ஆரையம்பதி தீர்த்தக்கேணியில் குளித்த இளைஞர்கள் மூவர் பலி

82

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் உள்ள தீர்த்தக்குளம் ஒன்றில் குளித்துக்கொண்டிருந்த போது காணாமல்போன மூன்று இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுக்கேணி தீர்த்தக்கேணியில் அப்பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் குளித்துக்கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது குளத்தின் சகதிப்பகுதிக்குள் நான்கு இளைஞர்கள் சிக்கியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் மேற்கொண்ட முயற்சியினால் ஒருவர் காப்பாற்றப்பட்ட அதேவேளையில் மூன்று பேர் காணாமல் போயிருந்தனர்.

குறித்த குளத்தில் நீர்மட்டம் அதிகமாக காணப்பட்டதனால் தேடுதல் முயற்சிகள் மிகவும் சிரமமான நிலையில் குறித்த பகுதி இளைஞர்களினால் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மண்முனைப்பற்று பிரதேசசபையினால் குளித்த குளத்தில் இருந்து நீர்வெளியேற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளில் அப்பகுதிய சேர்ந்த பொதுமக்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் குறித்த மூவரின் சடலங்களும் இன்று பிற்பகல் மீட்கப்பட்டதுடன் மீட்கப்பட்ட சடலங்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கள்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்கள் ஆரையம்பதி,செல்வாநகர் கிழக்கினை சேர்ந்த சு.தர்சன்(20வயது), கே.திவாகரன்(19வயது), எஸ்.யதுர்சன்(19வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் தர்சன் திருமணம் முடித்து நான்கு மாதங்களே கடந்துள்ள நிலையில் இத்துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மூன்று இளைஞர்களின் மரணம் காரணமாக மண்முனைப்பற்று பிரதேசம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை இந்த மீட்பு நடவடிக்கைகளில் இளைஞர்களும் மீனவர்களுமே ஈடுபட்டனர்.அப்பகுதிக்கு வந்த படையினரும் பொலிஸாரும் வேடிக்கை பார்த்து நின்றதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.