இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா

173

லெபனான் எல்லையை கடந்து வந்த இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஹிஸ்புல்லா நேற்று  குறிப்பிட்டுள்ளது. ரம்யி கிராமத்தை நோக்கி வந்த இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஒன்றை முறையான ஆயுதங்களுடன் ஷியா அமைப்பின் போராளிகள் எதிர்கொண்டதாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த ஆளில்லா விமானம் ஹிஸ்புல்லாவின் கைவசம் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

எனினும் வழக்கமான நடவடிக்கையின்போது தெற்கு லெபனானில் தமது ஆளில்லா விமானம் ஒன்று விழுந்ததாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. அதற்கான காரணத்தை குறிப்பிடாத இஸ்ரேலிய இராணுவம் அது ஒரு சாதாரண ஆளில்லா விமானம் என்று தெரிவித்தது.

கடந்த செப்டெம்பர் முதலாம் திகதி இரு தரப்புக்கும் இடையில் பரஸ்பரம் தாக்குதல்கள் இடம்பெற்று பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு ஆதரவாக சிரிய உள்நாட்டு யுத்தத்தில் பங்கேற்றிருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பின் இரு போராளிகள் இஸ்ரேலிய தாக்குதலில் கடந்த மாதம் கொல்லப்பட்டதை அடுத்தே இந்த பதற்றம் அதிகரித்தது.

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு இடையிலான புதிய யுத்தம் ஒன்று பிராந்தியம் எங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

இரு தரப்புக்கும் இடையில் 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற 33 நாள் யுத்தத்தில் பொதுமக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 1,200 லெபனானியர்கள் மற்றும் படையினரை பெரும்பான்மையாகக் கொண்ட 160 இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலில் வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் கடும் சவாலை எதிர்கொண்டிருக்கும் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மோதல் ஒன்றை தவிர்ப்பதில் அவதானத்துடன் உள்ளார்.