இலங்கையில் ஒரு தமிழன் ஜனாதிபதியாவது நடைபெறாத ஒன்று – எம்.கே.சிவாஜிலிங்கம்

147
தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளைக்கூட ஏற்றுக் கொள்ள மறுக்கும் சிங்கள வேட்பாளர்களுக்கு நாங்கள் வாக்களிக்கத் தயாரில்லை. இதைக் காட்டவே தமிழ்த் தேசிய சிந்தனையுடன் எனக்கு வாக்களியுங்கள். நான் ஒரு குறியீடு மட்டுமே என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

நேற்று(30) மாலை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இன்று தபால்மூல வாக்களிப்பு தொடங்குகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் நான் தமிழ் மக்களுக்கு கூறவிரும்புவது ஒன்று மட்டுமே. ஒரு தமிழன் இலங்கையில் ஜனாதிபதியாவது கனவில்கூட நடக்காத ஒன்றாகும். ஆனாலும்கூட நான் எதற்காக தேர்தலில் நிற்கின்றேன் என பலர் கேட்டுள்ளனர்.

வடக்கிலுள்ள அரசியல் தரப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக பேசினார்கள்.

ஆனாலும் அந்த முயற்சி இறுதியில் தோல்வியடைந்தது. அந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே நான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றேன். இப்போது நான் ஒரு குறியீடு மட்டுமே எனத் தெரிவித்தார்.