இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய தொழில்நுட்பம்

99

குற்றங்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக முகங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை உபயோகிப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக காவல்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை காவல்துறை திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் சிறிலங்கா டெலிகொம் ஆகியன ஒன்றிணைந்து இந்த தொடர்பாடல் கட்டமைப்பை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் சட்டத்தின் பிடியில் இருந்து விலகிச் செல்பவர்கள் பற்றிய தகவல்கள் இந்தக் கட்டமைப்பில் உள்ளடக்கப்படும்.

எந்தவொரு காவல்துறை அதிகாரியும் எவ்விடத்திலிருந்தும் ஸ்மாட் கையடக்கத் தொலைபேசியின் ஊடாக அக்கட்டமைப்புடன் தொடர்பு கொண்டு குற்றவாளியை அடையாளம் காணமுடியும்.

இதனால் குற்றவாளிகளை துரிதமாக சட்டத்தின் முன் நிறுத்தவும், போக்குவரத்துக் குற்றங்களை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கிலேயே இக்கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காவல்துறைத் திணைக்களத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் அதன் மனிதவள மற்றும் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்து சிறந்த பண்புடனான தரமான கொவல்துறை சேவையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், அதன்கீழ் இந்த புதிய திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.