ஆழமான நேசிப்புக்குரிய நாயகனாக தியாக தீபம் திலீபன் விளங்குகிறார் – அ.மயூரன்

இந்த உலகமானது மனித சிந்தனைகள், நம்பிக்கைகள், கோட்பாடுகள் , சித்தாந்தங்கள் , வேதாந்தங்கள், தத்துவங்கள் , இலக்கியங்கள் ஆகியவற்றைப் பெரும் குவியல்ககளாகக் கொண்ட கருத்துலகமாகும்.

இக்கருத்துக்களுக்கு இருப்பும், உறுதியான பொருளியல் வாழ்வுமுண்டு. இக்கருத்துக்கள் மனிதப் பண்பாட்டிலிருந்து பிறக்கின்றன. மக்கள் சமூகத்தின் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற சக்திகளாயும், இயங்கு போக்குமுண்டு. இந்தவகையிற்தான் தமிழ்ச் சமூகத்தில் திலீபன் என்ற ஒரு தனி மனிதனுடைய தீர்க்கமான கருத்துக்களும், இலட்சியமும் தமிழ்ச்சமூக ஆழ்மனக் கருத்துக்களாக நிலைத்திருப்பதை இன்று அவதானிக்க முடிகிறது.

மனித வரலாற்றின் வாழ்வியல் போக்கில் பல நிகழ்வுகள் திரும்பத் திரும்ப நிகழும், சில நிகழ்வுகளின் நினைவுகளும் அதன் வலிகளும் சமூகவியலில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும்.

அத்தகைய ஆழமான தாக்கங்கள் அச்சமூகத்தின் ஆழ்மனதில் நிலைபெற்று, அவை பின்பு நம்பிக்கைகள் , ஐதீகங்கள், ஆன்மீகமாக நிலைத்து விடுகின்றன. தமிழிலே ‘‘நம்பிக்கை தான் வாழ்க்கை” என்று ஒரு பழமொழி உண்டு.

அந்த நம்பிக்கை மனித நடத்தைகள் ஒவ்வொன்றிலும் ஆழமாக இருக்கின்றபோது மனித செயற்பாடுகள் வெற்றிகரமான பாதையில் வேகமாக முன்னெடுக்கப்படும்.
ஒருவர் பற்றிய ஆழமான பக்தி, விசுவாசம், நம்பிக்கைகள், கடவுள் ஆன்மீகம், என்ற பரப்புக்குள் வைத்து ஒரு சமூகத்தின் பொது மனப்பாங்கு ஆகிறது.

இத்தகைய ஈழமக்களின் ஆழமான நேசிப்புக்குரிய நாயகனாக தியாக தீபம் திலீபன் விளங்குகிறார் என்பதை திலீபனின் தியாக வேள்வி நடந்த நாட்களில் நிகழ்கின்ற சம்பவங்கள் கடந்த 33 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு வகையான தமிழ் மக்கள் எழுச்சிகள், எதிர்பாராத சாதக நிகழ்வுகள் நடந்து வருவதை அவதானிக்க முடிகிறது.

இந்த வாரம் தமிழ் ஊகச் செய்திகளை பாருங்கள்,

திலீபத்தின் தியாகம் கனதியானது பிளந்து கிடந்த தமிழரசியல் சக்திகளை ஓர்முனையில் கூர்மையாக்கி நிறுத்தியிருக்கின்றது.

பாராளுமன்றிலும் இளங்கலைஞர் அரங்கிலும் நாளை மறுதினம் செல்வச்சந்நிதியிலுமென பலதரப்பினரையும்ஒருமைப்படுத்தி வலிமைப்படுத்தவுள்ளது.

கயேந்திரகுமாருக்காக சுமந்திரன் பாராளுமன்றில் எழுந்து நின்றார் என்றால் அது கயேந்திரகுமார் மீது கொண்ட அன்பாலல்ல திலீபத்தின் தியாகத்தின் பெறுமதியை உணர்ந்ததால்.

மாவையர் தலைமையில் இளங்கலைஞர் அரங்கில் எல்லோரும் கூடினார்கள்கள் என்றால் காரணம் திலீபத்தின் தியாகம்தான்.

இளைஞர்களையும் புரட்சிக்கு தயார்படுத்தி நிறுத்தியிருப்பதும் உலகின் உன்னதமான திலீபத்தின் உயிர்த்தியாகம்தான்.
சந்நிதியில் மாவை தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் உண்ணாவிரதம்!

வவுனியாவில் இருந்து நல்லூர் வரை தியாகதீபம் திலீபன் நினைவாக நடைபயணத்திற்கான ஏற்பாடு

தியாகி திலீபன் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டமையை எதிர்த்து எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மற்றும் கிழக்கில் பூரண கர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

யாழில் கூடிய தமிழ்த் தேசிய அணிகள் தியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் தொடர்பில் நேற்று மாலை கலந்துரையாடியிருந்தன.
தியாகி திலீபன் நினைவேந்தல் தடையினால் தமிழ் தேசிய கட்சிகள் எடுத்துள்ள தீர்மானம்…

நினைவேந்தல் தடையை எதிர்த்து 26ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம்; 28ஆம் திகதி வடக்கு கிழக்கு முழுமையாக கதவடைப்பு!

இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் தீர்மானத்திற்கு அமைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

batti 2 ஆழமான நேசிப்புக்குரிய நாயகனாக தியாக தீபம் திலீபன் விளங்குகிறார் - அ.மயூரன்தமிழ்தேசிய அரசியல் பரப்பில் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் கூடி ஒருமித்த அழைப்பாக தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இச்செய்திகளுக்கு பின்னால் உள்ள பொதுமனப்பாங்கு—

இதனை திலீபனின் ஆத்மாவின் அமானுஷ்ய சக்தியால் நிகழ்வதாக சாதாரண மக்கள் வலுவாக நம்புகின்ற நிலை தோன்றியிருக்கிறது. இதனை ஆழமாக உற்றுநோக்கி ஆராய்ந்தால் பெருமளவு உண்மை பொதிந்து கிடக்கிறது.

அதற்கான காரணங்களை சமூகவியல் சார்ந்து , உளவியல் சார்ந்து ஆராய்ந்த போது திலீபனை தமிழ் மக்கள் எந்தளவு தூரம் ஆழமாக நேசித்தார்கள் என்பதும் அந்த நேசிப்பு அவன் மரணத்தின் பின்னால் தீவிர பக்தியாக மாறி இருப்பதையும், இந்த அளவுகடந்த பக்தியின் வெளிப்பாடு தான் திலீபனின் தியாக நாட்களில் மக்களின் ஆழமான விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் அந்த நாட்களில் அடிமனத் தூண்டல்களாக எழுந்து ஒருமித்த கருத்துக்களை தோற்றுவிக்கின்றன.

இங்கே பல்வேறு கருத்துடையவர்கள் அந்தக் காலத்தில் அவர்களுடைய கருத்துக்களில் மாற்றங்கள் செய்வதை அவதானிக்க முடிகிறது. இவையெல்லாம் தமிழ் சமூகத்தின் ஆழ்மன விருப்பங்கள் வழிபாடுகளாக மாறுவதைச் சமூகவியலாளர்கள் நோக்குகின்றனர். எனவே இத்தகைய பக்திக்கும் நேசிப்பிற்கும் உட்பட்டு இருக்கும் ஒரு மனிதனின் இலட்சியங்களை மக்கள் நிச்சயமாக காவிச் செல்வார்கள்.

எனவே அத்தகைய நாட்களில் நடைமுறையில் அரசியலில் ஈடுபட்டு இருப்பவர்கள் இந்த சமூகவியல் உண்மைகனைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் இன்றைய காலச் சூழலுக்கு பொருத்தமான வெகுஜன போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

அதற்காக வெறும் ஒன்றுகூடல்களையும் அஞ்சலியையும் செய்திவிட்டு காலம் கடத்தாமல் செயற்பாட்டு அணிகளை உருவாக்க வேண்டும். காலம் தாமதிக்காது உடனடியாக மக்களை களத்தில் இறக்கி செயற்பாட்டில் ஈடுபடவேண்டும். “அவ்வப்போது ஏற்படுகின்ற வாய்ப்புக்களை கையாளுகின்ற கலைதான் அரசியல்” எனவே இருக்கின்ற வாய்ப்புக்களை சரிவர கையாண்டு இலக்கை நோக்கி முன்னேற வேண்டும். சிறிய வாய்ப்புக்களையும் தவறவிடாமல் தமிழ் அரசியல் தலைமைகள் அவற்றைக் கையாளவேண்டும்.

இன்றைய அரசியல் சூழலில் தமிழ் தலைமைகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் திடீர் ஒற்றுமை , பரஸ்பர ஒத்துழைப்பு இவையெல்லாம் கால தாமதத்தின் பின் நிகழ்ந்தாலும் இதனையே இப்போது சரிவர கையாள வேண்டும். இத்தகைய மனநிலை தேர்தல் காலங்களில் ஏற்பட்டிருந்தால் சிங்கள-பௌத்த பேரினவாதத்திற்கு துணை போகின்ற அங்கஜன் போன்ற உதிரிகள் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

ஆயினும் கடந்த காலங்களை நினைத்து ஏங்குவதைவிட எதிர்காலத்தில் எதை செய்ய வேண்டுமோ அதைச் செய்வதே இன்றைய காலத்தின் தேவையாகும். இன்றைய சூழ்நிலையில் தமிழ் தலைமைகள் ஒருங்கிணைந்து திலீபனின் முதல் இரண்டு முக்கிய கோரிக்கைகளான

1)திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்தல் ,

2)தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்தல்.

என்ற இரண்டு கோரிக்கைகளை முன்னிறுத்தி தாயக பரப்பெங்கும் தீவிரமான வெகுஜன போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். இந்த வெகுஜன போராட்டங்கள் தாயகப் பரப்பையும் தாண்டி சர்வதேச கவனத்தை ஈர்க்க தக்க வகையில் சிங்களத்தின் தலைநகரிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அத்தகைய போராட்டங்கள் மூலம்தான் இன்று ஏற்பட்டிருக்கும் தமிழர் தாயகத்தின் சிதைவையும் சீரழிவையும் தடுக்க முடியும் இதனை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களிலாவது தமிழ் தலைமைகள் தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் இதயசுத்தியுடன் செயற்படுவதே தியாக தீபம் திலீபனுக்குச் செலுத்தும் உயர்ந்தபட்ச அஞ்சலியாக அமையும்.