இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி-10

73

10. மட்டக்களப்பு பொதுச் சந்தைப் படுகொலை 12 டிசம்பர் 1987

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பொதுச்சந்தை நகரில் அமைந்துள்ளது. இச்சந்தை பெருமளவான மக்கள் பயன்படுத்துமிடமாகும். 1987.12.27 அன்று காலை 10.00 மணியளவில் சந்தையையும்,சந்தையைச் சுற்றியும் பெரும் தொகையான இந்திய இராணுவத்தினர் காவலில் ஈடுபட்டிருந்தார்கள். திடீரெனக் காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய இராணுவத்தினர் சந்தையில் நின்ற பொதுமக்களை நோக்கிச் சுடத் தொடங்கினார்கள். சந்தையிலிருந்த கடைகளினைத் தீயிட்டு எரித்தார்கள். எரிந்து கொண்டிருந்த கடைகளின் மேல் இறந்தவர்களின் உடல்களையும் குறை உயிருடன் இருந்தவர்களையும் தூக்கிப்போட்டார்கள். இவ்வாறு எரியும் நெருப்பில் இந்திய இராணுவத்தினரால் உயிருடன் போடப்பட்டவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவார்கள்.

நடத்தப்பட்ட தாக்குதலில் மொத்தமாக நூற்றி ஐம்பத்தொன்பதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். இவர்களில் முப்பத்தொரு பேரினது உடல்கள் மட்டக்களப்புப் பொதுமருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. எண்பத்தைந்திற்கும் மேற்பட்ட உடல்கள் கடைகளுடன் சேர்ந்து எரிந்து சாம்பலானது.