இணைப்பாளர் தாக்கப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செல்வம் கண்டனம்

74

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் கடந்த திங்கட்கிழமை தாக்கப்பட்டதையடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (01) ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீது கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காணமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தை எதிர்த்து, வவுனியா வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1047ஆவது நாளாக  போராட்டம் நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்களாலேயே இந்த ஆர்பபாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “ஜனநாயக போராட்டத்தை வன்முறையால் அழிக்க முடியாது.“,  “ ஐ.நா வே அமைதி காக்கும் படையை உடனே அனுப்பு.“, “அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்றவை ஓநாய்களிடமிருந்து தமிழர்களைப் பாதுகாக்க உடனே வரவேண்டும்.“ போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை தாங்கியிருந்தனர்.

இதேவேளை மேற்குறித்த தாக்குதல் தொடர்பாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

 

இணைப்பாளர் கோ. ராஜ்குமாரை துரத்திச் சென்று வீதியோரத்தில் பலர் சேர்ந்து கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். இது வருந்தத்தக்க ஒரு செயலாகும்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது பிள்ளைகளை தொலைத்து விட்டு கடும் மனவேதனையுடன் 1040 நாட்களையும் தாண்டி வீதியோரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களும், வெள்ளை வான் கடத்தலில் பறிகொடுத்தவர்களும் தமது எதிர்காலம் தொடர்பாக சிந்திக்க முடியாத நிலையில் உள்ளனர்.

அரசாங்கங்கள் இதுவரை எவ்வித நீதியையும் அவர்களுக்கு வழங்கவில்லை. அவர்கள் தமது எதிர்ப்பினை பல்வேறு வடிவில் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் உணர்வினையும் மனவேதனையும் உணர்ந்து அரசியல் தலைவர்கள் என்ற வகையிலும், அரசியல் கட்சிகள் என்ற வகையிலும் அவர்களின் கருத்தியல் செயற்பாடுகளுக்கு நாம் தலைவணங்குகின்றோம்.

எம்மீதும் அவர்கள் பல்வேறு எதிர் செயற்பாடுகளை வெளிப்படுத்திய போதும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாம் மௌனமாக இருந்துள்ளோம்.

கடந்த ஆட்சியில் கட்டிக்காக்கப்பட்ட ஜனநாயக வழிமுறைகள் தற்போதைய ஆட்சியாளர்களாலும், அவரகளின் ஆதரவாளர்களாலும் சிதைக்கப்படுவதை எமது மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதுடன், இவ்வாறான வன்முறைகளை கையில் எடுப்பவர்களுக்கு மக்கள் நல்லதொரு பாடத்தினை புகட்ட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.