இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ரிஷாத்: செல்வம் குற்றச்சாட்டு

18

வவுனியாவில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமான செயற்பாடுகளை ரிஷாத் பதியுதீன் தனது ஆதரவாளர்களை வைத்துச் செயற்படுத்தி வருகின்றார் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

வவுனியா, பம்பைமடு குப்பை மேடு விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

“இன்று வவுனியாவில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமான செயற்பாடுகளை அமைச்சர் ரிஷாத் தனது ஆதரவாளர்களை வைத்துச் செயற்படுத்தி வருகின்றார். அதன் ஓர் அங்கமே பம்பைமடு குப்பைக்கிடங்கு விவகாரமும் ஆகும். பல ஆண்டுகளாக வவுனியா நகர மற்றும் கிராமங்களின் குப்பைகள் பம்பைமடுக் கிராமத்திலேயே கொட்டப்பட்டு வருகின்றன.

இவ்விடயம் ரிஷாத் பதியுதீனுக்கு தெரிந்திருந்தும் அப்பாவிமுஸ்லிம் மக்களைத் தனது அரசியல் நலனுக்காகக் குப்பைக் கிடங்குகளையும் பொருட்படுத்தாமல் அதற்கு அருகில் சாளம்பைக் குளத்தில் வனவளத் திணைக்களத்தின் காடுகளை அழித்து குடியேற்றியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது தவறை மறைப்பதற்காக அந்த மக்களை ஏவி இதுவரை காலமும் குப்பை கொட்டப்பட்டு வந்த இடத்தை மாற்றவேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் செய்யத் தூண்டியுள்ளார். ரிஷாத் அமைச்சராகவும் அபிவிருத்திக்குழுத் தலைவராகவும் இருந்தபோது குப்பைக் கிடங்கு விவகாரத்துக்குத் தீர்வாக சிறந்த முறையில் அதனை அமைப்பதற்கு 20 கோடி ரூபா பெற்றுத் தருவதாகக் கூறிய போதிலும் அதனைப் பெற்றுக்கொடுக்காதமை அவரது தவறே தவிர வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைத் தலைவரின் தவறல்ல.

இன்று ஒரு மாற்றுத் தீர்வில்லாத நிலையில் அந்தக் குப்பைக் கிடங்கில் குப்பைகளை கொட்ட வேண்டாம் எனக் கூறுகின்றமை மக்களையே பாதிக்கும். இதனை வெளிப்படையாகத் தெரிவிக்கும் பிரதேச சபைத் தவிசாளரை தரக்குறைவான வார்த்தைகளால் நாடாளுமன்றத்தில் கூறுகின்றமையால் தனது தவறை ரிஷாத் மறைத்துவிட முடியாது. எனவே தவிசாளர் சரியான தீர்மானத்தை மக்கள் நலன் சார்ந்து எடுக்கும்போது தனது அரசியல் தேவைக்காக அவர் இயங்கவில்லை என ரிஷாத் எண்ணுகின்றமை மடமைத்தனமானது. பிரதேச சபைத் தலைவரின் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளுக்கு நாம் எப்போ தும் உறுதுணையாக இருப்போம்.”