இந்தியா திருச்சி மத்திய சிறையிலிருந்த ஈழத் தமிழ் கைதிகள் தற்கொலைக்கு முயன்றனர்

இந்தியா திருச்சி மத்திய சிறையிலுள்ள ஈழத் தமிழர்கள் உட்பட 20பேர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக அறிய முடிகின்றது.

குறித்த சிறையில் ஈழத் தமிழர் 38 பேர் உட்பட பங்களாதேஸ், சீனா, பல்கேரியா முதலான நாடுகளைச் சேர்ந்த 70பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போலிக் கடவுச்சீட்டு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தமை, விசா முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தமை, போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஈழத் தமிழர்கள் உட்பட 46பேர் தங்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி நேற்று(07) முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

வழக்கில் பிணை கிடைத்தும் தங்களை வெளியே விட உரிய தரப்பினர் மறுப்பதாகவும், சட்டவிரோதமாக தங்களை கைது செய்து முகாமில் தடுத்து வைத்திருப்பதாகவும் இவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை இவர்களில் 20பேர் இன்று காலை நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதாக  இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, இவர்களுக்கு முகாமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இவர்கள் எந்த நாட்டவர்கள் என்பது குறிப்பிடப்படவில்லை.

இதேவேளை இவர்களுக்கு தடுப்பு முகாமில் நஞ்சு எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.