இழுத்து மூடும் துர்ப்பாக்கிய நிலையில் வவுனியா சின்னத்தம்பனை பாடசாலை வீடியோ இணைப்பு -கோ- ரூபகாந்

55

வவுனியா மாவட்டம் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்பட்ட சின்னத்தம்பனை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை. 1957ஆம் ஆண்டு மக்களின் முயற்சியில் ஓலைக் கொட்டில்களில் ஆரம்பிக்கப்பட்டது.

1960.10.29 அன்று சின்னத்தம்பனை பாடசாலையை இலங்கை அரசு பொறுப்பேற்று, சின்னத்தம்பனை அரசினர்  தமிழ் கலவன் பாடசாலையாக இயங்கி வந்தது.

1984ஆம் ஆண்டு நாட்டில் இடம் பெற்ற வன்செயல் காரணமாக சின்னத்தம்பனை மக்கள் கிராமத்திலிருந்து இடம் பெயர்ந்தனர். அப்போது பாடசாலை மூடப்பட்டது. பின்னர் 1990ஆம் ஆண்டு கிராமத்தில் மக்கள் மீளக் குடியமர்ந்து பாடசாலை சிறப்பாக இயங்கி வந்தது. தொடர்ந்து நாட்டில் இடம் பெற்ற போர் காரணமாக மீண்டும் பாடசாலை மூடப்பட்டு மக்கள் இடம் பெயர்ந்தனர்.

2001ஆம் ஆண்டு சின்னத்தம்பனை கிராம மக்கள் மீண்டும் கிராமத்தில் மீள்குடியேறினர். அதன் பின் 2002.01.04 ஆம் திகதி ஓலைக் கொட்டில்கள் அமைத்து கொட்டில் வகுப்பறையில் சுமார் 40 தொடக்கம் 50 மாணவர்கள் கல்வி கற்று வந்தனர்.

2013.12.15ஆம் திகதி எஸ்.மரியநாயகம் என்பவர் பாடசாலை அதிபராக நியமனம் பெற்று 75 மாணவர்களுடன் பாடசாலையில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வந்தது.

இவ்வாறு வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னத்தம்பனை பாடசாலையில் இன்று இரண்டு மாணவர்கள் மாத்திரமே கல்வி கற்று வரும் துர்ப்பாக்கிய நிலையில், பாடசாலை இழுத்து மூடும் அபாய நிலை  இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கடந்த காலங்களில் செட்டிகுளம் பெரிய புளியங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் 2010ஆம் ஆண்டு காண்டைக்குளம் திருநாவுக்கரசு வித்தியாலயமும் மாணவர்கள் வருகை குறைவால் இழுத்து மூடப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.

சின்னத்தம்பனை கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத காலத்தில் சிறப்பாக இயங்கி வந்த பாடசாலை, தற்போது நிரந்தர வகுப்பறைக் கட்டடங்கள், மலசலகூட வசதி, விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா, என அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடியிருந்தும் மாணவர்கள் வருகை மிகக் குறைந்துள்ளமையால் கல்விக்கூடம் மூடப்படும் நிலையில் உள்ளது.

அதிபர் உட்பட மூன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற ஆவலுடன் அதிகாலையில் எழுந்து பாடசாலைக்கு வருகை தந்தால், இரண்டு மாணவிகள் மத்திரமே பாடசாலைக்கு வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு நாளும் புதிதாக மாணவர்கள் பாடசாலையில் இணைவார்கள் அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்துடனேயே வீடு திரும்புகின்றனர்.

வகுப்பறையை சுத்தம் செய்தல், பூஞ்செடிகளுக்கு நீர் ஊற்றுதல், முற்றம் கூட்டுதல் உட்பட அனைத்து வேலைகளையும் ஆசிரியர்களும் அதிபரும் இணைந்தே செய்கின்றனர்.

சின்னத்தம்பனை கிராமத்தில் உள்ள பாடசாலையில் ஏன் பெற்றோர்கள் அக்கறை செலுத்தவில்லை.?

கிராமத்தில் இயங்கும் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் நிலையில் இருக்கும் சுமார் 40 தொடக்கம் 50 மாணவர்கள் கிராமத்தில் இருக்கும் பாடசாலையில் கல்வி கற்காமல் ஏன் இரண்டு கிலோ மீற்றர்  தொலைவில் இருக்கும் பாடசாலைக்குச் செல்கின்றார்கள்?

சின்னத்தம்பனை பாடசாலை உயிர்ப்புடன் மீள் எழுச்சி பெற்று கிராமத்தின் கல்வி வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டு செல்ல வேண்டிய கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர்,  சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், மாதர் அபிவிருத்திச் சங்கத்தினர் ஏன் மௌனமாக இருக்கின்றார்கள்.?

கிராமத்தின் அழியாத கல்விச் சொத்தை கட்டிக் காப்பாற்ற வேண்டிய கிராம மக்கள் ஏன் பாடசாலையில் தமது வெறுப்பைக் காட்டுகின்றனர் என பல கேள்விகள் எழுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு கோட்டக் கல்வி அதிகாரியை எமது இலக்கு செய்திப் பிரிவு தொடர்பு கொண்டு வினவியது.

அதற்கு பதில் வழங்கிய கோட்டக் கல்வி அதிகாரி முத்து ராதாகிருஸ்ணன், வவுனியாவில் செட்டிகுளம் பிதேசத்தில் பல கிராமப் பாடசாலைகளில் மாணவர்களுடைய வரவு கணிசமான அளவு குறைந்து கொண்டு செல்கின்றது.

நவநாகரீக உலகில் நகர்ப்புற பாடசாலைகளில் கல்வி கற்றால் சிறந்த பெறுபேறுகளை பெற முடியும் என மக்கள் நினைக்கின்றார்கள். இதன் காரணத்தினால் ஊரில் இருக்கும் பாடசாலைகளில் மாணவர்கள் பிரசன்னம் குறைவாகவே காணப்படுகின்றது.

அந்த வகையில் வவுனியா சின்னத்தம்பனை பாடசாலையில் தற்போது இரண்டு மாணவர்களே கல்வி கற்கின்றனர். அவர்களுக்காக அதிபர் உட்பட நான்கு ஆசிரியர்கள் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந் நிலையில் பாடசாலையை தொடர்ந்து இயங்கச் செய்வதற்கு பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், கிராமத்து பொது அமைப்புக்கள் என பலரிடம் பலமுறை கூட்டம் கூடிக் கதைத்தும் ஒருவிதமான பயனும் கிடைக்கவில்லை.

இவ்வாறான நிலையில் சின்னத்தம்பனை கிராமத்தில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களுக்கும் கல்றல் செயற்பாடுகளுக்கு ஏற்ற சூழலாக சின்னத்தம்பனை பாடசாலை அமையவில்லை. எனவே மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு குறித்த இரண்டு மாணவர்களையும் அயல் கிராமத்தில் அமைந்திருக்கும் வீரபுரம் பாடசாலையில் இணைத்து கல்வி புகட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றோம்.

சின்னத்தம்பனை பாடசாலைக்கு மாணவர்கள் வரவு அதிகரிக்கும் பட்சத்தில் தொடர்ந்தும் சின்னத்தம்பனை பாடசாலை இயங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என கோட்டக் கல்வி அதிகாரி தெரிவித்தார்.