இப்படிப்பட்ட இராணுவச் சோதனைகள் அவசியமா?மேலும் பாதிப்புக்குள்ளாகும் தமிழ் மாணவர்கள் – சுருதி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் வடக்கில் சோதனைச் சாவடிகள் அதிகரிதுள்ளன என்பது பலருக்கும் தெரிந்ததே. இது ஏன் என்பதுதான் புதிராக உள்ளது.

பள்ளிக்கு செல்லும் சிறு பிள்ளைகளின் பைகள் கூட இராணுவத்தினராலும் பொலிசாராலும் ஆசிரியர்களாலும் சோதனை செய்யப்படுகின்றன. அவர்களின் மதிய உணவு பெட்டிகளும் திறந்து பார்க்கப்படுகிறது. பிள்ளைகள் வழமையாக புத்தகங்கள் உணவுப்பெட்டிகள் எடுத்துச் செல்லும் பைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. எல்லாமே உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியக்கூடிய ஒளிபுகும் பைகளில் தான் எடுத்துச் செல்லாம்.

இங்கு அதிசயம் என்னவென்றால், இத்தகைய கட்டுப்பாடும் சோதனையும் பிள்ளைகளின் கல்வியையும் மனநிலையையுமு் எவ்வளவு பாதிக்கும் என்பதை பற்றி சிந்திக்காமல், இராணுவத்தை வெளியேறச் சொல்லி கேட்ட தமிழ் ஆசிரியர்களும் இப்போது இராணுவத்துடன் சேர்ந்து பிள்ளைகளை சோதனை செய்கிறார்கள். இராணும் தேவை என்று இவர்களும் ஏற்றுக்கொண்டு தானே இதை செய்கிறார்கள். ஈஸ்டர் தாக்குதல் எம்மாதிரியான மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. ஈஸ்டர் தாக்குதலால் யார் எல்லாம் நன்மை அடைகிறார்கள் என்பதும் கொஞசம் கொஞ்சமாக தெரிய வருகிறது.