ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் கிடையாது; கே.வி.தவராசா

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அவ்வாறான கருத்துக்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள் ளமை தமிழ் மக்களின் மனதில் ஆறாத காயத்தையும் வேதனையையும் உருவாக்கியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. என இலங்கைத் தழிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி. தவராசா தெரிவித்தார்.

ஒரு தன்மானமுள்ள தமிழன் ஒருபோதும் யாருக்கும் சோரம் போகமாட்டான் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்துக்கு ஒரு வரலாற்றுக் காரணி இருக்கின்றது. அந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்துப் போராட வேறு வழியின்றி ஆயுதப் போரே முடிவாகியது. தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டுமின்றி பல்வேறு தமிழ் இயக்கங்கள் தமது மக்களின் விடிவுக்காக ஆயுதப் போராட்டத்துக்குள் தள்ளப்பட்டன.

எந்தவொரு மக்கள் போராட்டமும் முதலில் இயக்கரீதியில் ஆயுதம் தூக்கிய போராட்டமாகவும், பின்பு அதன் தலைவர்கள் அரசியல் நீரோட்டத்தில் கலந்துகொள்வது நெல்சன் மண்டேலாவிலிருந்து வடிவம் பெறுகின்றமை தவிர்க்க முடியாதது. அத்தகைய போராட்டங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணிவரை சிறந்த உதாரணங்களாக இருப்பதை சுமந்திரன் அறியாதவரா?

இத்தைகைய போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அவ்வாறான கருத்துக்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளமை தமிழ் மக்களின் மனதில் ஆறாத காயத்தையும் வேதனையையும் உருவாக்கியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கடந்த 08.05.2020 அன்று நேர்காணல் காணொளியில் – சுமந்திரன் வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தைத் தான்ஏற்றுக்கொள்ளப்போதில்லை கூறியுள்ளார். அத்துடன்தான் எந்தவொரு அரசியல் கைதிகளுக்கும் (முன்னாள் விடுதலைப்புலிகள்/ ஆதரவாளர்கள்) வாதாடவில்லை என்று கூறியதும், மக்கள் விடுதலை முன்னணிக்காக 1990ஆம் ஆண்டுகளில் வாதாடியதாகத் தெரிவித்ததும் வேடிக்கையானது.

இலங்கையின் தேசியக் கொடியையும் தேசியகீதத்தையும் தானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மட்டுமே ஏற்றுக்கொள்வதாக நேர்காணலில் அவர் கூறியமை கட்சியின் ஏனைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை வேறுபடுத்திக் காட்டப்படுவதை அவதானிக்க முடிகின்றது. தமிழ் மக்களின் விருப்பத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் நேர்மாறாக சுமந்திரன் செயற்படுகின்றார் என்பதுவெளிப்படையாகத் தெரிகின்றது.

அவருடைய கருத்துக்கள் தனிப்பட்ட கருத்தேயன்றி கட்சியின் கருத்து அல்ல எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கூறியுள்ளபோதும் சுமந்திரனுடைய கருத்துக்கள் தமிழ் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளின் குற்றவியல் வழக்குகளில் நான்கு தசாப்தங்களாக எனது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் அனைத்தையும் பொருட்படுத்தாது எந்தப் பாதுகாப்புமின்றி இந்த நிமிடம் வரையும் களத்தில் இருக்கும் நானும் சிங்கள மக்களுக்கு மத்தியில்தான் வாழ்ந்து வருகின்றேன். ஒரு கோழை போன்று ஒருபோதும் நான் எவ்விதமான கருத்தியலுக்கும் அடிபணிந்து தமிழர் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கும் விதத்தில் அல்லது கொச்சைப்படுத்தும் விதத்தில் சுயலாபங்களுக்காக ஒருபோதும் கருத்து வெளியிட நினைத்தது கிடையாது. ஒரு தன்மானமுள்ள தமிழன் ஒருபோதும் யாருக்கும் சோரம் போகமாட்டான்.

சுமந்திரன் தனது கருத்துக்களால் தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி இருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கட்சியில் ஒரு பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் நபர் தனது வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இத்தகைய கருத்துக்களினால் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் கட்சியின் நலனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே எனது பிரார்த்தனையாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.