ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல்! ஈரான் அதிபர் வெளியிட்ட தகவல்

75

ஈரான், அமெரிக்கா இடையேயான மோதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான போர்ப்பதற்றத்தை தணிக்க வல்லரசு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

ஈரான் ராணுவ படைத்தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் யாரும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்த அமெரிக்கா, 11 வீரர்கள் காயமடைந்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராணுவ மோதல் அல்லது போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈரான் அரசு தினமும் ஈடுபட்டு வருகிறது என அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி கூறியுள்ளார்.

‘ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீதான தாக்குதல், ஈரான் ராணுவ படைத்தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு இழப்பீடு என கருதுகிறோம். போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈரான் அரசு தினமும் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்னும் சாத்தியக்கூறுகள் உள்ளன’ என கூறியுள்ளார்.

ஈரான் நாட்டில் வரும் பிப்ரவரி மாதம் 21ம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஈரானில் நிலவி வரும் சூழ்நிலையில் அதிபர் ரவுகானிக்கு இந்த தேர்தல் மிகவும் சவாலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.