இனப்படுகொலையாளர்களை மீட்பர்களாக சித்தரிக்க முற்படுகின்றது சிறீலங்கா அரசு -ஆர்த்திகன்

230

மிகப்பெரும் இனப்படுகொலை ஒன்றில் ஈடுபட்ட தனது இராணுவத்தை தமிழ் மக்களைக் காப்பாற்றும் ஒரு மனிதநேயமிக்க மீட்பாளராக காண்பிப்பதில் சிறீலங்கா அரசு மிகவும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.

வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள பெருமளவான இராணுவத்தை தக்கவைக்கவும், தமிழ் மக்களின் மனங்களை வெல்வதன் மூலம் அவர்களுக்கு நன்மை செய்வது என்ற போர்வையில் ஒரு மறைமுக இராணுவ ஆக்கிரமிப்பில் அவர்களை வைத்திருக்கவும் வேண்டிய வழிகளை நோக்கி சிறீலங்கா இராணுவமும் அரசும் செயற்பட்டு வருகின்றது.

வெள்ளம் வந்தால் படையினர் தான் ஓடுகின்றனர், உணவு விநியோகம், உதவிப்பொருட்கள் விநியோகம், கட்டிடம் கட்டுதல், கோவில் திருவிழாக்கள் என எல்லாவற்றிலும் வடக்கில் சிறீலங்கா இராணுவமே முன்னின்று செயற்பட்டுவருகின்றது. ஆனால் தெற்கில் அவ்வாறான ஒரு நிலை இல்லை. அது மட்டுமல்லாது, செய்யப்படும் உதவிகளை புகைப்படங்கள் மற்றும் காணொளிகளாக எடுத்து அதனை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றது சிறீலங்கா அரசு.

கடந்த ஏப்பிரல் தெற்கில் குண்டு வெடித்தபோதும், வடக்கில் தான் அதிக காவலரன்கள் முளைத்துள்ளன. வடபகுதியில் உள்ள பாடசாலைச் சிறுவர்கள் மீது தான் சிறீலங்கா இராணுவம் அதிக அக்கறை காண்பிக்கின்றது. சிறீலங்கா அரசின் இந்தப் பிரச்சாரத்தின் உச்சக்கட்டமாக கடந்த வாரம் “அயலவர்” என்ற பெயரில் புதிய பத்திரிகை ஒன்றையும் சிறீலங்கா இரணுவம் வெளியிட்டு வருகின்றது.

அதில் தமிழ் மக்களுக்கு பலவந்தமாக செய்யப்படும் உதவிகள், மற்றும் அவர்களின் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீண்டும் வழங்குவதை ஏதோ படையினர் தம்வசம் உள்ள காணிகளை வழங்குவது போன்று பிரச்சாரப்படுத்திய புகைப்படங்களுடன் தமிழ் மக்களைக் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பத்திரிகை.

அதாவது தமிழ் இனத்தின் மீது தான் மேற்கொண்ட இனப்படுகொலையின் வடுக்களை அடுத்த தலைமுறையின் மனங்களில் இருந்து அழிக்க முற்படுகின்றது சிறீலங்கா இராணுவம். வயதான மூதாட்டியை இரு கரங்களில் ஏந்தியவாறு வெள்ளத்தில் நடந்துவரும் சிறீலங்கா இராணுவச் சிப்பாயின் படத்தினை பத்திரிகையில் பார்க்கும் தமிழ் குழந்தைக்கு எமது வரலாறு மறுவளமாகத் தான் மனதில் பதியும்.

அதாவது சிறீலங்கா அரசு மிகவும் அனுபவமும் அறிவும் மிக்க வெளிநாட்டு அமைப்புக்களின் வழிகாட்டலில், மிகவும் சக்திவாய்ந்த ஒரு உளவியல்போரை ஆரம்பித்துள்ளது. அதில் வெற்றியும் கண்டு வருகின்றது.  ஏனெனில் சிறீலங்கா படையினர் அரிசி கொடுத்தாலும், துவிச்சக்கர வண்டி கொடுத்தாலும் ஓடிச்சென்று வாங்கும் தமிழ் மக்கள் தமது இனத்தின் அடையாளங்களை தொலைத்து நிற்கின்றனர். கொடூரமான இனப்படுகொலை ஒன்றைச் செய்த இராணுவம், அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனநிலை, அவர்களின் துன்பங்கள் என்பவற்றை மறந்து சிங்கள இராணுவத்தின் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் ஒரு பகுதி மக்களும், சில அரசியல்வாதிகளும் முன்நிற்பது தான் எமது இனம் பெற்றுள்ள சாபக்கேடு.

இனப்படுகொலையில் ஈடுபட்ட சிறீலங்கா இராணுவத்திற்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டி அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களை தடைசெய்து வருகின்றன அனைத்துலக அமைப்புக்கள். அதில் முக்கியமானது உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பு.

அதன் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்காவுடன் அண்மையில் ஒரு சந்திப்பு ஒன்றை மேற்கெண்டிருந்தேன். ஆதாரங்களைத் திரட்டி சிறீலங்கா இராணுவத்தின் 59 ஆவது படையணியின் முன்னாள் கட்டளை அதிகாரி சவீந்திர டீ சில்வாவுக்கு எதிராக எவ்வாறு வழக்குகள் பதிவு செய்துள்ளோம் என்பதில் ஆரம்பித்து, சிறீலங்கா படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆதாரங்களைச் சேகரித்து வருவது தொடர்பில் தமது அமைப்பின் நடவடிக்கைகளை அவர் தெளிவாகக் கூறியிருந்தார்.

கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலில் பின்னர் சிறீலங்கா அரசு எவ்வாறு மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என முன்னர் இனங்காணப்பட்ட படை அதிகாரிகளை மீண்டும் களத்தில் இறக்கியுள்ளது. அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்தும் இந்த அமைப்பு தெளிவான அறிக்கை ஒன்றை மக்களுக்கும், அனைத்துலக சமூகத்திற்கும் வெளியிட்டிருந்தது. இந்த அமைப்புக்களுக்கு உள்ள அக்கறைகள் ஏன் எமது மக்களில் ஒரு பிரிவினருக்கும், தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினருக்கும் இல்லாமல் போனது?

சிறீலங்கா அரசைப் பொறுத்தவரையில் தமது இராணுவத்தின் போர்க்குற்றங்கள் மற்றும் இனஅழிப்புக்களை மறைக்கும் முயற்சிகளை அது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அதற்கு சிறந்த உதாரணம் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற கூட்டமாகும்.

சிறீலங்காவின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் தீபிகா உடுகம மற்றும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் சாந்தா கொட்டகொட ஆகியவர்களை அழைத்த சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படைக்கான பணியில் சிறீலங்கா படையினர் அதிக அளவில் ஈடுபடவேண்டும் எனவும், அதற்கு தடையாக உள்ள காரணிகளைக் கண்டறிந்து அவற்றிற்கான தீர்வைக் காணுமாறும் பணித்திருந்தார்.

அமைதிப் பணியில் சிறீலங்கா இராணுவம் ஈடுபடுவது தாமதமானால் ஐ.நா அமைப்பில் சிறீலங்கா இராணுவத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படும் எனவும், அதிகளவில் சிறீலங்கா இராணுவத்தினரை ஐ.நா அமைதிப்படையில் இணைப்பதற்கான வழிகளைத் தேடுமாறும் பணித்திருந்தார். அதாவது ஒருபுறம் ஐ.நாவின் அமைதிப்படையில் சிறீலங்கா இராணுவம், மறுபுறம் வடக்கில் தமிழ் மக்களுக்கு உதவுவதில் சிறீலங்கா இராணுவம், அதற்கு அப்பால் தமிழ் மக்களுக்கான பத்திரிகையை வெளியிடுகின்றது சிறீலங்கா இராணுவம்.

அதாவது சிறீலங்கா அரசும் அதன் படைகளும் மிகவும் சிறந்த திட்டமிடலுடன் தெளிவான பதையில் பயணிக்கின்றனர், ஆனால் 30 வருடத்திற்கு மேலாக குருதி சிந்திப் போராடிய இனம் இன்று அரசியல் தெளிவின்றி தமக்குள் முரண்பட்டு, தெருச் சண்டைக்காரர்களாக மாறி, தமது மக்களை எதிரியிடம் கையேந்த வைத்து நிற்கின்றது.

இந்த நிலைக்கு மக்களைக் கொண்டு சென்றதற்கான பொறுப்பை தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் அனைத்தும் ஏற்க வேண்டும் என்பதுடன் இதில் இருந்து மக்களை மீட்பதற்கான வழிகளைத் தேடவேண்டும். இல்லை எனில் விரிவாக்கம் பெற்றுவரும் பௌத்த ஆலயங்கள் மூலம் நிலங்களை இழந்தது போல எமது மக்களையும் இனப்படுகொலையாளிகளிடம் இழந்து வரலாற்றை தொலைத்த இனமாக வெளிநாடுகளில் அலையவேண்டிய நிலை ஒன்று ஏற்படும்.