Tamil News
Home செய்திகள் இராணுவத்திடம் கையளித்த எனது மகனை காணவில்லை என அரசு கூறுவதை ஏற்க முடியாது- பாலயோகினி –...

இராணுவத்திடம் கையளித்த எனது மகனை காணவில்லை என அரசு கூறுவதை ஏற்க முடியாது- பாலயோகினி – வீடியோ இணைப்பு

போர் நிறைவடைந்த பின்னர் 2009இல் கைதாகிய எனது மகனை 2009 ஜுலை இருப்பதாகக் கூறினார்கள். பின்னர் 2014 ஒக்டோபர் 24ஆம் திகதி இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் இப்போது இல்லை எனக் கூறுகின்றார்கள் என வவுனியாவில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தில் கலந்து கொண்ட பெரிய புது றோட் சாஸ்திரி கூழாங்குளத்தைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை பாலயோகினி தெரிவித்துள்ளார்.


இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இன்று (16) நாங்கள் 1032ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றோம். எனது மகனான 17 வயதுடைய (26.05.1991) சங்கப்பிள்ளை ரதன் என்பவர் 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி ஓமந்தையில் எங்களுடன் நின்ற போது விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டார்.

அந்த இடத்தில் பெண்கள் வேறாகவும் ஆண்கள் வேறாகவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். எனது மகனை விசாரணை முடிந்து விட்டதும் அவர் என்னிடம் வரும் போது ஒரு இராணுவத்தினன் வந்து அவரை இன்னும் ஒருமுறை விசாரிக்க வேண்டியுள்ளது என்று கூறி அழைத்த போது நான் அவரை விடமுடியாது என மறுத்தேன். இருந்தும் ஒருமுறை விசாரித்த பின் விட்டுவிடுவதாகக் கூறி அழைத்துச் சென்றார்.

பிற்பகல் 4 மணிவரை காத்திருந்தேன். அவரை விடவில்லை. என்னை பலவந்தமாக பஸ்ஸில் ஏற்றி அனுப்பி விட்டனர். அன்றிலிருந்து இன்றுவரை பதினொரு வருடங்களாக அழுதுகொண்டேயிருக்கின்றேன்.

2009 ஜுலை 12ஆம் திகதி எனது மகனுடன் 40பேர் செட்டிகுளம் பாடசாலையில் இருப்பதாகவும் அவர்களை உறவினர்களிடம் கொண்டுவந்து விட இருப்பதாகவும் நாங்கள் அகதி முகாமில் இருக்கும் போது கூறினார்கள். பின்னர் எந்தவித பதிலும் இல்லை. அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி எனது மகனின் கடிதத்துடன் வந்தார்கள். அவர் தான் படித்த பாடசாலை போன்ற எல்லா விபரங்களையும் எழுதிக் கொடுத்திருந்தார்.

என்னுடைய மகனின் விபரங்களை கேட்டனர். நான் அவரை ஒருதடவை பார்க்க வேண்டும் என்று கூறினேன். ஐந்து வருடங்கள் பொறுத்திருந்து விட்டீர்கள். இன்னும் ஒரு மாதத்தில் உங்கள் மகனை விட்டுவிடுவோம் எனக் கூறினார்கள். கிராம சேவை அலுவலகரின் கடிதத்துடன் வாருங்கள் விடுவோம் என்று கூறினார்கள்.

ஐந்து வருடங்களின் பின்னர் அந்த ஒரு நிமிடம் நான் எனது மகன் வந்து விடுவார் என்று சந்தோசமடைந்தேன். ஆனால் இன்றுவரை வரவில்லை. இன்று நாங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையின் படத்தை இன்று பத்து வருடங்களாக கையில் கொண்டு திரிகின்றோம். எனது மகன் உயிரோடு இருந்தால் இப்போது அவருக்கு 28 வயது.

எவ்வளவோ துன்பங்களுக்கு மத்தியில் வெள்ளத்திலும் எறிகணை வீச்சுக்களிலும் காப்பாற்றிக் கொண்டு வந்தோம். ஓமந்தைக்கு போன பின்னர் எமக்கு ஒரு விடிவு கிடைக்கும் என நினைத்தோம். இவ்வளவு பாடுபட்டு கொண்டு வந்து இன்று இராணுவத்தினரிடம் கொடுத்து விட்டு நிற்கின்றோம்.

தற்போதைய ஜனாதிபதி காணாமல் போன எங்கள் பிள்ளைகள் இல்லை என்று கூறுகின்றார். ஆனால் எங்கள் பிள்ளைகள் காணாமல் போகவில்லை. நாங்கள் அவர்களை இராணுவத்தினரின் கைகளில் கொடுத்தோம். என்னைப் போல் எத்தனையோ தாய்மார் தங்கள் பிள்ளைகளை இராணுவத்தினரின் கைகளில் கொடுத்திருக்கின்றார்கள்.

காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் கொடுக்கப் போவதாகவும் நிவாரணம் கொடுக்கப் போவதாகவும் கூறுகின்றார்கள். எங்களுக்கு நிவாரணம் வேண்டாம். எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வேண்டும். எங்கள் பிள்ளைகள் இருக்கின்றார்கள். இந்த அரசாங்கம் சரியான பதிலைக் கூறவேண்டும். அனைத்துலக நாடுகள் எல்லாம் கவனித்துக் கொண்டிருக்கின்றன.

சிறீலங்கா ஜனாதிபதி இந்தியா சென்ற போது தமிழருக்கு சரியான தீர்வை வழங்க வேண்டும் என்று இந்தியா கூறியது. எல்லாவற்றிற்கும் சரியென்று கூறிவிட்டு வந்து இன்று ஜனாதிபதி காணாமல் போனவர்கள் இல்லை என்று கூறுகின்றார்.

ஜனாதிபதி ஓர் நாட்டின் தந்தைக்கு சமனானவர். அவர் எப்படி எங்கள் பிள்ளைகள் இல்லை என்று கூறுவார்.

அவர் தமிழ் மக்களை வேறாகவும் முஸ்லிம் மக்களை வேறாகவும் சிங்கள மக்களை வேறாகவும் பார்க்க முடியாது. எல்லோரையும் சரிசமனாகவே பார்க்க வேண்டும். அனைத்துலக நாடுகள் எங்கள் நாட்டில் நடப்பவற்றை அவதானிக்க வேண்டும்.

இங்கு எப்படி போராட்டம் நடைபெறுகின்றது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். நாங்கள் வறுமையில் வாழ்கிறோம். ஆனால் எமக்கு காசு பணம் வேண்டாம். நாங்கள் துன்பங்களுக்கு மத்தியில் தான் எங்கள் பிள்ளைகளை வளர்த்தோம்.

எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வேண்டும். அடைத்து வைத்திருக்கும் எங்கள் பிள்ளைகளை எங்களிடம் விடவும். இல்லையென்று கூறவேண்டாம். 2009இல் கைதாகிய பிள்ளை 2009 ஜுலை இருப்பதாகக் கூறினார்கள். பின்னர் 2014 ஒக்டோபர் 24ஆம் திகதி இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் இப்போது இல்லை எனக் கூறுகின்றார்கள்.

புதிய அரசாங்கம் வந்ததும் எங்கள் பிள்ளைகளுக்கு பதில் கிடைக்கும் என்றும் எங்கள் பிள்ளைகளை பார்ப்போம் என்றும் எவ்வளவு ஆவலாக இருந்தோம். எங்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும் என நாங்கள் எண்ணியிருந்தோம். எங்கள் பிள்ளைகளை எங்களுக்கு மீட்டுத் தாருங்கள்.

கேள்வி- புலம்பெயர்ந்த தமிழர்களுக்க என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்- புலம்பெயர்ந்த தமிழர்களும் எங்கள் செய்திகளைப் பார்க்க வேண்டும். நாங்கள் எவ்வாறு எங்கள் உயிர்களைக் கேட்டுப் போராடுகின்றோம் என பார்க்க வேண்டும்.

நீங்களும் எங்களுக்கான போராட்டத்தை செய்யுங்கள். எங்களுக்கு ஒரு நீதியைப் பெற்றுத் தாருங்கள் என்று தான் நாங்கள் கேட்கின்றோம்.

நாங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கொடிகளைப் பிடிப்பதுஇ அவர்கள் வரவேண்டும். எங்களுக்கு சரியான பதிலைத் தரவேண்டும் என்றே நாங்கள் அவர்களின் கொடியைப் பிடிக்கின்றோம்.

Exit mobile version