர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் முறையான அனுமதி பெற்று செயல்படுகிறோம்.

திருப்பத்தூர் அருகே மின்னூர் மற்றும்  சின்னபள்ளி குப்பம் முகாம்களில் உள்ள 350 குடும்பங்களுக்கு நாம் தந்த நிவாரண உதவியை வழங்க மாவட்ட ஆட்சியர் திரு சிவனருள் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

கேள்வி-இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பிலிருந்து தங்களைப் பாதுகாக்க உரிமையோடு தமிழகத்துக்கு அடைக்கலம் தேடி எமது மக்கள் வந்தார்கள். பல பத்தாண்டுகளாக 4 முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். குடியுரிமை கூட மறுக்கப்பட்டவர்களாக உள்ளார்கள். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவீர்களா?

 

“எல்லா ஊரும் எமது ஊர். மாந்தர் யாவரும் எமது உறவினர்”என்கிற பரந்த மனப்பாங்கு கொண்ட ஓர் இனத்தின் மக்கள், தமது தாய்மொழி பேசும் உறவுகள் இருக்கிறார்கள் என்று நம்பி வந்தார்கள். எட்டு கோடி தமிழர்கள் கண்முன்னே அவர்கள் இன்னும் ஏதிலிகளாக வாழும் கொடுமையை இந்திய அரசியல் சூழல் சட்டத்தின் பெயரால் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

நீண்ட காலம் தங்கி இருப்பவர்களும், அவ்விதம் தங்கியிருக்கும் வெளிநாட்டினர்களுக்கு இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளும் குடியுரிமை பெறலாம் என்று இந்திய அரசிலமைப்பு சட்டம் சொல்கிறது. ஆனாலும் இன்னும் எம் உறவுகளுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. குடியுரிமைசட்ட திருத்த மசோதாவிலும் எமது உறவுகள் திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய அரசு எமது  உறவுகளை ஏதிலிகளாக கூட கருதாமல் சட்டவிரோதமாக குடியேறிவர்கள் போல நடத்தும் தமிழின விரோத கொடுஞ்செயலை நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக கண்டித்து வருகிறது.

ஐ. நா வால் உருவாக்கப்பட்ட  அகதிகள் சட்டத்திலேயே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும், காணிகள், உடைமைகள் என எல்லாவற்றையும் இழந்து நாடற்றவர்களாக நல்ல வாழ்வற்றவர்களாக வீடும் முகவரியுமற்றவர்களாக நிற்கும் எமது  ஈழ உறவுகள் மீது  இந்தியா தனது தமிழின விரோதப்போக்கை செலுத்தாமல் அவர்களும் எல்லோரையும் போல வாழ உரிமையுள்ள மனிதர்கள்தான் என தனது பொறுப்பை உணர்ந்து இனியும் காலம் தாழ்த்தாது குடியுரிமை வழங்கி எமது உறவுகள் இங்குள்ள எல்லாரையும் போல உரிமையோடும் சட்டப் பாதுகாப்போடும் இந்தியப் பெருந்தேசத்தின் குடிமக்களாக வாழ வழி செய்ய வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு.

கேள்வி முகாம்களில் அவர்களுக்கு உள்ள பாதிப்புக்கள் தொடர்பாக அவர்களோடு கிரமமான முறையில் கலந்துரையாடி அவற்றை நீக்குவதற்கு ஏதாவது திட்டங்களை முன்னெடுக்கின்றீர்களா?

ஆம். இந்த பெருந்தொற்றுப் பேரிடர் காலத்தில் கூட தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவிகள் எமது ஈழ உறவுகளுக்கும் வழங்கப்பட வேண்டும்  நோய்த்தொற்று அவர்களை தாக்குவதை தடுக்கும் வகையில் முகக்கவசம், கிருமி நாசினி, கபசுரக் குடிநீர் வழங்கப்பட வேண்டும். மருத்துவ முகாம்கள் அமைத்து நோய்க்குறி சோதனை நடத்தப்பட்டு அவர்களின் சுகாதார வாழ்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட வேண்டுகோள்களை தமிழக முதல்வரிடம் எமது தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் முன் வைத்தார்.

மறுவாழ்வு முகாம்களில் உள்ள ஈழ உறவுகள் குறித்து எந்த ஒரு கட்சியோ அதன் தலைவர்களோ எண்ணிப்பார்க்காத நிலையில் நாம்தமிழர் கட்சி முன்வைத்த வேண்டுகோள்களை முதல்வர் ஏற்றார். நாமும் உறவுகளுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசங்களை வழங்கி வருகிறோம். முகாம்களில் உள்ள வேறு சிக்கல்களையும் களைய வேண்டிய முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்வோம். எல்லாவற்றுக்கும் அடிப்படையான குடியுரிமையை எமது உறவுகள் பெற நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடும்.

கேள்வி -கிராம மட்டங்களிலிருந்து புழுதி அரசியலை எளிய மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து வரும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி எந்த நிலையில் உள்ளது?

மக்கள் பிரச்சினைகளுக்காக எப்போதும் களத்தில் நிற்கிற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி என்கிற பாரிய நம்பிக்கை மக்களிடையே வலுப்பெற்று வருகிறது. வளர்ச்சி என்பதை தேர்தல்களை அடிப்படையாக கொண்டு நோக்குவது மற்றும் மக்கள் நம்பிக்கையை பெறுவது என இரண்டாக பிரிக்கலாம். தேர்தலில் வெற்றி பெறுகிற கட்சியெல்லாம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாக கருதிவிட முடியாது. அவர்கள் வாக்குகளை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

நாம் வாக்குக்கானவர்கள் அல்ல. மக்களின் வாழ்க்கைக்கானவர்கள். உயிர்மநேயம் கொண்டு அனைத்துயிர்களுக்குமான தேவைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியலை நாம் மட்டுமே முன்னெடுக்கிறோம். எனவே உண்மையும் நேர்மையுமான செல்வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே இருக்கிறது. தூய்மையான அரசியலை விரும்பும் மக்களிடம் குறிப்பாக இளந்தலைமுறையினரிடம்  நாம் தமிழர் கட்சி பெரும் வளர்ச்சி பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு அப்பால் இந்திய தேசிய இனங்களுக்கிடையேயும்  நாம் தமிழர் நம்பிக்கை பெற்றிருப்பதற்கு இரண்டு நிகழ்வுகளை எடுத்துக்காட்டாக சொல்லலாம். முன் ஏற்பாடுகளின்றி திடீரென நாடடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு  நாடு முழுவதும் உழைக்கும் மக்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாயினர்.

அப்படி இங்கே தமிழகத்தில் சிக்கிக்கொண்ட பீகார் தொழிலாளர்கள் கையில் சிறிதும் பணமில்லாமல் சாப்பிட வழியின்றி பசியால் தவித்த போது தமது சொந்த ஊர்களுக்கு அலைபேசி வழி நிலையை சொல்லி காப்பாற்றுமாறு கதறியுள்ளார்கள்.

அப்போது பீகாரின் உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவர் அங்கே நாம் தமிழர் கட்சி என்று ஒரு கட்சி உள்ளது அவசர உதவிக்கு அவர்களிடம் கேளுங்கள். நிச்சயம் உதவுவார்கள் என்று சொல்லியிருக்கிறார். அதன்பிறகு அந்த தொழிலாளர்கள் நம்மை தொடர்பு கொண்டார்கள்.

அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை தேவையை உடனடியாக செய்யும்படி அண்ணன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியதும் நமது பொறுப்பாளர்கள் விரைந்து நிறைவேற்றினார்கள்.  அந்த தொழிலாளர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

இன்னொரு நிகழ்வு.

சென்னையில் வேலை செய்து வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த இளைஞரை அவருடைய முதலாளி ஊரடங்கால் வேலை இல்லை என 300 ரூபாய் மட்டும்  கொடுத்து ஊருக்கு போகும்படி அனுப்பிவிட்டார். பேருந்து இல்லாததால் நடந்தே சென்ற அவர் கால்கள் வீங்கி மதுராந்தகம் பகுதியில் மேற்கொண்டு நடக்க முடியாமல் தனது தாய்க்கு அலைபேசியில் சொல்லி அழ அந்த தாயும் செய்வதறியாது கதறி நிற்க அவர்களின் உறவினர் ஒருவர் நாம் தமிழர் கட்சிக்காரர்களிடம் சொல்லுங்கள் அவர்கள் உதவுவார்கள் என்று சொல்ல அந்த தாய் நமது தம்பிகளிடம் தகவல் சொல்ல உடனடியாக தாம்பரம், ஊரப்பாக்கம், மதுராந்தகம், மேல்மருவத்தூர், பண்டிருட்டி என பொறுப்பாளர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு அந்த இளைஞனை தேடிக்காத்து பண்டிருட்டியில் நமது கட்சி நிர்வாகி வீட்டில் உணவளித்து இரவு தங்க வைத்து  மறுநாள் பத்திரமாக தாயிடம் ஒப்படைக்கப்பட்டார். மக்களிடம் பெற்றிருக்கும் நம்பிக்கையில் நாம் தமிழர் கட்சி மாபெரும் வளர்ச்சி அடைந்திருக்கிறது. அது மேலும் விரிவடையும்.

கேள்வி-வேறு ஏதாவது எங்களது மக்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றீர்களா?

பேரன்புமிக்க எமது உறவுகள் நலமோடும் வளமோடும் வாழ வேண்டும். நாம் நமது கனவிலும் நினைவிலும் உன்னத குறிக்கோள்களை ஏந்தி நிற்கிறோம். இனத்தின் ஓர்மையால் தான் நமது இலக்குகளை வென்றெடுக்க முடியும். அடுத்தடுத்த தலைமுறைக்கும் நமது மொழியையும் பண்பாட்டையும் சிதையாது ஒப்படைக்க வேண்டும். அத்தகைய இனம் தான் உலகில் நீடித்திருக்கும். தமிழினம் வீழ்ந்தது என்பதோடு நமது வரலாறு முற்றுப்பெற்றுவிடக் கூடாது. மீண்டு எழுந்தான் தமிழன். முன்பு போல நிமிர்ந்து வாழ்ந்தான் தமிழன். உலகை ஆண்டான் தமிழன் என்பதே நமது வரலாறாக நிலைக்கவேண்டும்.

கோடிக்கனவுகள் உண்டு கூடி நிறைவேற்றுவோம்